Tuesday 31 March 2020

கைகவர் முயக்கம் - ஔவையார்


செங்கணை நடந்து கொண்டிருக்கிறான். பகல் தாண்டிய வேளை. கிழக்கே தோன்றிய கதிரவன் மெல்ல ஊர்ந்து உச்சிக்கு ஏறிவிட்டான். ஏதோ ஒரு வேலை நிமித்தமாக நெஞ்சு நிறைந்த காதலி, எயிற்றியைப் பிரிந்து வந்து கொண்டிருக்கிறான். என்ன செய்வது வேலை நடந்தாக வேண்டுமே. அவளும் கூடவே வருகிறேன் என்றுதான் சொன்னாள். ஆனால், கோடையின் வெப்பத்தில் பாலையாய்த் திரிந்துகிடக்கும் இடங்களைக் கடந்து அவளையும் அழைத்துக் கொன்டு செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. "சீக்கிரம் வருகிறேன், அதுவரை அவளைப் பார்த்துக் கொள்" என்று தோழியிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

செங்கணை செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்ற எயிற்றியின் கண்களில் மெல்ல நீர் எட்டிப்பார்க்கிறது. ஊர் எல்லையில் அவன் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டே நிற்கிறாள். கண்கள் மாரியெனப் பொழிகின்றன. அருகில் நின்ற தோழி அவள் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். "அழாதே.. அவன் விரைவில் வந்துவிடுவேன் என்று சொல்லித்தானே செல்கிறான். கலங்காதே" என்று காதருகில் சொல்கிறாள். அதற்கு மேல் அவளாலும் பேச இயலவில்லை. எயிற்றியின் கவலை இவளையும் வாட்டுகிறது. மெல்ல அவளது கண்ணீரைத் துடைக்கிறாள். அழுகையிலும் மெல்ல முறுவல் பூக்கிறாள் எயிற்றி. "நான் அவர் போய்விட்ட கவலையில் அழவில்லையடி பெண்ணே"...

"பிறகு எதற்கு இவ்வளவு கண்ணீர்?"

"நம் ஊர் கடந்து சிறிது தொலைவு சென்றவுடன் கடினமான இடங்களை அவன் கடக்க வேண்டிவரும். இப்பொழுது உச்சிக்கு ஏறிவிட்ட சூரியனை நெருப்பு போன்ற செந்நிற வட்டம் சூழும். தரையிலிருந்து அலையென வெம்மை மேல் நோக்கி எழும்பும். அனல் பறக்கும் அந்தக் காட்டிடையே இலைகளில்லாமல் வெறும் மலர்கள் மட்டுமே கொண்ட இலவமரங்கள் நின்று கொண்டிருக்கும். வழக்கமாகச் சட்டென்று மொட்டுகள் மலர்ந்து விடுகிற இலவமரங்கள் செந்நிறத்தில் பூத்துக் கிடக்கும்.  அந்த பாலை போன்ற இடங்களை நானும் அறிவேன்"

"எப்படியடி?"

"முன்பு ஒருமுறை அதைக் காணவே இருவரும் சென்றோம். இன்று என்னவோ என்னை விட்டு விட்டுச் சென்று விட்டான்"

"விரைவில் வருவானடி.. கலங்காதே"

"கலங்கவில்லை பேதையே. கார்த்திகைத் திங்களில் ஆரவாரத்துடன் ஏராளமான பெண்கள் கூட்டம் நீண்ட வரிசையில் எடுத்துச் செல்லும் விளக்கின் சுடர் வரிசையைப் பார்த்திருக்கிறாயா?, அது போல இருக்கும் அந்த இலவமர வரிசை. அருகிலே இருக்கும் ஆழமான குளம் முற்றிலும் நீர்வற்றி, வெகுநாள்களாகக் காய்ந்ததில் உள்புறமெல்லாம் துகள் பறக்கத் தொடங்கியிருக்கும். அதைத் தாண்டிச் சென்றால் சிறிது தொலைவில் ஆறு ஒன்று இடைமறிக்கும். இப்பொழுது அதுவும் காய்ந்து தான் கிடக்கும். அவனுக்கு இந்த பயனிறந்துபோன காட்டில் என்ன மகிழ்ச்சி இருக்கும். பைத்தியக் காரன், அந்தக் காட்டிலே என்னோடு கழித்திருந்தால்..!"

