Saturday 1 September 2018

மணற்கேணி - வள்ளுவர் சொல்லாடல்

ங்கப் பாடல்களில் ஏராளமான உவமைகளைக் காணலாம்.  வாழ்வியல், வரலாறு, உயிரியல், வானியல் என ஏராளமான செய்திகளை ஆயிரமாயிரம் ஆண்டுககளாக நமக்குச் சுமந்து வருகின்றன அந்த உவமைகள்.  காப்பியங்களில் வருகிற உவமைகள் சிறப்புடையதாய் இருக்கக் காணலாம்.   ஆனால் வள்ளுவர் எடுத்தாளும் உவமைகள் நம்மை பெருவியப்படையச் செய்யும். தான் வாழும் காலத்தின் வாழ்வியல் நெறிகளை இன்னொரு தலைமுறைக்கு பிழையின்றி எடுத்துச் செல்வது என்பது அத்தனை எளிதான செயலன்று. வள்ளுவருக்குக் கிடைத்த வாய்ப்பு என்பது ஏழு சொற்கள் மட்டுமே. அதற்குள்ளாகச் சொல்லப்படும் உவமை என்பது மிக நுட்பமானதாக இருக்க வேண்டும். அதைக் கசடற அறிந்திருத்தல் வள்ளுவருக்கு தேவையாகிறது. இரண்டு அல்லது மூன்று சொற்கள் உவமை, பொருள், பண்பு,  உவமைஉருபு போன்றவற்றிற்காகச் செலவானால் மீதமிருக்கிற நான்கு சொற்களில் ஒரு கருத்து அல்லது நெறியைச் சொல்லவேண்டும். ஆண்டுகள் தாண்டியும் சொல்லப்பட்ட உவமைப்பண்பு பழுதுபடாமல் இருத்தல் வேண்டும். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் குறட்பாக்களில் உவமை சொல்வது மிகக் கடினமான ஒன்றே. ஔவைக்குறள் கூடச் சிற்சில இடங்களில் அமைதி வேண்டி நிற்கிறது. ஆனால் வாள்ளுவர் சொல்லாட்சியோ காலங்கள் தாண்டியும் நின்றுகொண்டிருக்கிறது. அப்படி மிக நுட்பமான சொல்லாட்சியைத் தாங்கி நிற்கும் குறளொன்றைப் பார்ப்போம்.

"தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு

மணக்குடவர் உரை: அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக'

என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)

காலிங்கர் உரை: ஒருவன் கல்லுதற்கு முயலும் முயற்சியானது (எவ்வளவைத்து) மற்று அவ்வளவைத்தாகி வந்து ஊறாநிற்கும் மணற்கேணியின் நீரானது; [கல்லுதற்கு-தோண்டுதற்கு]

வ.உ.சி உரை:  (அகலம்) மணற்கேணி ஒன்றிலேதான் தோண்டியவளவு நீருறுதலான் மணற்கேணி என்றார். தொட்ட அனைத்து, கற்ற அனைத்து இரண்டும் செய்யுள் விகாரத்தால் அகரங்கெட்டு நின்றன.

நாமக்கல் கவிஞர் உரை: (கற்றவனாவதற்கு எவ்வளவு படித்தால் போதும் என்ற கணக்கில்லை) எவ்வளவுக் கெவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மணற்கேணியில் நீர் ஊறுவதைப்போல் எவ்வளவுக் கெவ்வளவு கல்வி கற்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு அறிவு பெருகும்.

பாவாணர் மரபுரை :
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணவில் தோண்டிய நீர்க்கிடங்கில் தோண்டிய அளவிற்கு நீரூறும்; மாந்தர்க்குக் கற்ற அனைத்து அறிவு ஊறும் -அதுபோல் மக்கட்குக் கல்விகற்ற அளவிற்கு அறிவூறும்.
மணற்கிடங்கு சிறிதே தோண்டினால் ஊறும் நீர் போதாது. சற்று ஆழமாகத் தோண்டினாற் போதிய நீர் ஊறும். அதன்மேலும் தோண்டத் தோண்ட ஊறுமாதலால் , அவரவர் தேவைக்குத் தக்கவாறு தோண்டிக் கொள்ளல்வேண்டும். அதுபோல் , கல்வியும் சிறிது கற்ற அளவில் அறிவு நிரம்பாது; பேரளவு கற்றால் வேண்டிய அறிவு அமையும். அதன்மேலுங் கற்பது அவரவர் தேவையையும் விருப்பத்தையும் ஆற்றலையும் ஓய்வையும் வாழ்நாளளவையும் பொறுத்ததாம். இக்குறளில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை.
"நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
ணுண்மை யறிவே மிகும்." (373)
என்னுங் குறளிற்கூறியது அறிவு பயன்படும் வகைபற்றிய தென்றும், இங்குக் கூறியது அறிவு வளரும் வகை பற்றிய தென்றும், வேறுபாடறிக.

