Tuesday 4 October 2022

தஞ்சைப் பத்து

 


தஞ்சைப் பெருவுடையார் கோவிலின்

ஒரு நாள் பொழுது.


காலம் : இராசராசன் காலம்

சான்று : கல்வெட்டு + திருவிசைப்பா

குறிப்புகள் அளித்தவர் : திரு தென்னன் மெய்ம்மன்


விடியற்காலையில் யாழ் ஒலி சிலம்பும். வட சிறகு தென் சிறகு வீடுகளில் இருந்து தளிச்சேரிப் பெண்டுகள் நாயகஞ் செய்து அழைத்து வரப்படுவர். உடுக்கை கொட்டு மத்தளம் சக டை இவற்றோடு நாடக சாலை என்ற முன் மண்டப மேடையில் விலங்கல் செய்து ஆடுவார்கள்.சிங் கடி வேம்பி மழலைச் சிலம்பி என்பன அவர்களின் பெயர்களுள் சில.


இவர்கள் ஆடக் கூடிய பகுதிக்கும் கருவறைக்கும் இடையில்  பவனப் பிடாரன் தலைமையில் வா மசிவன் சோமசிவன் என்று ஆகம விதிகளின்படி தீக்சை பெற்ற ஓதுவார்கள் திருப்பதியம் விண்ணப்பம் செய்வர்.

கருவறை திறந்திருக்கும் அதன் முன்பாகக் கீழைத் திருமஞ்சன சாலையில் பொன்னின் கொள்கைத் தேவர் திருமேனி நடுவீற்றிருக்கை செய்து ஸ்ரீ பலி கொள்ளும். அதாவது பொலி பொலி என்ற ஒலியை உள்வாங்கும். அதன் எதிரில் தங்கத் (பொன்) தாளம் கீழும் மேலுமாக இசைக்கப்படும்.



கருவறையின் கொப்பரை வாசல் (உள்வாசல்) வரை மக்கள் செல்லலாம். இடைச் சுவரின் வழியே சுற்றி வந்து முதல் தளம் செல்லலாம். அம்போதம் என்ற உட் கூட்டை எட்டிப் பார்க்கலாம். கருவறைக் கடவுளுக்கு மலர் தூவி விடலாம். கரணச் சிற்பங்கள் உள்ள பகுதியைச் சுற்றி வரலாம்.

ஏல அரிசியும் இலn மிச்ச வேரும் சென் பக மொட்டும் ஊற வைத்த நீர் கருவறைக் கடவுளுக்கு நீராட்டப் பயன்படும். திருச்சுற்று மாளிகையில் மக்கள் தரை தளத்திலும் முதல் தளத்திலும் சுற்றி வந்தனர் . மற்றபடி  உள்ளே நந்தவனம் தான்.



உடையார் சாலையில் பொறிக்கறி அழுது போனகப் பழவரிசி முதலாக உணவுகள் சமைக்கப்படும்.

சிவயோகியர் அங்கே ஒரு வேளை மட்டும் உண்டனர்.

அனைத்துப் பரிவாரக் கோயில்களிலும் திருவிளக்கு ஏற்றப்பட்டிருக்கும். பிள்ளையாருக்கு வாழைப்பழ அமுது படைக்கப் பட்டிருக்கும்.



ஒரு எச்சில் பணிக்கம் இடுப்பு உயரத்தில் இருக்கும். வெற்றிலை போடுகிறவர்கள் அங்கே துப்பலாம். சண்டேச தேவர் கோயில் திண்னையில் தங்கக் குடத்தில் குடிநீர் வைக்கப்பட்டிருக்கும். மக்கள் தாங்களே எடுத்துக் குடிக்கலாம்.

கோட்டை சூழ்ந்த கோயிலில் மெய்க்காப்பாளர்கள் அனைத்து வாசல்களிலும் இரவு பகலாக இருப்பர். அரச மரபினர் வரும் வடக்கு வாசல் விருந்தினர் வரும் முகப்பு வாசல் மற்றையோர் வரும் அணுக்க வாசல் அனைத்தும் காவாலாடு திறந்திருக்கும்.

தங்கம் வயிரம் முத்து என அரசின் செல்வம் அங்கே இருக்கும்.

