Wednesday 28 March 2018

பிள்ளைக்கறி ...

வேர்களில் வெந்நீரை
ஊற்றிவிட்டுக்
கையில் கூடையுடன்
கனிகளுக்குக் காத்திருக்கிறோம்.
பட்ட மரத்தின் சுள்ளிகள் கூட
நமக்கானதில்லை.
அட...
கோபத்தில் கூடையை
எறிந்துவிடாதீர்கள்.
நாளை
நம் பிள்ளைகளின் எலும்புகளை
எதில் பொறுக்குவது.



எனப்படுவது யாதெனின்...

பொய்கள்
சண்டையிட்டுக்
கொண்டிருக்கின்றன
தங்களில்
மெய்யான பொய்
எதுவென்று.

Tuesday 20 March 2018

மூழ்கிக்கொண்டிருக்கிற மொகஞ்சதாரோக்கள்



 அந்தப் பிணம் அநாதையாய்க் கிடந்தது. அதுவும்சந்திஎன்கிற ஊரின் மையமான பொது இடத்தில். பெரிய கட்டிடம் இல்லை அது. கற்களால் பெரிய மேடை போன்று எழுப்பப் பட்டு ஓடுகளால் கூரை வேயப்பட்டிருந்தது. இருபது இருபத்தைந்து பேர் அமரக்கூடிய இடம். அங்குதான் கிடந்ததுஅது”. ஆட்கள் சந்தியைத் தாண்டி போய்வந்து கொண்டிருந்தார்கள்.

சே.. ஒரு பயலும் இதுக்கொரு வழி பண்ண மாட்டெங்கானே
"இன்னைக்கு மத்தியானத்துக்குள்ள எடுத்துப் போட்டு, தெரு சுத்தி கிளிகெட்டி இழுத்து அதுக்கப்புறந்தா சாமி வாகனம் எடுக்கமுடியும்" கோசுப்பாட்டா அலுத்துக் கொண்டார். நிறையக் கவலை இருந்தது அவர் புலம்பலில்.
 .
நான்கு வருடங்களுக்கு முன் அந்த ஊரில் இப்படி யாரும் கவலையோடு பேசியதில்லை. எல்லாவற்றிற்கும் எல்லோரும் கைகோர்த்துக் கொண்டிருந்தார்கள். வயலில் உழவு ஆரம்பிப்பதிலிருந்து பெரியகுளம் நீர்ப்பெருக்கால் உடைத்துக் கொள்ளும் போது உதவுகிற வரை எல்லோரும் சேர்ந்தே எல்லாம் செய்தார்கள்

 
ரு அறுவடைக் காலத்தில் சிலர் வந்து அந்தச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்த நாளிலிருந்து ஊர் மாறிப்போனது.

ஒங்க ஊர்ல என்ஜினியரிங் காலேஜ் கட்டறதுக்கு கவர்ன்மென்ட் சாங்சன் பண்ணிருக்கு. ஊருக்கு கிழக்குப் புறம் தரிசு நிலங்களை வாங்கலாம்னு இருக்கோம்.” என்று அந்த சிலர் ஆரம்பித்த போது மக்களில் சிலர் கொஞ்சம் திணறினார்கள்.அங்கு எல்லோரும் படித்தவர்களல்ல. கொஞ்சம் கொஞ்சமாய் செய்தி புரிந்து நிறையப் பேர் கல்விப்பணிக்கென நிலத்தைத் தானமாகவே கொடுத்தார்கள்.
  
ஐயா எங்க ஊருக்கு ஒழுங்கா பஸ் விடச்சொல்லுங்க. சமயத்துல நாக்காமடம் வரைக்கும் நடக்கவேண்டியிருக்குஎன்று ஒருவர் சொன்னார்.

அதான் காலேஜ் வரப்போகுதே, அது வந்துற்றுன்னா எல்லாம் ஒண்ணொண்ணா வந்துரும். கவலையே படாதீரும். ஒங்க ஊரு எப்பிடி ஆகுதுன்னு பாரும்.” வந்தவரில் ஒருவர் சொன்னார்.