"கழித்தால் என்ன கிடைக்கும். வெம்மை குறைந்துவிடுமா என்ன?"

"அடி போடி.. பேதையே. கச்சை விலகிய பெண்போலக் கிடக்கிற அந்த ஆற்று மணல்வெளியில், ஒரு அடர்ந்த மரம் உண்டு. அதன் பருத்துப் பெருத்தக் கிளைகள் மணலில் புதையும் அளவிற்குத் தாழ்ந்து கிடக்கும். மெத்தை விரித்தாற்போன்ற நுண்மணல் திடலில், அந்தக் கிளைகளின் கொத்துக் கொத்தான மெல்லிய மலர்கள் விரிந்து கிடக்கும். நாங்கள் இருவரும் இணைந்து சென்றிருந்தோமானால், அந்த மலர்ப்படுக்கையில்; ஒருவர் மெய் இன்னொருவர் மெய்யில் புகுந்துவிட நான்கு கைகளும் ஓருடலுமாய் முயங்கியிருப்போம். கைகள் நான்கும் ஒன்றையொன்று கொள்ளையிட, அன்பும் காதலும் கொண்ட முயக்கம் பெற்றிருப்பான் அவன். பாவம் அது அவனுக்குக் கிடைக்கவில்லையே என்று நான் வருந்துகிறேன் பெண்ணே"

"அப்ப உனக்குக் கவலையே இல்லையா?"

"ம்... என்னை அழைத்துக் கொண்டு சென்றிருந்தான் என்றால், வறண்டு கிடக்கும் குளத்தைக் கண்டு வருந்தி ஓய்வின்றி நீர் சொரிந்து நிறைக்கும் மலர் போல நாளெல்லாம் அழுது நீர்சிந்தாமல் இருந்திருக்கும் எனது கண்கள். பாவம் அவை. நான் கவலையோடிருக்கிறேன் என்ற பழி இன்றி இமை புணர உறக்கம் கொண்டிருக்கும்.  என்ன செய்வது? அவன் போய்விட்டானே"

இப்படியொரு காதலியின் நிலைமையச் செந்தமிழில் செறிந்தச் சொற்கூட்டில் பாடியிருக்கிறார் ஔவையார். பாடல் கீழே.

அகம் - 11 - பாலை - ஔவையார்
==============================
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்/
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,/
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் /
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த /
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, /
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் /
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென, /
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் /
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,/
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் /
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர, /
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து/
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் /
அழுதல் மேவல ஆகி, /
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! /


அருஞ்சொற்பொருள்
====================
 உருப்பு - வெப்பம்
அவிர் - ஒளிர்வு
கலி - ஆரவாரம்
ஆயம் - மகளிர் கூட்டம்
மலிபு - மிகுதி, ஏராளமான
கயம் - ஆழமான குளம் (கசம்- குமரி வழக்கு)
பயம் - வளம், பயன்
தபு - இறத்தல்
கம்மென - கூடுதல், இணைதல்
வம்பு - கச்சு, ஆடை
சினை - மரக்கிளை
பயில் - ஏராளமான
இணர் - பூங்கொத்து
எக்கர் - நுண்மணல் திட்டு
கவர் - கொள்ளையிடுதல்
நயவர - அன்பும் காதலும் சேர
நிகர் - ஒளிபொருந்திய
கடுப்ப - போல
ஓ  - ஓய்தல், மூடுதல்
அல்கல் - நாள் (அல்லும் பகலும்)
படுகுவ - ஒன்றன்மேல் ஒன்றாக (உறக்கம்)

பொருள் :- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி



Wednesday 25 March 2020

காலவரையறையின்றி...

