Monday 1 October 2018

பரியேறும் பெருமாள்


ஒரு திரைப்படத்தின் அறிமுகக் காட்சியின் உயிர்ப்பொலிகள், அதன் நிகழ்விடத்தை குருதியும் சதையுமாய் நமக்கு அறிமுகம் செய்துவிடும் என்பதை இன்னும் அறிந்திராத, என் அன்புக்கினிய மனிதர்களின் கைப்பேசி விளக்கொளிகளின் ஊடே, "இ 20 இங்க இருக்கு" என்ற இருக்கை தேடும்  குரல்களுக்கு நடுவே "கருப்பி"யோடு நானும் ஓட ஆரம்பிக்கிறேன்.

இடைவேளை வந்துவிட்டது.

"இப்படியெல்லாம் கூட நடக்குமா?"  - என் துணைவியார்.
"ம்.. நடக்கும்" - நான்.

"இல்ல, இவ்வளவெல்லாம் செய்வாங்களா? -
"ம்" -

"ஏங்க, என்னால படத்த பாக்க முடியல. கஷ்டமா இருக்கு" -

 "மாரி செல்வராஜ்" நீங்கள் என்ன செய்ய நினைத்தீர்களோ அதைச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்" என்கிறேன் மனதுக்குள் நான்.

ஆம். தன் வலியை பிறர் உணரச் செய்திருக்கிறார் அவர். அத்தனை எளிதல்ல இது.


2005 என்று தொடங்குகிறது படம். நான் இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் போகிறேன். 1985. நான் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். எங்கள் கல்லூரி இருந்த அந்த கிராமத்தின் அஞ்சல் அலுவலகம் நோக்கி  நடந்து கொண்டிருந்தான்  நண்பன். ஏதோ ஒரு வீட்டிலிருந்து யாரோ ஒரு பெண் அவனிடம் ஒரு கடிதத்தை (Inland Cover) கொடுத்து அஞ்சல் செய்யச் சொன்னாள். அவனும் வாங்கிக் கொண்டு போய் பெட்டியில் சேர்த்துவிட்டான். அடுத்த நாள் மாலை ஒரு பெண்ணின் தலைமுடியை முழுவதும் மழித்து மொட்டையடித்து விட்டார்கள் எனப் பேசிக்கொண்டார்கள். அரசல் புரசலாக விசாரித்ததில் நண்பனிடம் அஞ்சல் செய்ய கடிதம் கொடுத்ததும், தலை சிரைக்கப்பட்டதும் ஒரே பெண்தான் என்ற செய்தி கிடைத்தது. ஆனால், என் நண்பனிடம் நடந்தது பற்றி யாரும் பெயரளவுக்குக் கூட விசாரிக்கவில்லை. அந்த நிகழ்வின் அதிர்வு இன்னும் மிச்சமிருக்கிறது என்னிடம். அது மாரி செல்வராஜ் காலத்திலும் நடந்திருக்கிறது என்பதில் எனக்கு எந்த  வியப்பும் இல்லை. ஆனாலும், ஒரு இயலாமைக்குள் விழுந்தேன்.

பரியேறும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் தாத்தாவிற்கு நன்றி சொல்லிக்கொண்டேன். 1930 களுக்கு மேல், தனக்கு அறிவு தெளிந்த பருவத்தில் இந்த அழுக்கு உடைகளைக் களைந்து வெளியேறிய அந்த மனிதரும், அவரின் நீட்சியாய் என் தந்தையும், தாயும். இவர்களின் நடவடிக்கைகளே என்னுடையதாகவும் இருக்கின்றன. ஒன்று புரிகிறது, இந்த அழுக்கு உள்ளத்தில் ஒட்டிப் பிறந்ததல்ல. புறக்காரணிகளால் ஒட்டிக்கொள்வது. எனவே இதைக் கழுவிவிட முடியும். அதற்கு முதலில் காயம் பட்டவரின் வலியை உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு காயம் பட்டவர்களே பேசியாகவேண்டும். அதைச் மிகச் சரியாகப் பேசியிருக்கிறார் மாரிசெல்வராஜ். புரிந்துகொள்ள, விளக்கிச்சொல்ல என ஏதும் இல்லை. வலி. வலிமட்டுமே. உங்கள் உள்ளத்திற்குள்  உணர்வாய் விரவிடுகிற வலி.

நமக்கு முதுமை வந்து இயலாமல் போய்விட்ட காலத்தில், வயது வந்த மகன் கழிவறைக்குப் பதில் வரவேற்பறையில் சிறுநீர் கழித்து விட்டால்... நமக்கு எப்படியிருக்கும்? விளக்க முடியுமா? அதற்கு நம் எதிர்வினை என்னவாக இருக்கும்?  இதை ஒரு கற்பனையாக எண்ணிப் பார்ப்பதே மிகக் கடினமாக இருக்கிறது. இதுவே அந்தச் சிறுநீர் நம் முகத்தில் கழிக்கப்பட்டிருந்தால்?