லாரிகளும், ஜீப்புகளும் வந்து வந்து போயின. கட்டிட வேலை ஆரம்பமாயிற்று. ஊரிலிருந்தும் ஆண்களும் பெண்களும் என நிறையபேர் கட்டிடவேலைக்குப் போனார்கள். அரசின் வளர்ச்சிப் பணியொன்று அந்த ஊரில் ஆரம்பமாயிற்று. கட்டிடப் பணிகளைப் பார்வையிட அதிகாரிகள் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

என்ன அண்ணாச்சி நம்ம ஆபிசருங்க பிளாஸ்க்குல காப்பிய எடுத்துட்டு வராங்க. அவ்வொளுக்கு பிரச்சனை இல்ல. நம்மளுக்கு ஒரு தேயில குடிக்கணும்னா ஒரு கட கூட இல்ல. என்ன எழவு ஊரோ.”

தேயிலய விடுடே சிகரெட்டு கூட நாரோயில்ல இருந்தே வாங்கிட்டு வரவேண்டிருக்கு. நல்ல ஊர கண்டுபிடிச்சாண்டே காலே..சு கெட்ட.”

இரண்டு ஓட்டுனர்கள் பேசிக்கொண்டது செங்கல் சுமந்து கொண்டிருந்த வேலப்பன் காதுகளில் விழுந்தது.

வேலை செய்த களைப்போடு புத்தனாற்றில் குளிப்பதுதான் எத்தனை சுகமானது. வேலப்பன் படித்துறையில் இறங்கும் போது சுப்பிரமணி இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டிருந்தான்.

என்ன சுப்பு சீக்கிரம் குளிக்க வந்துட்ட.”

இல்ல வேலப்பா தலையெல்லாம் ஒரே மண்ணயிருக்குடே. ரெம்ப நேரங் குளிச்சத்தான் அழுக்கு போகுது. அதான் சீக்கிரம் வந்துட்டேன். இந்தக் தணுப்போட போயி கடுங்காப்பி குடிச்சா சோக்காயிருக்கும்.”

சுப்பையா இப்பதான் ஒண்ணு ஓர்ம வருகுடே.”

என்னதுடே

இங்க கம்பெனிக்கு வண்டி கொண்டு வாராம்லா, அவனுகளுக்கு காப்பி கட இல்லையின்னு நம்ம ஊர்மேல கோவமாம்டே

தைக் கேட்ட சுப்பிரமணிக்கு உள்ளே ஒரு ஒளிவிட்டது. அவனும் சுசீந்திரம் பூதப்பாண்டிக்கெல்லாம் கட்டிட வேலைக்குப் போனபோது நிறைய டீக்கடைகளைப் பார்த்திருக்கிறான். ஒன்றிரண்டு முறை குடித்தும் இருக்கிறான். இப்பொழுது இங்கும் பெரிய கட்டிட வேலை நடைபெறுகிறது. நாளை வடசேரிக்குப் போய் தேயிலைத்தூளும் சீனியும் வாங்கி வந்துவிடவேண்டும். கூடவே பீடி சிகரெட்டும். சுப்பையன் மனதுக்குள் கணக்குப் போட்டான், தன் வீட்டின் படிப்புரை கடையாக மாறும் காட்சி அவனுள் ஓட ஆரம்பித்தது.

ரண்டு வருடங்களுக்கு முன் தரிசாய்க் கிடந்த நிலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் கட்டிடங்கள் வந்தாயிற்று. இந்த ஆண்டு முதல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் நடந்து விட்டது. ஒரு பானையும் நான்கைந்து கற்களைச் சேர்த்து வைத்த அடுப்புமாய் டீக்கடை ஆரம்பித்தச் சுப்பிரமணி இப்பொழுது பத்துப் பேர் அமருகிறமாதிரி ஓலைக் கூரை வேய்ந்திருந்தான். காற்றடிக்கிற ஸ்டவ்வும், ப்ரூ பாக்கெட்டும், காராசேவு, கேக் என நிரப்பியிருந்தான்.

மக்கா சுப்பையா ஒரு தேயில போடுடேகோசுப் பாட்டா நுழைந்தார். உள்ளே இருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார்.

மாமனும் மருமகனும் என்ன பேசிக்கிட்டிருக்கியோ

சும்மாதான் பாட்டா, நேரம் போகாண்டமா. அதான்முத்து பதில் சொன்னான்.

நாளைக்கு எறச்சகொளம் வண்டிப் பந்தயத்துக்குப் போறேளாடே

போணும் பாட்டா போணும்

சுப்பிரமணி தேயிலையைக் கொண்டுவந்து கோசுப் பாட்டா முன் வைத்தான். ஊரில் கருப்பட்டிக் காப்பி குடித்த நிறையப் பேர் இப்பொழுது தேயிலை குடிக்கிறார்கள். கடைகளில் சாப்பிடுவது இப்பொழுதெல்லாம் மரியாதைக் குறைவானதில்லை. நிறைய மாறிவிட்டது.