ப்படி தொல்லுரைகாரர்களும் பேரறிஞர்களும் குறளின் பொருள் குறித்த நோக்கிலேயே உரை கண்டிருக்கிறார்கள்.  பெரிதாக நமக்கு ஐயம் ஒன்றும் இல்லை. ஆனால், தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்கிறாரே. தொட்டால் மேலும் ஊறுமா?  நாம் அந்த மணற்கேணியைத் தொட்டுப் பார்ப்போமா? வாருங்கள். 

5000 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி கிணறு
கேணி என்பது பெருங்கிணறு. கேணி ஆழமாகத் தோண்டப்பட்டு நிலையானக் கட்டுமானத்தால் நிறுத்தப்பட்டிருக்கும். "குள்" எனும் வேர்ச்சொல்லிலிருந்து கேணி பிறந்ததாக பாவாணர் சொல்கிறார். குள்,குல் போன்ற வேர்ச்சொற்கள் வளைவு, வட்டம், உருண்டை போன்ற பொருள் குறிக்கின்றன. பண்டு கேணிகள் பெரும்பாலும் வட்டமாக இருந்தன. சிந்துவெளியில் கூட செங்கற்களால் கட்டப்பட்ட வட்டமான கேணிகள் அகழ்வாய்வில் வெளிப்பட்டு நிற்கின்றன. கேணி நல்ல உறுதியான மண்வாகமைந்த நிலங்களில் ஏதுவாகும்.

ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க  (குறுந்தொகை 399)
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்  (நற்றிணை 92)
தண் கேணித் தகை முற்றத்து,  (பட்டினப்பாலை)
  
நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி  (பெரும்பாணாற்றுப்படை)

ணற்பாங்கான இடங்களில் "சுடுமண் உறைக் கேணி" கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.  கீழடி, காஞ்சிவரம், கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம், அரிக்கமேடு, புகார், மட்டக்களப்பில் வந்தாறுமூலை என ஏராளமான உறை கேணிகள் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.  மணற்பாங்கான இடங்களில் செங்கற்கட்டுமானத்தைவிட சுடுமண் உறைகளை  எளிதாக அமைத்துவிட முடியும். 

உறைக் கிணற்றுப் புறச்சேரி  (பட்டினப்பாலை)

இவையிரண்டும் நிலை நீர்வாழிடங்கள். செங்குத்தான, ஆழமான அமைப்பைக் கொண்டவை. பலரின் உழைப்பும்,  பொருட்செலவும் கொண்டவை. சில வேளைகளில் உப்பு நீரே கிடைக்கும். நீண்டகாலம் பயனளிக்கும்.  நீரின்றிப் போனாலோ பாழ்பட்டுப் போனாலோ கைவிடப்பட வேண்டியவை.

கூவல் - பாலைநிலக் கேணி
மேலே படத்தில் காணப்படும் கூவல் என்றொரு தோண்டப்படும் நீர்நிலையும் சங்க இலக்கியங்களிலே காணக்கிடைக்கிறது. பாலைநிலங்களைக் கடந்துபோவோர், அங்கேயே வாழும் நிலையிலிருப்போர் குடிநீருக்காக மண்ணில் அகழும் சிறு நீர்நிலை இது. பாலைநிலங்களில் தோண்டப்பட்டிருக்கும் கூவல் ஒன்றில் நீர்  செம்மண் நிறத்தில், கலங்கி இருந்ததென்று புறப்பாட்டொன்று தெரிவிக்கிறது.

பூவல் படுவில் கூவல் தோண்டிய
செங் கண் சில் நீர் பெய்த சீறில்   (புறம் 319)
 
வெயில் காயும் பரல் கற்களையுடைய பள்ளத்தில் கணிச்சி (குந்தாலம்) கொண்டு குழிபறித்த கூவல்  ஒன்று இருந்ததை நற்றிணைப் பாடலொன்று அறியத்தருகிறது.

வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல்  (நற்றிணை 240)

கூவலின் நீரை அப்படியே அருந்த இயலாது. அதை வடிகட்டி பின்னரே குடிக்க முடியும்.  இந்த இரண்டு அன்றி மூன்றாவதாக ஒரு அமைப்பு உண்டு. அது மணற்கேணி.  கருப்பொருள் உரை செய்கையில் இறையனார் களவியலுரையும், நச்சினார்க்கினியர் உரையும் நெய்தலுக்கான நீர் வரையறையில் "மணற்கிணறு" எனக் குறிக்கின்றன. ஆனால், நெய்தலின் மண்வாகு, சுடுமண் உறையின்றி கிணறு அமைக்கப்பட்டால் குறுகிய காலத்திற்குள் தூர்ந்துவிடும் தன்மையுடையதாய் இருக்கும். இவை வள்ளுவர் சொல்லும் மணற்கேணியாக இருக்கமுடியாது. 

பூம்புகாரில் கடலோரத்தில் வானகிரியில் உறைகிணறு ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. "கடற்கரை மணலில் குடிநீருக்காக தோண்டப்படுகின்ற கிணறுகள் மண் சரிந்து தூர்ந்து போகாமல் இருக்க கட்ட மண் வளையங்கள் கொண்டு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன." கொற்கை, நந்தன் மேடு, அரிக்க மேடு ஆகிய பகுதிகளில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


னில், வள்ளுவர் சொல்லும் "மணற்கேணி" ஓடும் நீர்வாழிடமான ஆற்றின் கரையோரங்களில் கைகளால் தோண்டப்படும் சிறு குழிகளாகும். ஊற்றுநீர் எடுத்துப் பயன்படுத்துவதே ஏராளமான ஊர்களில் குடிநீருக்கான வழிமுறையாக இருந்தது. புழக்கடைப் பயன்பாட்டிற்கு ஆற்று நீரையோ, குளத்து நீரையோ, கிணற்று நீரையோ எடுத்துக் கொள்வார்கள். ஊற்றுநீரே குடிநீர். 

ழையாற்றங்கரையில் நீண்டகாலமாக மணற்கேணி தோண்டி நீரெடுத்துவந்தது எனக்கு நினைவிருக்கிறது. அது ஒரு காட்டாறு. எப்பொழுதும் நீர் ஓடிக்கொண்டேயிருக்கும். கோடையிலும் கூட. ஓடும் நீரிலிருந்து இரண்டு முதல் நான்கடிகள் தள்ளி மணலில்  கையால் சிறு குழி ஒன்றைத் தோண்டுவோம். விளிம்பு மணலை கையால் தட்டித் தட்டி பலப்படுத்திக் கொள்வோம். பழையாற்றில் நீர் ஓடிக்கொண்டிருப்பதால் கையால் தோண்டிய அந்தச் சிறுகுழியில் நீர் ஊறிவிடும். ஆற்றின் மட்டத்திற்குக் மேலாக நீர் ஊறாது. சிறு குவளை கொண்டு முகந்து குடங்களில் ஊற்றிக்கொள்வோம். ஆற்றின் நீர் கலங்கலாக இருந்தாலும் ஊற்று நீர் தெள்ளிய மணலால் வடிகட்டப்பட்டு தூய்மையானதாய் இருக்கும். வேகமாக நீர் நிறைக்க வேண்டுமெனில் என்ன செய்வது?,  "குழியை ஆழப்படுத்துவோம்" என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்தக் குறளின் உரைகள் நம்மை அப்படித்தான் எண்ண வைக்கிறது. இங்கேதான் வள்ளுவர் பேராசானாய் மிளிர்கிறார். என் கையால் தோண்டப்பட்ட ஏராளமான "மணற்கேணி"களையும் வள்ளுவரின் "மணற்கேணி"யையும் கொஞ்ச நேரத்திற்கு இணைத்துக் கொள்கிறேன். 
 
