Wednesday 16 August 2017

தரமணி

     தரமணி..
     ஒரு இறந்த காலத்தின் நிகழ்காலத்திலிருந்து தொடங்குகிறது படம். ஓடுகிற வண்டியின் சக்கரத்தின் காற்று வெளியேறும் போது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முதல் முடிச்சு விழுகிறது. அரவமற்றச் சாலையில் நம்முடைய வண்டி பழுதானால் உலகமே தொலைதூரத்தில் இருப்பதாய் உணர்கிற நாம், ஏதோ ஒரு வண்டி நிற்பதை எளிதாகக் கடந்துசெல்கிறோம் என்பதை அரங்கத்தின் இருளில் அறிய நேர்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறையிலும் நம்மைப் போன்றவர்களே வேலை செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விளக்கங்கள் தேவை என்பதை உணரும் போது, பொருளாதாரச் சுழற்காற்றுப் புரட்டிப் போட்டிருக்கிற மனங்களின் ஆசை நெருப்பு மடியில் சுடுவதை மறுக்க முடியவில்லை. முட்டிக்கொண்டு நிற்கிற சிறுநீராய் உள்ளத்தின் கழிவுகள். அதைக் கண்ணை மூடி வெளியேற்றிய பின் படத்தோடு பயணம் செய்கிறது மனம்.

     உணர்ச்சிகளின் தேடல்களே நிகழ்வுகளைத் தீர்மானிக்கின்றன. உணர்வுகளின் தொடர்ச்சிகளே கதையாய் நகர்கிறது. ஐம்பத்தி இரண்டு வயதில் நெருடல் இல்லாமல் தரமணியைப் பார்த்தேன் என்பது ஒரு சின்ன வியப்பே. இங்கே நெருடல் என நான் குறிப்பிடுவது, தமிழ் மரபிலிருந்து நாம் விலகியபின் நம் உள்ளத்தில் குடிகொண்ட தருக்கத்திற்கு உடன்படாத ஒரு சரக்கையே. ஆனால் இந்தச் சரக்கையே பண்பாட்டு விழுமியங்கள் என்று பழகிப்போனோம் என்பது மனிதகுலத்தின் அவலம்     இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கீழடிக்குச் சென்றிருந்தேன். தோண்டப்பட்டுக் கிடந்த குழியொன்றில் இறங்கி பண்டைய சுவர் தொட்டபோது இனம்புரியாத உணர்வில் உள்ளம் நிரம்பியதை உணர்ந்தேன். ஏனோ சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அகம் புறம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பருகினேன். எம் முன்னோர் வாழ்வியல் கொஞ்சம் புரிந்தபோது, அந்த வாழ்வின் தொடர்ச்சியின் எச்சங்களை என் ஊரில் நேரில் கண்டிருந்ததும் உறைத்தது.  “தரமணிபற்றிச் சொல்கையில் இப்படி எங்கெங்கோ போவதைத் தவிர்க்க முடியுமா தெரியவில்லை.

மக்கா அந்த ஆச்சி நமக்குச் சொந்தம் டே… ” ஒங்க தாத்தாவ கெட்டிக்கிட்டு தான் அங்கே இருந்து வந்தா. ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம் டேஒரு நா எறங்கி மேலத்தெருவுக்குப் பொயிற்றா..


அவ்வோ வீடு அங்கேயா இருந்தது?


இல்ல டேபாட்டா வீட்டுக்குப் போனா. அன்னைக்கு இருந்து அங்கேயே இருக்கா.


அப்பொ அந்த சித்தப்பா?