இவ்ளோ நேரமாச்சு இன்னும் இந்த பஸ்ஸ காணலியே. சே…” பாட்டா அலுத்துக் கொண்டார். பத்து மைல் நடந்து போனவர்கள் இப்பொழுது பேருந்து நிறுத்தங்களில் மணிக்கணக்காய்க் காத்துக்கிடக்கிறார்கள். அந்தக் கல்லூரிக்குப் பக்கத்து ஊர்களில் இருந்து வரும் மாணவர்களால் தான் இந்தப் பேருந்து வசதி. வெளியூர் மாணவர்களும் இருந்தார்கள். அவர்களில் சிலருக்கு விடுதி உணவு பிடிக்கவில்லை என்றச் செய்தியும் தேநீர்க் கடைகளில் கசிந்தது.

ன்று கடைத்தெருவில் சதீசு புதிதாய்மெஸ்ஒன்று திறக்கிறான். சினிமாப் பாடல்கள் ஸ்டீரியோவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எதிர் வரிசையில் சாப்பாட்டுக் கடை வைத்திருந்த முருகனுக்கும், பெருமாளுக்கும் யோசனை வந்தது. அவர்கள் ஓர் ஆண்டுக்கு முன் கடை திறந்தபோது போட்டிக்கு யாரும் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன் செல்லப்பன் வீட்டிலேயே கடை ஆரம்பித்ததும் இங்கு கூட்டம் குறைந்தது. இப்பொழுது சதீசு வேறு. இப்பொழுது இவர்கள் சம்பா அரிசி பொங்குவதில்லை. அதை வெளியூர் மாணவர்கள் விரும்புவதில்லை. பொடி அரிசி வாங்கவேண்டி இருந்தது. ஆண்டு முழுவதும் நெல் பயிரிடுதல் மட்டுமே தொழிலாகக் கொண்ட ஊரில், நாகர்கோவிலில் இருந்து அரிசி மூட்டை பேருந்துகளில் வந்து இறங்குகிறது. இப்பொழுதெல்லாம் பேருந்துகளில் யார் யாரோ வருகிறார்கள். வட்டார மொழி வழக்குடைகிறது. விதவிதமாய் முகங்கள், உடைகள். ஊரும் தன் முகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத் தொடங்கியது.

ந்திரனுக்கு நிறைய பேரைத் தெரிந்திருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இரண்டு வருடமாகத் தையல்கடை வைத்திருக்கிறான். நாகர்கோயிலில் வீடு. கல்லூரி ஆரம்பித்தது தெரிந்து இங்குக் கடை வைத்திருக்கிறான். கொஞ்சம் சுமாராகத் தைத்துக்கொண்டிருந்த நடுத்தர வயதுக்காரர் உருவர்  இவன் வருகையால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது ஊரறிந்தது.
ஊர் இளசுகள்
நிறையபேர் இப்பொழுது இவனிடந்தான் வருகிறார்கள். தீபாவளிக்கு இரவெல்லாம் கண்விழிக்க வேண்டியிருந்தது. இரண்டு பேரை நாகர்கோவிலில் இருந்து வேலைக்கு அழைத்து வந்திருந்தான். அடுத்த தீபாவளிக்குள் இரண்டு மிசின் வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணமிருந்தது அவனுக்கு. இங்கேயே ஒரு வீடும் பார்க்கவேண்டும். வீடுவேணும்னா டீக்கடை சுப்பிரமணியிடம் கேட்கச்சொல்லி தேனிபையன் ஒருவன் சொன்னது நினைவு வந்தது.

ந்தப் பையன் ஆஸ்டலில் இருக்கப் பிடிக்கவில்லை என்று சுப்பிரமணியின் டீக்கடையில் வைத்து ஒருநாள் பேசிக் கொண்டிருந்தான்.

அண்ணே ஏதாவது வீடு காலியா இருந்தா சொல்லுங்க

வாடகைக்கா?”