புனிதநூலாகவே இருந்தாலும்
தொட்டபின்
கைகழுவ வேண்டியிருக்கிறது.

கடவுளே வந்தால்கூட
ஐந்தடி இடைவெளியில்,
வாய்மூடித்தான்
அளவளாவ வேண்டியிருக்கிறது.

வழிபாட்டிடங்கள்
வெற்றுக் கட்டிடங்களாய்
நின்றுகொண்டிருக்கின்றன.

மரணத்தின் அச்சுறுத்தல்
மதங்களுக்கு
விடுமுறை விட்டிருக்கிறது.

எல்லாக் கடவுள்களும்
சமூகத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்,
காலவரையறையின்றி.

Friday 13 March 2020

காற்று மட்டுமே...

கதிரவன் மறைந்தாலும் மனிதக்
காலரவம் மறையாத பெருந்தெருக்கள்,
மேலிருந்து பார்த்தால்
வண்ணம் கண்ணுக்குத் தெரியாமல்
மறைத்துக்கொண்டு ஓடிய
ஊர்திகளின் கீழே
நீண்டு கிடந்த சாலைகள்,
இடையறாது இறைவனோடு
மனிதன் பேசிகொண்டிருந்த
வழிபாட்டிடங்கள்,
எங்கிலும்;
காற்று மட்டுமே கைவீசி நடக்கிறது.
தரை மெல்லக் கூன் நிமிர்க்கிறது.
கரியமிலவளியைப் பூசிக்கொள்ளாமல்
கண்சிமிட்டுகிறது வானம்.
சொந்த ஓசையெழுப்பிச்
சுழன்றோடுகின்றன ஆறுகள்.
இளைப்பாறுகிறது இயற்கை.
அணுக்குண்டுகளையே அச்சப்பட வைத்துவிட்டு
காற்றின் பாதைகளில் காத்துக்கிடக்கிறது
கொரோனா.

உரைகல்

பழந்தமிழின் பாட்டிசைத்துப் பகல்விழிப் போமெங்கள்/
பாவாணர்ப் பயிலரங்கைப் படைவீடாய்ச் செய்திடுவோம்/
பாராண்டத் தமிழினத்தின் பேராண்மை கொண்டுசெய்வோம்/
ஊராளும் மன்னவர்க்கோர் உரைகல்/


Wednesday 11 March 2020

மா.இராசமாணிக்கனார் பிறந்தநாள் - 2020

(நேரிசை ஆசிரியப்பா)

பள்ளி ஆசிரியப் பணியில் தொடங்கி
பல்கலைப் பேராசிரி யராய் விரிந்து
ஆய்வு நூல்களின் கொடு முடியென
அருமை நூலொன்று செய்து கொடுத்தவரே
பத்துப் பாட்டல்ல அது தமிழர்தம்
சொத்துப் பாட்டென்று சொல்லிக் கொடுத்தவரே
உண்மையின் மீது கொண்ட வேட்கையில்
ஊரெல்லாம் நடந்து வரலாறு தெளிந்தவரே
நெடுநுகத்துப் பகல் போல நின்று
தமிழ்த் தாத்தாவின் தவறையும் இந்தத்
தமிழகம் அறியச் சுட்டிச் சென்றவரே
உம்பணி ஒளித்து வைத்த கயவரும்
தன்னிழல் மீதே வீழ்ந்து மாய்ந்தார்
உம்மை அறிவார் இனி தமிழர்
தம்மை அறிவார் தமிழறிவார்
உய்த்தெழட்டும் உம் நினைவால் இனமே.


