Wednesday 31 October 2018

தமிழகப் பெருவிழா


  • பன்னிருவர் இன்னுயிரைச்

    சுட்டுப் பொசுக்கி, அவர்

    மன்னுடலும் தாராமல்

    மரமூட்டில் கரியாக்கி,

    வன்கொடுமை செய்த

    வரலாற்றை மறவோமே.

    தனியே கிடந்த

    தமிழ்நிலத்தின் குமரிமகள்

    தாய்வீடு அடைந்த நன்னாள்

    இன்றெனவே மகிழ்வோமே.

    ஆட்சியில் அன்றிருந்தார்

    அதன் பின் அமர்ந்திருந்தார்

    என்றெவரும் கேளாமல்,

    குரங்கு கடித்துவைத்த அப்பத்தின்

    குறும்பங்காய்

    துண்டென இறுதியில் யாம்

    துய்த்திடக் கிடைத்த

    நன்னாடு வாழியவே.

     

Tuesday 30 October 2018

தீட்டு


  • என்ன தேடுகிறாய்?

    உன்னைப் போலொருத்தி

    உள்ளே கிடப்பாளோ? என்றா,

    உண்ணும் உணவேதும்

    ஒரு கை அளவேனும்

    இன்று கிடைத்திடுமோ? என்றா.

    ஐயோ !!!

    உன் காலடியில் கிடக்குமந்த

    குப்பை நடுவினிலே எம்மனது

    குறுகிக் கிடக்குது பார்.

    தட்டித் தூக்கிவிடு, எம்

    தலைக்கனம் அழித்துவிடு.

    உன்கை பட்டேனும்

    ஒழியட்டும் எம் மனதின்

    பிறர்க்குதவா தீட்டு.

     

Saturday 27 October 2018

யாருமின்றி...


அம்மாவின் அன்பு,
தம்பிக்கு பணி அமர்த்தல் கடிதம்,
தங்கை சூல்கொண்ட சேதி,
வெளிநாட்டு மாமன் அனுப்பிய
மகளின் புகைப்படம்,
ஊருக்கே வராத பெரியப்பாவின்
உறவு விசாரிப்புகள்,
ஆனந்தவிகடனுக்கு அனுப்பிய கவிதை,
கறுப்பு மையில் அச்சிடப்பட்டு யாரோ
காலமான செய்தி,
கறுத்தபசு ஈன்ற கன்றுக்குட்டிக்கு
நெத்திச்சுழி இருக்கும் தகவல்,
புதிரை அவிழ்த்தால் புரியும் காதல்,
ஒடுக்கத்து வெள்ளிக்கிழமை
திருச்செந்தூர் திருநீறு என
அத்தனையும் இழந்துவிட்டு
அனாதையாய் நிற்கிறது அஞ்சல்பெட்டி.
கையடக்கத் தொலைபேசிக்குள்
காணாமல் போய்விட்டது காலம்.



Wednesday 24 October 2018

ஆகமம் என்பது...

(2-1-2016  அன்று திருச்சிக் கலை இலக்கியப் பேரவையில்
"அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆகிட உச்சநீதிமன்றத் தீர்ப்பு
தடையா? எனும் பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் என் பாவீச்சு)
-------------------------------------------------------------------



 
ஒளியும் காலமும் ஒருங்கிக் கலந்து
வெளியிடைச் செய்த வெவ்வேறு கோள்களில்,
வளியும் வெப்பமும் வரம்பொடு நிறைந்து
களிப்புடன்  உயிர்கள் கலந்துறை மண்ணில்,
மலை முகடுகளில் மாந்தனாய்ப் பிறந்து
முல்லையும் குறிஞ்சியும் முதல்நிலைக் கொண்டு,
ஓடும் நீரின் ஒருவழிப்பாதையில் நடைகொண்டோடி
மலையிறங்கி மருதம்புகுந்து நதியடைந்து நாகரிகம்கற்று
கடலறிந்து கட்டுமரமேறி உலகடைந்து உயிர்பெருக்கி
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப
நதியடைத்து அணைகள் செய்து
ஏரிபெருக்கி நீர்வளம் காத்து,
வெள்ளம் புயல்வந்து வீடழிக்கக் கண்டு
இயற்கைச் சீற்ற இயல்பினை யறிந்து
பாதுகாவல் படிநிலையுயரக் கோயில்கள் செய்து,
உண்ணவும், மறுபடி உழவர் விதைக்கவும்
தானியம் சேர்த்து ஆவினம் காத்து
மக்களைக் காவல்செய் மன்னவன் ஆண்ட
கோயில்கள் சொன்னது
ஆகமம் என்பது அறிவின் பயனே”.

காடலைந்த பழந்தமிழன்
பூவறிந்து காயறிந்து
குணம்நாடிக் குற்றமும்நாடித்
தம்மாந்தர் நோயறிந்து
அதுதணிக்கும் வழியறிந்து
உடலறிந்து உளமறிந்து
அதையியக்கும் பொருளறிந்து
செய்துவைத்தக்
கொண்முடிபு சொன்னதிங்கே
"ஆகமம் என்பது அறிவின் பயனே."