ஆமாண்ணே... வீடு பாத்துட்டு எவ்வளவு வாடகைன்னு பேசிக்கலாம்

சுப்பிரமணியின் ஏற்பாட்டில் பள்ளத்தெரு முரளியின் களத்துப் பெரையைப் பார்த்தார்கள். நூற்றைம்பது ருபா வாடகை தருவதாகச் சொல்லாப்பட்ட்து. முரளிக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். இங்கே நூற்றைம்பது ருபா வாடகை என்பதை யாரும் கனவு கூட கண்டதில்லை.  ஒரு நாளில் வீடு வெள்ளயடித்துத் தரப்பட்டது. முன்னூறு ருபா வாடகை என்று தேனி நோக்கிக் கடிதம் போயிற்று. இதில் மீதம் வருகிற பணத்தில் மாதம் இரண்டுஅந்தபடம் பார்க்கலாம்.

ந்தப் படம் சந்திரனின் வேலை. மாணவர்களின் ஆவலைத் தெரிந்து கொண்டு ஒருவருக்குப் பத்து ருபா என்று சம்பாதிக்கிறான். ஒவ்வொரு சனிக்கிழமையும் நாகர்கோவிலில் இருந்து டெக்கும் டிவி யும் ஆட்டோவில் எடுத்து வந்துவிடுவான். மகராசனின் களத்துக் கட்டிடத்தில் காட்சி நடைபெறும். இப்பொழுதெல்லாம் ஊர் இளசுகளும் நிறைய வர ஆரம்பித்து விட்டார்கள். பெண்கள் விசயம் தெரியாமல்
நாங்களும் பாக்கவரட்டாஎன்று கேட்டது, தினமும் டெக்கும் டிவி யும் வைத்துக்கொண்டு வீடுகளில் திரைப்படம் காட்டும் யோசனையை சந்திரனுக்குத் தந்தது.

நிறையத் திரைப்படங்களும், கல்லூரிப் பெண்களின் நடமாட்டமும் அந்த ஊர்ப் பெண்களிடம் ஏராளமான் மாற்றங்களை விதைத்தது. கல்லூரி மாணவர்களின் வருகைக்காக நிறையக் காத்திருப்புகள், கனவுகள் நிகழ்ந்தன.

டேய் மச்சி உன் ஆளு நேத்து ஆத்துல குளிக்கும் போது பாத்தேன் டா

ஏதாவது சொன்னாளா?”

இந்தப் பட்டிக்காட்டுல எங்க பேசமுடியுது

ஏனுங்க வெங்கட் உங்க ஆளுகிட்ட இவன பேச விடாதீங்க. அப்புறம் இவன் வளைச்சுடப் போறான்

து மாலையில் கம்பிப்பாலத்திற்குப் போன முருகனின் காதில் விழுந்து, இரவில் சந்தியில் அவிழ்க்கப் பட்டது.

வெளியூர்ப் பயலா?”

நம்ம பொண்ணையா?” ஊர் கோபமானது.

படிக்க வந்தானுங்களாஇல்ல…”

இவனுங்களையெல்லாம் கெட்டி வச்சு தோல உரிக்கணும்வெறிகொண்டு பேசிற்று.

இவனுங்களுக்குத் தங்க எடம் குடுத்ததே தப்பு

ஒனக்குக் குடுக்க எடமில்ல. நாங்க வாடக வாங்கி கொஞ்சம் பைசா பாக்குறது ஒனக்குப் பொறுக்கல்ல. அதான் இப்படிச் சொல்லுக

இருபுறமும் வார்த்தைகள் தடித்தன.

நமக்குள்ள சண்ட எதுக்குப்பா? எளவட்டப் பயலுக அப்படிச் சொல்லிருப்பானுக. அதுக்கு நாம இப்படியா பேசுறது. விடுப்போ 

கோசுப்பாட்டா சமாதானம் சொன்னாலும்சந்தியில் மெலிதாய் ஒரு கோடு விழுவது தெரிந்தது.

டுத்தநாள் காலையில் சுப்பிரமணியின் டீக்கடையில் கோடு கொஞ்சம் பெரிதாக ஆரம்பித்தது.

எடம் இருக்கு. குடுத்தான். அத இவன் பேசியிருக்கக் கூடாது.

என்னடே பெருசாக் குடுத்துட்டான். அந்தப் பொம்பளய வெரட்டிட்டு வீட்ட வாடகைக்கு குடுத்தான்.”

