Monday, 27 July 2020

கவிமணி பிறந்தநாள் - 2020

(இணைக்குறள் ஆசிரியப்பா)

அகரமு தலி துணை யின்றி
பகரு மொழி யனைத் தும்
அனை வரும் அறிய - எளிய
தமிழ்ச் சொற்கள் கோர்த்து
இழியாப் பாக்கள் செய்து
மொழிக்கு அணிவித்த
மூத்த பாவலனே,
இட்டார்  பெரியோர்
இடாதார்  இழிகுலத்தோர் - என்று
நாலில் ஓர் ஔவை
நல்வழியில் சொல்லிச் சென்றார்
எண்ணத்தால் அதை நீட்டி,
மன்னு யிர்க்காக உழைப்பவரே – இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்
தன்னுயிர் போற்றித் திரிபவரே – என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா
என்ற உம் எழிலடிகள்
ஏற்றம் பெறும் நாளில் - நாஞ்சில்
மண் இன்னும் சிறக்கு மாமே.

Friday, 10 July 2020

பொருநராற்றுப்படை - சிறப்புப் பாயிரம்வளங்கெழு சோணாட் டகன்றலைப் பேரூர்,
வெளிக்களம், வலைநிழல் பரப்பிய மரத்திடை,
அழகுடைப் பாடினி அருகிரும் பொருநனை,
உழம்பில் மொழியின் தாமக் கண்ணி,
உள்ளின் விழைந்து உரைத்த பாட்டிடை,      - 5
ஆறலைக் கள்வர் தன்னிலை மறக்க,
சேறிடை மீனெனச் செயலற் றிருக்க,
ஊறில் பேரிசை நீரொடு சிதறும்,
மாறுகை யறிந்திடா மாண்மிகு இசையின்,
சீறியாழ் நுட்பம், செய்திறன் செப்பி,          - 10
பாடறிச் செவ்வாய், பண்கெழு மென்விரல்,
ஆடற் றெரிந்த அமைவுறுக் கணைக்கால்,
வேடகந் தூங்கும் விழுத்தகு மணிச்செவி,
மூடுமுகி லாடுமொரு மோடமெனக் கூந்தல்,
பாடுபுனைப் பாடினியின் பேரழகு நுவன்று,    - 15 
தன்வறன் இடும்பை, தான் பொறாது,
வன்மதில் சூழ்நல் மன்னவன் கோயில்,
நன்பெரு வாயில் எய்திய பின்றை,
தன்னறி அளவையின் தந்தநற் செல்வம்,
பின்னிலை வாராது, பேணுதற் சொல்லி,     - 20
வேல்கொள் முருகன் வினைபடு சீற்றம்,
கால்வழிக் கலித்த கரிகால் வளவன்,
பால்மடி மறவா ஆளியின் குருளை
சால்புளிச் சாய்த்த வேழமென, இருவர்,
தோல்வி யணிய தொடுத்ததும் பகன்று,       -25
பாணரும், பொருநரும், நூலறி புலவரும்,
வாணுதல் விறலியும், வண்டமிழ் கூத்தரும்,
பேணுதல், ஊணுதல், காணுதல், கழிந்து,
நீணுதல் காலையவர், காலின் ஏழடிப்பின்,
ஆணுறச் சென்றுமீள் முறையுளி விளம்பி,   - 30
நாட்டுச் செழிப்பும், நானிநில வாழ்க்கையும்,
கோட்டு நிறைக்கும் களமர் உழைப்பும்,
பாட்டுச் செருக்கில் ஆலும் மஞ்ஞை
காட்டிச் சென்ற கவினுறு இயற்கையும்,
ஊட்டுஞ் சோறெனப் பண்ணொடு சாற்றி,     - 35
பண்டம் மாறவும், பல்பொருள் நுகரவும்,
பண்ணும் மண்ணும் பல்வழி மாறியும்,
கண்ணென நாடு காத்திடும் செம்மையின்,
நுண்ணறி செங்கோல், நுரைபெரு காவிரி,
பண்பில் காலையும் பாய்ந்ததும் மொழிந்து   - 40
ஊனொடு குருதி உறையும் தன்மையின்
சோணாடு புரக்கும் காவிரிச் சிறப்பின்,
காணருங் காட்சியைக் கண்முன் நிறுத்தும்,
சேணவி செறிந்த பொருநராற் றுப்படை,
வாணா ளுக்குள் வாசித்தறி வீரே.          -45