Tuesday 23 November 2021

அள்ளிக் கொடுத்த வள்ளுவர்


 

  =======================

 அள்ளிக் கொடுத்த வள்ளுவர்
 பாடல் பிறந்த கதை
=======================

ஒரு நாள் திருச்சிராப்பள்ளியிலிருந்து தோழர் தமிழ் இனியன் கைப்பேசியில் விளித்தார். சிறிது நேரம் நலம் உசாவியபின்,

"தோழர் மழை குறித்து பள்ளிகளில் சிறுவர் பாடும்படியான பாடல் ஒன்று எழுதுகிறீர்களா?" என்றார்.

"முயற்சிக்கிறேன்" என்றேன்.

"தோழர் கொஞ்சம் எளிய நடையில், எளிய சொற்களில் இருக்கட்டும்" என்றார்.

"புரிகிறது தோழர்" என்றேன்....

புரிகிறது என்று சொல்லிவிட்டேனே தவிர எப்படித் தொடங்குவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன்.

மழை என்றதும் வள்ளுவரின் நினைப்பு வந்தது. வான்சிறப்பு அதிகாரத்தின் பத்துக் குறள்களையும் விலக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் கூட அவர் மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கும் உவமை "மழை"யே. அவருக்கு மழைமேல் அத்தனை ஈர்ப்பு போலும். எனவே, திருக்குறளின் “வான் சிறப்பு” அதிகாரத்திலிருந்தே பாடலை எழுதிவிடுவது என்று முடிவெடுத்தேன். திருவள்ளுவரின் துணையோடு சிறுபிள்ளைகள் பாடும் பாடலை, இப்படித்தான் தொடுத்தேன்.
===================

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. ( குறள்:11 )

ஐயா தேவனேயப் பாவாணர் மரபுரை: வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை உலகிற்குச் சாவாமருந்து என்று கருதப்பெறுந்தன்மையது. உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறித்தலால் இங்கு இடவாகுபெயர். அமிழ்தம் என்றது சாவா மருந்தாகிய இருவகையுணவை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசிதகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இருமருந்து எனப்பெறும். அமிழ்தம் என்னும் சொல் சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும்.

அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம் "(மணி. 28: 116). அவிழ்து -
அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர்.

நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு, நீர்.

இந்தக் குறளே பாடலின் எடுப்பாய் அமைந்தது.

===================
மழையே மழையே வாவா வா
மண்ணுங் குளிர்ந்திட வாவா வா
அமிழ்தம் நீதான் உலகுக் கென்றே
ஐயன் வள்ளுவர் சொன்னா ரே
அவரது வழியில் நாளும் நின்றே
அழைத்தோ மிங்கே வாமழை யே.
===================

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (குறள்:12)

ஐயா தேவனேயப் பாவாணர் மரபுரை: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி - உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு - அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை - தானும் உணவாவது மழையே.

இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது.

இந்தக் குறளே முதல் தொடுப்பாய் அமைந்தது

=====================
நெல்லும் கரும்பும் தெங்கும் பனையும்
எள்ளும் பருப்பும் கம்பும் தினையும்
உண்ணும் அனைத்தும் உன்னால் விளையும்
தண்ணீ ராலே தாகமுந் தணியும்
உணவையுஞ் செய்தாய் உணவென வானாய்
உலகஞ் செழிக்க வாமழை யே.
=====================

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். (குறள்:14)

ஐயா தேவனேயப் பாவாணர் மரபுரை: புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உழவர் ஏரின் உழார் - உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார்.
சுழல்காற்று மழையைக் குறிக்கும் புயல் (Cyclone) என்னும் சொல் இங்குப் பொதுப்பொருளில் ஆளப்பட்டது. பசி உயிர்களை வருத்துதற்குக் கரணியங் கூறியவாறு.

இந்தக் குறளே இரண்டாவது தொடுப்பாய் அமைந்தது.

=====================
எங்களு ழவரு மேர்பிடித் தங்கே
மண்ணை யுழுது பயிரை வளர்த்து
கண்ணுங் கருத்தாய்க் காவலுஞ் செய்து
உண்ணும் யாவையு முலகம் பெறவே
விண்ணிலே செல்லும் மேகமு டைத்து
மண்ணில் பெய்வாய் மாமழை யே.
=====================

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. (குறள்:16)

ஐயா தேவனேயப் பாவாணர் மரபுரை: விசும்பின் துளிவீழின் அல்லால் - வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது - பின் அப்பொழுதே பசும்புல் நுனியையும் காண்பது அரிதாகும்.
'மற்று' விளைவு குறித்த பின்மைப் பொருளிடைச்சொல். ஆங்கே என்றது தேற்றமும் விரைவும் பற்றிய காலவழுவமைதி. புற்றலை என்பது புன்னிலம் என்றுமாம். ஒரு நாட்குள் முளைக்கும் புல்லும் இல்லையெனின், மற்ற மரஞ்செடி கொடிகளின் இன்மையைச் சொல்லவேண்டுவதில்லை. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற ஐவகையுயிர்களும் நாளடைவில் இராவென்பதாம். இழிவு சிறப்பும்மை செய்யுளால் தொக்கது.

குழந்தைகள் பாடியாடும் பாடலுக்கு இந்தக் குறளே முடிப்பாய் அமைந்தது.

=======================
உந்தன் நீர்த்துளி உடலில் பட்டால்
புல்லுங் கைகளை நீட்டிக் களிக்கும்
பூக்களுந் தலையை ஆட்டிச் சிரிக்கும்
புள்ளின மாயிரம் பாடல் இசைக்கும்
நாங்களும் நன்றா யாடிக் களிக்க
நல்லோர் சொல்போல் வாமழை யே
=======================

பாடலை யூடியூப்பில் பார்க்க/கேட்க இணைப்பைச் சொடுக்கவும்.


====================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
23-11-2021
====================