திருந்துவதற்கான அல்லது ஒழிப்பிற்கான  செய்தி படத்தில் இருக்கிறதா? இல்லையா?  இயக்குனர் சொன்னாரா?  சொல்லவில்லையா?  என்றெல்லாம் தேடிக்கொண்டிருக்காமல் "உணருங்கள்". காயம் பட்டவரின் வலியை உணர்வதில் தான் மாற்றத்தின் விதை விதைக்கப் படுகிறது. அதை சிறப்பாகச் செய்திருக்கிறார் மாரிசெல்வராஜ். அது நம் உள்ளங்களின் அழுக்கைக் கழுவ வல்லது என நம்புகிறேன். அகற்றவேண்டும் என விரும்புகிறேன்.

இது ஒடுக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒடுக்குமுறைகளை சந்திக்காதவர்களுக்கன படம். இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனியத்தால் சூத்திரன் என அழைக்கப்பட்டு, தன் வரலாறு, பண்பாடு மறந்துபோய், பட்ட வலிகளையும் மறந்துபோய், ஆண்டவர்களாய், அடிமை செய்தவர்களாய் எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கான படம். நம்பூதிரி ஆட்சியாளர்களுக்கு முன்னால் முலை திறந்து காட்டி நின்ற, ஆதிக்க சாதி உட்பட அத்தனை  சாதி தாய்மார்களையும் வரலாறு மறக்கவில்லை. இப்படி தமிழ்நிலம் முழுவதிலும் தாய்களின் வலி மறந்துபோன பிள்ளைகளுக்காகவும் எடுக்கப்பட்ட படம்.

அதனால் தான் ஆனந்தின் நோட்டில் "முட்டை" வரைகிறார் இயக்குனர். யோகிபாபு சொல்லும் சின்ன சி யா? பெரிய சி யா?என்பது நகைச்சுவையல்ல. ஆங்கிலக்கல்விக்கு எதிரான, அனிதாக்களின் கனவுகளின் மீது வளரும் கள்ளிச் செடியை, அழுக்குடை அணிந்துகொண்டு ஆசிரியர் ஒழுங்காய் வராமல் இருக்கிற அரசுப்பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதி அகிலாக்களின் மூளையையும் தின்னும் நச்சுச் செடியை  அறுக்க முனையும் அரிவாள். அதை ஏந்த வேண்டியவர்கள் நாம் அனைவருமே.

பரியேறும் பெருமாளின் புளியங்குளத்திலிருந்து 30 கிமீ தூரத்தில் விரிந்து கிடக்கிறது ஆதிச்சநல்லூர். அங்கே, "கருப்பி" மீது ஏன் ரயில் மோதியது என்று வேலும், அரிசியும் , வாளும், பானையும் பேசிக் கொண்டிருக்கின்றன . பாவம் அவைகளுக்குத் தெரிந்திருக்கவில்லை கருப்பியைக் கட்டியிருந்த துண்டு "நூல்" கொண்டு செய்யப்பட்டதென்று.

என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
01/10/2018



2 comments:

  1. உங்களது பரியேறும் பெருமாளின் உணர்வுபூர்வமான விமர்சனத்தை இன்று தான் படிக்க நேர்ந்தது மிகப்பெரிய நன்றிகள் ஏனென்றால் மாரி செல்வராஜ் எனது உறவினர். நான் புளியங்குளத்தை சார்ந்தவன். பரியேறும் பெருமாள் கடத்திய வலி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் நீண்டுகொண்டே தான் இருக்கிறது. இன்றோ வாள் தூக்கி நிற்க கர்ணன் வேறு வந்துவிட்டான். ஒரு சிறு திருத்தம் ஐயா உண்மையில் வரலாற்றில் கூறப்படும் ஆதிச்சநல்லூர் பரம்பு என்பது புளியங்குளம் தான். புளியங்குளத்தில் உள்ள பரம்புக்குத் தான் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புளியங்குளம் முற்றும் முழுக்க தேவேந்திர குல வேளாளர்கள் நிறைந்த ஊர். ஆகவே அன்றைய ஆதிக்க மனநிலையிலோ அல்லது அதிமேதாவி தனத்தினாலோ ஆதித்த நல்லூர் என்று ஆவணப்படுத்த பட்டிருக்க வேண்டும். உங்களது ஆத்மார்த்தமான விமர்சனத்திற்கு புளியங்குளத்தானாக மிகப்பெரிய நன்றிகள்

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்