மணற்கேணி - ஆற்றங்கரை ஊற்று


"ஆழமாகத் தோண்டத் தோண்ட ஊறும் நீர்போல" என ஆழத்தை மட்டும் சொல்ல முனைந்திருந்தால் வள்ளுவர் கேணி என்றோ கிணறு என்றோ சொல்லியிருப்பார். ஏனெனில் மணற்கேணியை அதிக நீர்வேண்டி ஆழமாகத் தோண்ட முற்பட்டால் பக்கவாட்டிலுள்ள மணல் சரிந்து விழுந்துகொண்டே இருக்கும். பக்கவாட்டில் அகலமாக அகழ்ந்துவிட்டு பின் ஆழமாகத் தோண்டினால் தான் மண்சரியாமல் இருக்கும். மணற்கேணியைப் பொறுத்தவரை ஆழத்திற்கும்  அகலத்திற்குமான விகிதம் மணலைப் பொறுத்து சரியாகப் பேணப்படுதல் நன்று. கேணி அல்லது கிணற்றைப் போல செங்குத்து வடிவம் கொண்டதல்ல மணற்கேணி. அது ஒரு அரை நீள்கோள வடிவத்தை தானே அமைத்துக்கொள்ளும். ஊறிய நீரை குவளைகொண்டு முகக்கையில் சிறிது மண் சரியும். மீண்டும் தொட்டுவிட்டு முகக்க வேண்டும். அந்தச் சிறிய ஊற்றிலிருந்து எத்தனைக் குடங்கள் வேண்டுமானாலும் வடிகட்டப்பட்ட,  தூய்மையான, கசடு இல்லாத நீரைப் பெறமுடியும். தனி ஒருவரே எந்தக் கருவியுமின்றி கைகளாலேயே இதைத் தோண்டிவிடமுடியும் என்பது இன்னும் சிறப்பு. பொருட்செலவில்லை. 

தை அப்படியே "கற்றனைத் தூறும் அறிவு" என்பதோடு பொருத்திப் பாருங்கள். கற்றறிதல் ஆழமானதாக மட்டுமன்றி அகலமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவரின் ஆசை போலும். அதனாலேயே ஆழமான, செங்குத்தான, பலருடைய உழைப்பின் பயனான கேணியை விடுத்து இந்த எளிய மணற்கேணியைத் தெரிவுசெய்தார் போலும். "கசடறக் கற்க" இது ஒரு வழி போலும். நம் பட்டறிவிலிருந்தே இதற்கான எடுத்துக்காட்டுகளைப் பெற முடியும். பெரிய கண்டுபிடிப்பாளர் என அறியப்பட்ட எடிசனும், அவர் வளர்த்த பூனையும் அதன் குட்டிகளும், அவர் கதவில் போட்டுவைத்த மூன்று துளைகளும் செங்குத்து அறிவின் சான்றுகள். தாய்ப்பூனை வந்துசெல்ல ஒரு துளையும், இரண்டு குட்டிகள் வந்து செல்ல இரண்டு துளைகளும் என மூன்று துளைகளை அமைத்த அறிவாளர் அவர். அறிவு அகலமானதாகவும் இருத்தல் வேண்டும்.  

மணற்கேணியின் பக்கவாட்டிலும், ஆழத்திலும் தோண்டப்படும் அளவிற்கு நீர்நிறையும். அதுபோல ஆழமாகவும், விரிவாகவும் கற்குந்தோறும் அறிவு நிறையும்

முந்தைய  இரண்டு பத்திகளை மட்டும் படித்தாலே "மணற்கேணி" உவமை விளங்கிவிடும். ஆனால் இந்தச் சிறியக் "குறட்கேணி" யை பக்கவாட்டில் தொடத் தொட அது நம் அறிவை விரிவடையச் செய்தவைதான் மேலே உள்ள பத்திகள்.

னால்,
குறள் 373 'நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்' என்கிறது. இது இந்தக் குறள் கருத்துடன் முரண்படாதா? .
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் என்னும் குறள் எண்:373 ஊழ் அதிகாரத்தில் வருவது. இதன் பொருள் 'ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்' என்பது. ஆனால் இது கற்கக் கற்க அறிவு பெருகும் என்கிற இக்குறட் (396) கருத்துடன் மாறுபடுவதாகத் தோன்றுவதால் பரிமேலழகர் 'ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மலையாமை [முரண்படாமை] அறிக' என்கிறார். அதாவது 'ஊழ் மாறுபடின், விளக்கமுறாது இயற்கையறிவே மிக்குத் தோன்றும்' என்பது பரிமேலழகரின் அமைதி.

ஆனால் தேவநேயப் பாவாணர் 'அங்கு கூறியது அறிவு பயன்படும் வகை பற்றியது; இங்குக் கூறியது அறிவு வளரும் வகை பற்றியது' என்று கூறி மாறுபாடு இல்லை. எனவே அமைதி கூறவேண்டுவதில்லை என்பதுபோல் தனது உரையில் எழுதியுள்ளார்.

உண்மையில் முரணா? இல்லையா?

ன்னொருநாள் அந்தக் கேணியையும் தொட்டுப் பார்ப்போம் வருங்கள்.
 
ம்.
குறள் தொட்டனைத்தூறும் கேணிதான். அதைக் ற்றனைத் தூறும் அறிவு. 

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
01/09/2018

1 comment:

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்