அதுக்கு லேசா பைத்தியம் மாதிரி ஆயிருச்சு. அவன் என்ன செய்வான்

ங்களுக்குள்ளே பேசிக் குறைதீர்த்து மனிதாபிமானத்தோடு உதவிகளும் தண்டனைகளும் பரிமாறிக்கொண்டிருந்த மக்கள் நிறைய மாறியிருந்தார்கள். காவல் துறை வந்தது.

இங்க சதீசு யாரு?”  

சந்திரன் யாரு?” சந்தியில் கேள்வி கேட்டது.

இங்க இல்ல சார்

இங்கதான் இருப்பானுங்கன்னு கடைத்தெருவுல சொன்னாங்க. நீரு இல்லேன்னு சொல்றீரு. ஆமா அவன் களம் எங்க இருக்கு

ங்கேயோ காய் நகர்த்தப் படுகிறதென்பது கோசுப் பாட்டாவிற்குப் புரிந்தது.

அது கொளத்துப் பக்கம் இருக்கு சார்

சரி. அவனுங்க வந்தா நாளைக்கு ஸ்டேசன்ல வந்து பாக்கச் சொல்லும் என்னா

சதியோடு சந்தியில்  வந்துஅமர்ந்தார் பாட்டா. இளங்கடைச் சுடுகாடு வரை நடந்துவிட்டு வந்தது களைப்பாய் இருந்தது. இனி ஆற்றில் போய் குளிக்கவேண்டும். செல்லப்பன் இறந்துவிட்டார். இரண்டு பேருக்கும் அனேகமாக ஒரே வயதுதான். அதிகமாய்க் கூட்டமில்லை. முன்பெல்லாம் ஒருவர் இறந்து போனால் வீட்டின் முன் ஏராளமான கூட்டம் வரும்.
சுடுகாட்டிற்குப் பெரும்பாலும் எல்லோரும் வருவார்கள். இப்பொழுது உள்ளூர்க் காரர்களே ஞாயிறு, வியாழன் என்று கிழமை பார்த்து வருகிறார்கள். அடக்கம் செய்த அன்றும் மறுநாள் காடாத்திற்கும் வந்து காரியம் முடிந்து சாப்பிட்டுவிட்டுப் போனவர்கள், இப்பொழுதெல்லாம் காலையில் ஒரு கப் காப்பியோடு நின்று விடுகிறார்கள். திருமணங்களுக்கு முந்தைய நாள் இரவே வந்து "கறிக்காய்" வெட்டி இருந்து சாப்பிட்டுவிட்டு மறுநாள் திருமணத்திற்கு வந்து எல்லம் முடிந்து கிளம்பிப் போனவர்கள், இப்பொழுதெல்லாம் வரவேற்புகளில் தான் அதிகம் கலந்துகொள்கிறார்கள்.

"என்ன பாட்டா... நேத்து போலீசு வந்து என்ன கேட்டான்."

"இல்லப்போ... அதெல்லாம் பெருசாக்காதீங்கோ.." பாட்டா நினைவு கலைந்து சொன்னார்.

"மத்தவன் தான் சொல்லிக் குடுத்துருக்கான். திருக்கலியாணத்துக்கு என் களத்துல கட வைக்க வருவான்ல அப்ப நான் யாருன்னு காட்றேன்." சதீசு கருவிவிட்டுப் போனான்.

ப்பொழுது, முன்பு போல் வெறும் கோயில் பணத்தில் மட்டும் திருக்கலியாணம் நடப்பதில்லை. நிறைய "உபயம்" என்று குறிபிட்டு ஏரளமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. போன வருடம் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள். நிறையக் கூட்டம் வந்தது. கடைகளுக்கெல்லாம் நல்ல வியாபாரம் ஆயிற்று. பல்லக்கு வருகிறபோது ஏராளமான மாலைகள் குவிந்தன. இந்த வருடமும் வரலாம். ஆனால் "ஆலி பொம்மை" ஆட்டம் பார்த்து நாளாயிற்று. பொய்க்கல் குதிரை வருவதில்லை. ஐந்து நாள் திருக்கலியாணத்தில் குறைந்தது மூன்று திரைப்படங்களாவது
காட்டுகிறார்கள். பட்டிமன்றம் நடக்கிறது. இவையெல்லாம் வளர்ச்சியா என்று தெரியவில்லை. குழப்பத்தோடு கண்ணயர்ந்தார் பாட்டா.

