Tuesday 8 March 2022

மகளிர்நாள் 2022 - பெண்ணெனும் பெருங்கடல்

 

அவள்,
பெருங்கடலாய்க் கிடக்கின்றாள்.

இளவெயிலில் கனகமென
மின்னியவள் முகங்கண்டு;
உள்ளம் பூரிக்க,
மடியமர்ந்து மனம் மகிழ்ந்தீர்!

கால் நனைத்து, கைகொட்டி,
களிப்பேருவகை கொண்டீர்!

முந்நீர் துழாவி வஞ்சி வலித்து
தண்ணீர் மேற்சென்று
தரைகண்டு  அகம் சிலிர்த்தீர்!

முன்னிரவின் மெல்லொளியில்
ஆடைதொட்ட மணல்தட்டி
வீடு சேர்ந்தீர், கண்ணயர்ந்தீர்!

ஓயாது அலையடிக்கும்
கடலின் உள்ளம் உணர்ந்திட,
ஒரு நாளேனும்
உள்ளத்தில் எண்ணினீரோ?

தண்ணென்ற தரையடியில்
தகிக்கும் எண்ணற்ற
எரிமலைகள் நிலையேதும்
எண்ணத்தில் விரித்தீரோ?

கரையெல்லாம் மாந்தர் நின்று
கரைத்துவிட்ட பாவமெல்லாம்
ஆறுகள் சுமந்துவந்து
அடிமடியில் சேர்த்தபின்னும்,
வெண்ணுரையாய்ச் சிரிக்குமவள்
உள்மனது அறிவீரோ?

பிறர் சேர்த்த உப்பெல்லாம்
தன்னுள்ளே தாங்கி நின்றும்
தரைகாணா தொலைவில்கூட
உண்ணும் நீர் வைத்திருக்கும்
தாய்மனது தெரிந்தீரோ?

அன்புடை உலகத்தீரே!

ஔவையின் விரல்கள் தொட
அரும் பண்ணில் பறை சிந்தும்
பெரும் பாட்டாய்
உலகு கவ்வும் உளப்பாங்கே
பெண்மை, என்ப!

நற்றமிழை நானிலத்தும்
சுற்றிவரச் செய்த மூத்தோர்
நாவாய் சுமந்த நற்குணமும்
பெண்மை என்ப!

நெய்தல் நில மாந்தர்
நெடுங்காலம் இம்மண்ணில்
உண்ணக் கொடையளித்தப் பெருமனதும்
பெண்மை என்ப!

கடல்கோள் எனும் முறையால்
கவாடபுரமழித்தக் கடுஞ்சினமும்
பெண்மை என்ப!

பெண்ணே பெருங்கடலே!
உன்னிருப்பால் உலகிருக்கும்,
உன்னசைவால் உலகசையும்.


அலை சிதறும் நீரள்ளி
அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.
வாழி! வாழி!!