இணையத்தில் ஓரங்க நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, அதன் பார்வையாளர்களைப் பார்க்கும் போது பெரு வியப்பாக, பாவமாக இருக்கும். “நீங்கள் ஒரு பூமர். உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்” என்று சொல்லிவிட்டு என்னை நீங்கள் கடந்து போகலாம். ஆனால், அது ஏனென்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம். விட்டு விடுதலையாக வேண்டும் என்ற உங்கள் எண்ண உந்துதலின் அடிப்படையில் மறைந்து கிடக்கும் (எங்களுக்கு), நீங்கள் அறிந்தே அமிழ்த்தி வைத்திருக்கிற, அழுத்தம் நிறைந்த பலூனை உங்கள் மனக்குளத்தின் அடியாழத்திலிருந்து வெளிக்கொணர்ந்து சமூக வெளியில் மிதக்கவிடுகிறது இந்தப் புத்தகம். அது இயல்பும் கூட.
இந்தப் புத்தகம் வெறுமனே பெருநிறுவனங்களைப் பற்றியதா என்றால், அதை விட அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றியே பெரும்பாலும் பேச முனைகிறது. அங்கே நிலவும் முன்முடிவுகளுடன் கட்டமைக்கப் பட்ட உரையாடல்களைப் பதம் பிரிக்கிறது. அந்தச் சொற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டவர்களின் மன உணர்வுகளைப் பொது வெளியில் பேசுகிறது. அது ஆசிரியரின் எண்ண ஓட்டம் மட்டுமல்ல, இன்னும் பலரின் மனக் குமுறல்களும், ஆற்றாமையும் கொண்ட தொகுப்பு. இவை அனைத்தையும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என எள்ளலும், நகைப்பும், பகடியும், நக்கலும் குழைத்த எளிய மொழி நடையில் விளம்புகிறது. காட்டாக,
“Aptitude tests are meant to assess your capacity to think logically. But in Indian companies, they also assess your capacity to endure illogical nonsense. My colleague failed the aptitude test. He did not know this.
HR forgot to tell him. They moved him to the next round. And the next. And then the next.
By the fourth round, a panellist looked at him with genuine confusion and asked, "How did you reach this far? You failed Round One."
It was like watching someone discover that they had been eliminated from a reality show after already winning the finale.
He was rejected. 'Fair and square,' they said.
Then a week later, he got a call again. "There are no suitable candidates. Can you join immediately?"
He joined.” எனும் ஓர் இடம். இப்படிப் பல பக்கங்களை நீங்கள் பார்க்க இயலும். காலப்போக்கில், அந்தக் கண்ணாடிக் கட்டிடங்களுக்குள் இது இயல்பான ஒன்றாகவே பார்க்கப் படுகிறது. அந்த ‘இயல்பை’ கூர்ந்து கவனித்து அதன் அடுத்தடுத்த பக்கங்களைக் காட்டுகிறது புத்தகம். அதனால் பல நேரங்களில் நீங்கள் கண்ணாடி முன் நிற்பதாகவே உணர்வீர்கள், அதுவும் யாருமற்ற ஒரு தனி அறையில்.
உங்கள் உணர்வுகளின் மதிப்பீட்டை ஒரு எண்ணாக உங்களையே சொல்ல வைத்துவிடுகிற அந்த ‘இயல்பு’, அளவுகோல்களின் மீது வரையப்பெற்ற ஒரு வரைபடமாக உங்களை மாற்றி வைத்திருப்பதை ஒரு கட்டத்தில் நீங்கள் உணர்வீர்கள் என்றே புத்தகம் நம்புகிறது. அதனாலேயே ஆசிரியரது சொந்த அனுபவத்துடன். பலரது எண்ண ஓட்டங்களும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.
வேலையோ, பெரு நிறுவனங்களோ கேள்விக்குள்ளாக்கப் படுவதை விடச் சூழலில் நிலவும் வேலைச் சமூகச் சிக்கல்களின் ‘எதார்த்தத்தை’ நோக்கியே கரம் நீட்டுகிறது. பொதுச் சமூக வெளிகளிலும், மற்றைய வேலைத் தளங்களிலும் நிலவும், தனிமனித உணர்வுகளுக்குச் சிக்கல் தரும் அனைத்தும் இங்கும் நிகழ்கிறது என்பதை நையாண்டியுடன் விவரிக்கிறது. நேரடி அனுபவம் பெற்றவர்களுக்கு அந்த நையாண்டிகள் இழந்து போனதின் வருத்தத்தையும் ஏற்படுத்தலாம்.
எதுவுமற்ற, பொருளற்றக் கட்டுப்பாடுகள் என நீங்கள் கடந்து போனவற்றின் பின்னே தேங்கிக் கிடக்கும் அழுக்கைக் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். இந்தக் கேள்வியைச் சிறியதென்றும் இயல்பென்றும் நீங்கள் சொல்லலாம். ஆனால், புறக்கணித்துவிட முடியாது என்பது தான் புத்தகத்தின் பலம்.
“The Big Bang Theory of Infinite Centres
As I said earlier, according to physics, there can be only one centre of gravity. In corporate life, there are infinite centres, each believing the universe spins around them.
An employee from a Bengaluru-based company on Reddit said, "My colleague once bragged that if he didn't send his weekly update, the VP personally messaged him." Another commented, “I once went on leave for two days, and my teammate messaged, 'It's chaos without you, bro.' It wasn't. He just forgot his login password." என்பதும் சின்ன விசயம் தான். ஆனால், கூட்டம் நடக்கும் அறைகளில் பேசப்படாத படிநிலைகள், மரியாதை நிமித்தம் செய்யப்படும் புன்னகைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அமைதியான போட்டி, அமைதியான சோர்வு மற்றும் தொழில்முறை எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யச் செய்யப்படும் தனிப்பட்ட சமரசங்கள். தம்மைத் தாமே அறிந்தே ஏமாற்றிக் கொள்ளும் அவலம், இருப்பதால் மட்டுமே மட்டுமே பின்பற்றப்படும் பொருளற்றச் செயல்முறை விதிகள் என எல்லாவற்றின் மீதும் படும் ஆசிரியரின் பார்வை புத்தகமெங்கும் காணக்கிடைக்கிறது. அது தனிமனிதச் சிக்கல்களைப் பற்றி அக்கறை கொள்ளாத அமைப்பின் வசதிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
அந்தக் கேள்விகளின் ஊடாக நிறுவனத் தலைவர்கள் சிந்திக்கவும், ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உணரவும், முடிவெடுப்பவர்கள் தாங்கள் உருவாக்கும் அமைப்புகளை மறுபரிசீலனை செய்யவும் ஊக்குவிக்கிறது இந்தப் புத்தகம். அளவீடுகள், அறிக்கைகளைத் தாண்டி பணியிடங்கள் என்பவை மனிதருக்கான இடங்கள் என்பதை நினைவில் கொள்ள நம் அனைவரையும் அழைக்கிறது.
வேலை எப்போதும் முக்கியமானதுதான். மறுப்பில்லை. ஆனால்…
நூல் - Work Isn't Working
ஆசிரியர் - சந்தோஷ் மாதேவன்
விலை - 449/-
அமேசான்னில் பெற : https://amzn.in/d/a6zlu1K


No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்