இந்தக் குறிப்புகளை அடியொற்றி 2020 ஆம் ஆண்டு பத்து வெண்பாக்களும் ஒரு வேட்டற்பாவும் இயற்றினேன். 

 

வேட்டல்

(பஃறொடை வெண்பா)

வள்ளுவன் கால்மோதி தென்கடல் நீருடைய/

துள்ளியது காற்றேறி தாடகைம லைமேவி/

தண்பொதி கையருவி தானாடி  ஓங்குபுகழ்/

நல்பரங் குன்றின் படியேறி வானேகி/

தென்மதுரை வீதிகளில் தீராந டம்புரிந்து/

காவிரி யாறடைந்து கல்லணையில் நீராடி/

தஞ்சைப் பெருவுடையான் தாளேகி அஞ்சா/

பெருமன்னன் ஆசான் கருவூரார்ச் சொல்லாக/

தீந்தமிழி சைக்கு மடா./

 

விலங்கலாடுதல்

கீழ்வானி லாயிரங்கை ஊழ்தீர்க்க ஏறிவர/

யாழோசை பாயிரமா யாழியலை போலுயர/

நாயகஞ் செய்தாறு போலதளிப் பெண்டிர்/

விலங்கலாடுஞ் சாலைசேர் வார்.   1

 

உடுக்கையொடு மத்தளமும் ஊதும் சகடை/

ஒலியோடு கொட்டதிர ஓடும்மே கத்திரை/

விண்டுவான் பார்க்க பெருவுடையான் நேர்நின்று/

ஆடுவார் சீர்கொள் நடம்.       2

 

காற்று மலையசைக்கும் கண்ணறியாக் காட்சியென/

பண்மாறி யாழிசைக்க பெண்ணாற்றல் விண்திறக்கும்/

சிங்கடிசி லம்பியவர் சீர்விலங்கல் கண்டே/

மயங்காது கைதொழுமே யூர்.     3

 

திருப்பதியம் பாடுதல்

கருவறைக்கும் காலாடுஞ் சாலைக் குமிடைத்/

திருநடையில் வாமசிவன் சோமசிவன் ஆகமத்தால்/

தீச்சைபெற்ற ஓதுவார்கள் தீந்தமிழால் ஓதிடுவார்/

தேனாந் திருப்ப தியம்.                   4

 

கருவறைதி றந்திருக்கக் கண்முன் குணக்கின்/

பெருவறைமுன் றில்கொள்கைத் தேவர் திருமேனி/

வீற்றிருக்கை செய்து பொலியென் றொலியேற்/

றருளமேல்கீழ் பொன்செய்தா ளம்./          5

 

நீராட்டும் திருவமுதும்

ஏலரிசி செண்பகமி லாமிச்ச மூறியநீர்/

தூலநிலைத் தெய்வவுரு நீராட்டத் தேறியதோர்/

தீம்புளியி லாதப்பொ ரிக்கறியும் தீஞ்சுவைசேர்/

போனகமும் தான முது.                  6   

 

கோவிலுக்குள் மக்கள் செய்கை

கொப்பரைவா யில்சேர்ந்தே யெல்லோ ருமவன்தன்/

ஒப்பிலாவு ருப்படிமங் கண்டா ரிடைசுவற்றி/

னப்புறமாய்ச் சுற்றிவந்து தட்டே றியம்போதத்/

துட்புறமா யெட்டிப்பார்த் தார்.       7

 

கருவறை யுள்ளே யிருகை நிறைய/

நறுமலர் கொண்டே எவரு மவனை/

அருந்தமி ழாலே தொழுது வணங்கி/

சொரிந்தி டுவாரே மலர். /           8

 

திருச்சுற்றில் மக்கள் வெள்ளம்

சிவனாடுஞ் சிற்பங்கள் சிந்தைமகிழ் விக்க/

அவனாடும் நாட்டியத் தின்கர ணங்கள்/

தெவிட்டாது நாளும்கண் ணுற்றே நடப்பார்/

நவிரம்போல் கற்றளி யுள்.               9

 

திருச்சுற்று மாளிகையு யர்மாடக் கங்கும்/

கருவறைச் சுற்றிவருங் கல்மண் டபமும்/

பெருக்கில் கரைதழுவுங் காவிரி நீராய்/

ஒருங்கி னமாந்தர்க ளால்.              10

 


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்