நாளைக்குத் திருக்கலியாணம். ஐந்து நாள் திருவிழா. ஊரே களைகட்ட ஆரம்பித்தது. தன் களத்தில் கடையொன்றைத் திறந்தான் சதீசு. இது அவனுக்கு முதல் முறை. பெருமாளும் முருகனும் வழக்கம்போல் கடை வைக்க வந்தபோது தடுக்கப்பட்டனர். விசயம் புரியாமல் தவித்தனர். சதீசுடன் மனவருத்தம் வந்தது. முப்பிடாதி அம்மன் கோயில் கொடைவிழாவில் சதீசு தடுக்கப் படவேண்டும் என்று அன்றே தீர்மானிக்கப் பட்டது.

ரண்டாம் நாள் திருவிழாவில் ஒரு பெண்ணின் கழுத்துச் சங்கிலியை ஒருவன் அறுத்துக் கொண்டு ஓடினான். பெரிய கொலைகாரர்களையே மடக்கிப் பிடித்த ஊர் இப்பொழுது சும்மா பார்த்துக் கொண்டு நின்றது. உதவி கேட்ட போது "வா ஸ்டேசனில் போய் கம்ளைண்டு குடுக்கலாம்" என்றது. 

"பா...ட்...டோ...வ்... "

லெச்சுமணன் குரல் கேட்டு நிமிர்ந்தார் பாட்டா.

"பிரேதத்துக்குக் கிட்ட நின்னு என்ன சிந்தன பண்ணிகிட்டு இருக்கேரு, வில்லேஜு ஆப்பிசருக்கு சொல்லிருக்கு பாட்டா. ஸ்டேசன்ல இருந்தும் ஆள்வரணும் வந்தாதான் பாடிய எடுப்பாங்க".

"இல்லப்போ.. துணியில்லாமக் கெடக்குல்லா.. அதான்.."

"அதுக்கு என்ன செய்ய முடியும் பாட்டா. மக்கா அந்த பேப்பரக் குடுடே. படிச்சு கிழிச்சது போருன்டே..' என்று சிவராமகிருட்டினன் கையிலிருந்து வாங்கப்பட்ட பேப்பரால் பிணம் போர்த்தப் பட்டது.

"பாவம் இவ்ளோ நாளும் ஒத்த ஆளா வேல செஞ்சிற்றுக் கெடந்தா. அவ தல எழுத்த பாரு. பைத்தியம் புடிச்சு சந்தில விழுந்து சாகணும்னு. ம்...
நாளைக்கு நமக்கு என்ன கதியோ" புலம்பியவாறே நின்றிருந்தார் பாட்டா.

"பாட்டோவ்... அந்த பேப்பருல பாரும்."

"என்னது டே"

"குமரி மாவட்டம் மயிலாடியில் மருத்துவக் கல்லூரி ... அமைச்சர் அறிவிப்பு"

"அதுக்கென்ன டே இப்போ"

"இல்ல பாட்டா.. நம்மளுக்கும் ஒரு பொழப்பு கெடைக்கும்னு நெனக்கேன். சிவீந்தரத்துல எங்க சித்தி இருக்கா. மயிலாடி கிட்ட தானே. அவ களத்த வாங்கி அதுல சின்னதா ஒரு லாட்ஜும் ஓட்டலும் கட்டலாம்லா..  நம்ம ஊரப் பாரும் நல்லா வளந்திருக்குல்ல. அத மாதிரி அங்கேயும் நடக்கும்ல ஒரு வாய்ப்புதானே பாட்டா"

"ம்... ஆமாப்போ.."

"சரி பாட்டா... நான் ஆராம்புளிக்கு பொயிற்று வாரேன். சதீசு ஏதோ பிரச்சனன்னு சொன்னான். என்ன எளவுன்னு தெரியல"

பாட்டா அந்தப் பிணத்தைப் பார்த்தவாறு நடக்க ஆரம்பித்தார். அவர் வயதில் கேட்பாரற்றுக் கிடக்கிற முதல் பிணம். நினைவுகள் எங்கெங்கோ செல்ல ஆரம்பித்தன. கோசுப்பாட்டாவிற்கு இது வளர்ச்சியா இல்லையா என்று தெளிவாய்ப் புரியவில்லை. ஒருவேளை வளர்ச்சி இப்படித்தானிருக்குமோ. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. இது தனியொருவரால் தவிர்க்கப் பட முடியாதது.
------------------------------------------------------------------------------------------------

.மாதேவன்
08-11-1992