Monday 9 March 2020

கள்ளிப்பழக் கவிதை

வெயிலேற் றுக்கெட்டித் தடித்த தோல்
சுற்றிலும் நெருக்கமாய் முட்கள்
கொடும்பால், இருந்தபோதும்
தீஞ்சுவைப் பழம் தரும்
கள்ளியைப் போல
வாழ்க்கை அவ்வப்போது
இனிப்பாய்க் கவிதைகள் தந்து சிரிக்கிறதே

Saturday 7 March 2020

பெருமை கொள்கின்றன வரிகள்

மூக்கின்

ஒரு துளையில் காற்றோட்டமும்

மறு துளையில் போராட்டமும்

மூச்சாகிப் போக;

மூப்பும் பிணியும் மூட்டுவலியோடு

நொண்டி நொண்டி, பின்னே நடந்துவர,

முழுத்திறனோடு

முன்னே ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள்.

கோலமிட்டுச் சோறாக்கிக்

குழந்தை பேணிக் குடும்பம் காத்து,

பொதுவெளியில் மாந்தர்படும்

துயரம் பொறுக்காது,

பொழுது புலர்ந்ததும்

போராட்டத்தின் ஒளிக்கற்றைகள் தீண்டும்

முற்றம் கடந்து முன்னே வந்து

களப்பணிச் செய்தார்.



இவர்கள்,

அதிகாரப் பெருவெள்ளத்திலும்

அடிவேர் அசையாத நாணல்கள்.

கொடுங்காற்றிலும் குடைசாய்ந்துவிடாத

பெரு வேம்புகள்.

ஊர்நடுவே இளைப்பாறல் தரும்

ஆலமரங்கள்

கொல்லைப் புறத்தில்

உணவாய், மருந்தாய் நிற்கும்

முருங்கை மரங்கள்.

முதுகில் முள் சுமந்தாலும்

முகத்தில் நகை பூக்கும்

அருஞ்செடிகள்.



உம்மை அறிந்து

உம்பணி தெரிந்து;

பெண்குழந்தையொன்று பேசுவதாய்

என்னில் விளைந்த வரிகளுண்டு.

அதிலொன்றே இந்நாளில்

அன்புநிறை மகளிருக்கு உம்மொழியும்;

என்பங்கின் வாழ்த்துமாமே.



கேடுசூழ் நாடிதனை

ஊடாடிச் சீர்செய்வோம்.

கேளாச்செவி அனைத்தும்

கேட்கும்வரை குரல்கொடுப்போம்.

பாழாகும் சமுதாயம்

பார்த்து விழிமூடோம்.



மகளிர் நாள் - 2020




உலகம் வியந்த அதியனின் வாயிலில்
ஒருநாள் இசைத்தாள் அவள் பேரியாழ்
ஓசைகேட்டும் அவன் வந்தானில்லை.
வாயிலில் நின்றவன் கேட்டிடச் சொன்னாள்,
தன்னை அறியாதான் உன் தலைவன்
அன்றியும் என்னையும் அறியான்
நரம்பில் விரல்நிறுத்தி நல்லிசை முடிப்பேன்
எவ்விடம் இசைத்தாலும் எனக்குச் சோறிடுவார்
அன்றி இறந்து பட்டாலும்
என்பொருட்டு நில்லாது உலகு
என்றவள் நடந்தாள்; பின்னே,
அவள் பின்னே நடந்தது
ஆயுள் முழுவதும்  அதியனின் உலகு.
தடாரி அறைந்த தமிழ்ப்பெண் கைகளில்
தேறலின் குடுவை எடுத்துக் கொடுத்தான்.
ஊன்துவை அடிசில் ஊட்டி நின்றான்.
சுற்றம் மகிழ்ந்திட நெல்லும் பொன்னும்
சுற்றிக் கொள்ளப் பூவெனத் துணியும்
அள்ளிக் கொடுத்த அதியனைப் பாடிய
வண்டமிழ் உலகின் பெண்பேராளுமை
ஔவையின் தமிழ் கொண்டு
உலக மகளிர் வாழி! வாழி! என்போமே.