Thursday, 21 August 2025

இல்லாதது



எப்பொழுதும்

இல்லாதவற்றின் மீதே

பேராவல் எழுகிறது.


பெருநகர அடுக்ககத்தின்

பேதை மனத்தில்

தற்சார்பும்,


சிற்றூர்க் குறுந்தெருவின்

சீரிய மனத்திலெழும்

அடுக்ககக் கனவும்.


Wednesday, 13 August 2025

தண்டமிழ்ப் பாடல்

முன்பே எழுதிய ஒரு பாடல் செய்தெள்ளிகை (Artificial Intelligence) உதவியால் இசையமைக்கப்பட்டது. பாடல் வரிகளுக்கு நிகரான காட்சி அமைப்புகளை எழுதிய பின் செய்தெள்ளிகை உதவியால் காட்சிகளாக உருமாற்றப்பட்டு அனைத்தையும் இணைத்த விழியம் இது.






Sunday, 20 July 2025

செம்மலின் நேர்மை

 


(இணைக்குறள் ஆசிரியப்பா)

வான்வளி தன்தொழில் மறந்து  வானின்று

தான்பொழி நன்முகில் பொய்த்து நெடும்புனல்

அழுவத் துநீர்மை குறைந் திடினும் 

விழுமியர் வஉசி உளங் கொண்ட 

நேர்மை குன்றா தென்பது 

சீர்மை மிக்க உயர் வாழ்வால் 

அறிந்த திவ்வுல கவர் தீரா 

உறுதியொ டுவாழ்ந்து மறைந்த பின்னே.


நெடுங்கடல் வ.உ.சி


மேலே சீறும் பேரலைகள், 

அடிவயிற்றில் 

அறிவின் பேரமைதி.


உதவும் மனத்தொடு 

உப்பு தொடங்கி

ஓருநூறு பொருட்கள்.

முத்து பவளமென

ஆழிப் பெருஞ்செல்வம்.


உவர்நீர் நடுவே

நன்னீர் போலே

சொத்திழந்த போதும் 

விருந்தளித்த மேன்மை.


கண்ணூர்ச் சிறையின்

கம்பிகளுக்கு நடுவே

வரும்

தலைமுறைக்குக் கையளித்தத்

தமிழ்ச்செல்வம்.


உணவும் இடமும்

உடுத்தும் உடையும்

நிலையில்லாதபோதும்

உரிமை இழந்தவர்

குரலாய் ஒலித்த வீரம்.


பெரியவர் வ.உ.சி

அரிய நெடுங்கடல்.

மூழ்கி எழுவோருக்குப் 

படுபொருட்கள் ஏராளம்.

நாம்தான் இன்னும் 

முழுவதையும் கண்டடைந்தோமில்லை.

Monday, 14 July 2025

நானே... பெய்தேன்





மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டும் புதுச் சிந்தனைகளைத் தந்தும் இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கின்ற  திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம். பலவாறான கருத்துகளைத் தாங்கிய உரைகள் ஏராளம் கண்டது திருக்குறளே. அண்மையில் வள்ளுவத்துக்கு உரையெழுதி வெளியிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. சிறப்புதான். அவரது கருத்துகளும் வளம் சேர்க்கலாம். உருவகங்கள் ஒருவேளை இளையோரைச் சென்றடையலாம். நல்லதுதான். 

ஆனால், தன் உரை குறித்து விளம்பரப்படுத்தும் முகமாக,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் - 55) எனும் குறளுக்கு;

"கடவுளைத் தொழாது கணவனையே தொழுது எழும் இல்லறத் தலைவி பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்று காலங்கலமாகச் சொல்லப்பட்டு வந்தது. இதுதான் பொருள் என்றால் அது சர்ச்சைக்குத்தான் ஆளாகும். அந்த சர்ச்சையை என் உரையில் நான் சரி செய்திருக்கிறேன். எழுதியிருக்கிறேன் 'கட்டமைக்கப்பட்டத் தெய்வங்களைத் தொழாமல் கட்டி வந்த கணவனையே தொழுது எழுகின்ற ஒரு பெண், பெய் என்று சொன்னவுடன் பெய்கின்ற மழை எப்படி நன்மை தருமோ அப்படி நன்மை தருவாள் என்று எழுதியிருக்கிறேன். சர்ச்சைக்கு இடமில்லை. பெண்ணுக்கும் பிழையில்லை." என ஒழு விழியத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.