பன்னீ ராயிரம் ஆண்டுகள் தாண்டியும்
முன்னீர் நடுவே முழுகிய சுவரும்
ஆதிச்ச நல்லூர் மண்பானைக் கழுத்தும்
சிந்து வெளியின் சிவலிங்க வுருவமும்
கொடுமணல் காட்டும் உற்பத்தி நிலையமும்
காவிரி கண்ட கல்லணைக் கட்டும்
கீழடி ஆதனின் ஓரிலை வேலும்
ஆரியம் தொடாத அனைத்தும் சொன்னது
"ஆகமம் என்பது அறிவின் பயனே."

ஞாயிற்றுச் செலவும் பரிப்பும் மண்டிலமும்
வளிதிரிதரு திசையும் வறிதுநிலைஇய காயமும்
விண்பார்த் தளந்து மன்னவன் தன்னிடம்
இயம்பும் பார்ப்பா னென்றொரு பதவியும்,
அவ்வுரை கேட்டு அமைச்சர்கள் கலந்து
விண்ணும் மண்ணும் பேசும் மொழிகள்
உண்ணு முணவை உற்பத்தி செய்தற்கும்
மன்னு முயிர்கள் மறையாமற் காத்தற்கும்
மாறு மியற்கை மறவா திருக்க,
நாளுந் திங்களும், நன்னாள் விழாக்களும்
கூறி வைத்துச் சென்ற எம்முன்னோர்
கூரறிவு சொன்னது,
"ஆகமம் என்பது அறிவின் பயனே."

குறிஞ்சியின் தலைவன் குமரியின் முதல்வன்
முதற்கழக வேந்தன் வழிபடு முருகன்,
சேந்தனாய்ச் சிவனாய்ச் செவ்வேளாகி
சிவனியம் என்று சிறந்ததுவே பின்னர்
மாலியம் பிறந்து வளர்ந்ததுவே.
வேள்வி மதங்கொண்டு நாடோடி வந்தவர்கள்
இவ்வறிவின் சிறப்பறிந்து இவரோடு சேர்ந்துவிட
வேதத்தி லில்லாத வுருவ வழிபாட்டை
வேள்வியில் பிறந்ததென வீதிதோறும் சொல்லிவைத்தார்.

ஒற்றைச்சிவமே படைத்தல் காத்தல் அழித்தல்,
மற்றை மாலும் அத்துணை நிற்க,
பிரம்மனைப் படைத்துப் பேரெழுதிக் காட்டியும்
எந்தமிழ் மாந்தர் ஏற்றிட வில்லை,
அதனா லன்றோ, பிரம்மன் றனக்குக்
கோயிலு மில்லைக் கும்பீடு மில்லை.

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
செந்தமிழ்ப் பாட்டன் தொல்காப்பியன் சொன்னமொழி,
வேள்வி மதத்தின் வேரிடை வைக்கையில்
வீழ்ந்து படுமே அன்னவர்க் கதைகள்.
மாந்த ரியலும் மறுதலித்திடுமே அவர்தம்
தெய்வப் பிறப்பும் முத்திருமேனிப் புரட்டும்.

கொலைவேள்வி சிறுதெய்வம் கொண்டிருந்த ஆரியமே,
தீவளர்த்து திறையளித்து வழிபட்ட வோரினமே,
உளிபிடித்துச் சிலைசெய்யா உம்கைகள் எவ்வாறு
சிலைபிடித்துச் சேவைசெய்யும் உரிமை கேட்கும்.
தொன்மண்ணாம் எம்மண்ணில் தோன்றிய சைவத்தில்
சமற்கிருத பாடல்களில் சமைந்திடுமா ஆகமங்கள்?
உங்கள்மொழி பிறக்குமுன்னே உயர்ந்தெழுந்த கோபுரத்தில்
சிலைசெய்த ஆகமந்தான் சாத்திரங்கள் ஆகிடுமா?

கடல்கொண்ட குமரிநாடு கண்டுவைத்த உடற்கூறும்,
உளமறிந்து உடலடக்கும் உலகியலின் ஒப்புரவும்,
தெளிந்தறிந்து வீடடைய அன்பும் அறிவுமென
உண்மைசொன்ன தமிழர்நெறி உபநிடதம் ஆகிடுமா?

உறையும் உணவும் தேடியலைந்தீர், எம்மக்கள்
அறிவும் அறனும் அளந்துகண்டீர், மன்னர்தம்
முந்தியல் பேதமை கொடைமடம் கண்டீர்,
அண்டிப் பிழைத்தீர், அருங்கொடை பெற்றீர்,
பின்னர் நடந்தவை உலகம் அறியும்.
கன்னல் தமிழ்ச்சொல் கருவறை இழந்தது.
கடிமரமென்ற ஆள்குடிச் சின்னம் கொடிமரமானது.
உருவம்வடித்து உரமேறிய கைகள் தீட்டெனப்பட்டது.

வாசகம் சொல்லி வணங்கிய நாவும்,
தேவாரம் பாடி கூப்பிய கைகளும்,
பாசுரம் படித்துப் பழகிய உள்ளமும்,
படிகளில் நின்று பரிதவிக் கின்றன.

வேள்விசெய் ஆரியமே வேண்டுதல் இல்லையிது,
பாட்டன் கோயில்கள் எம் படிநிலை உரிமை.
"ஆகமம் என்பது அறிவின் பயனே"
வானின்று வீழ அது மழைத்துளியல்ல,
வேள்வியில் விளைந்த விளைபொருள் அல்ல,
ஆயிரமாயிர ஆண்டுகள் எம் இன மாந்தர்
அறிவின் பயனே.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
24/10/2018