அது தாத்தாவுக்கு மகன்தான்

     வாழ்க்கையின் இன்ப துன்பங்களை எளிதாகக் கடந்து வாழ்ந்த ஒரு காலத்தின் பேச்சுக்கள் தான் இவை. இப்படி நான் பார்த்ததும் கேட்டதும் நிறைய. ஆணைப் பிடிக்காமல் சேர்ந்து வாழ்வதைத் தவிர்த்து சட்டென்று விலகிவிடுகிற வசதி பெண்களுக்கு இருந்தது. பிரிந்துவந்தப் பெண் தவறாகப் பார்க்கப்படவில்லை. அதைவிட முக்கியமானது அந்த ஆணும் மற்ற ஆண்களால் கையாலாகதவனாகப் பார்க்கப்படவில்லை . இருவரும் ஒரே ஊரில் வேறு வேறு வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறார்கள். (இதைப் படிக்கிற நாற்பத்தி ஐந்தைக் கடந்த நிறைய பேருக்கு இந்த நினைவுகள் வரக்கூடும்). விதவைத் திருமணங்கள் எளிதாக நடந்திருக்கின்றன. அவர்களின் குழந்தைகளுக்கும் சொத்துரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கை எளிமையாய் இருந்திருக்கிறது.
     சங்க இலக்கியங்களும் இதையே சொல்லி நகர்கின்றன. அதனுள்ளே புகுந்தால் இந்த மடல் இன்னும் நீண்டுகொண்டே போகும். பண்டைய தமிழர் வாழ்வியலும் அதன் எச்சங்களாக எனக்குக் கிடைத்தவையும் எனக்குள்ளே ஒரு கவிதையைப் பெற்றெடுத்தன.
   
  " கடவுள்கள் சூடும் முன்னே
   காதலும் வீரமும் சூடியதில்
   களித்துக்கிடந்தன
   எம் நிலத்தின் பூக்கள் "
 
இந்தக் கவிதை என்னுள்ளே பூத்தபோது ஏற்பட்ட அதே உணர்வுகளோடு தரமணியும் என்னைக் கடந்து போயிற்று.

       அதிகமாய்ச் சிக்கல் ஏற்படுத்திக் கொள்ளாமல் மிக எளிதாய் உறவாட முடிகிற உணர்வுகளோடு படம் நகர்கிறது. இரவில் ஔவையாரம்மன் பூசை செய்து பாலியல் நெருக்கடிகளின் அனுபவப் பகிர்வுகளை பரிமாறிக்கொண்ட உளவியல் அறிவின் தொடர்ச்சியை, ஒரினச்சேர்க்கையின் நெருடல்களை எளிதாகச் செரித்துக்கொண்ட ஒரு பண்பாட்டின் நீட்சியைக் கதையின் நிகழ்வாய்க்கொண்டிருப்பது சிறப்பு. ஒரு பெண்ணால் அதைப் புரிந்துகொள்ள முடியும் என்பதும், அதை இன்னொரு ஆணுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதும், உற்றார் என்ற தமிழ்ச்சொல்லின் ஆழத்தைக் கண்கூடாக்குகிறது. நீண்ட காலமாய் வேறொரு போர்வையைப் போர்த்திக் கொண்டதில், எம் பண்பாட்டுக் குளிர்ச்சியை எவ்வளவோ இழந்து விட்டோம். நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

       இதை விமர்சனம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு பார்வையாளனின் பதிவு மட்டுமே. இதுபோன்ற கதைக்களம் கொண்ட சில படங்களைப் பார்த்திருக்கிறேன், சில நெருடல்களோடு. ஒரு வேளை அதற்கு நானும் காரணமாயிருக்கலாம். ஒன்று புரிகிறது, ராம் நீங்கள் ஒரு சிறந்த இயக்குநர். இயல்புகளைச் சொல்ல முனைந்து வெற்றிபெறுகிறீர்கள். எல்லா இடங்களுக்கும் பொருந்துகிற காட்சி அமைப்புகள். நாற்று நடும் பெண்களைக் கொண்டும் உங்களால் இந்தப் படத்தை நிகழ்த்திக்காட்டிவிட முடியுமென்று நினைக்கிறேன். இது மண்ணின் இயல்பு. படத்தில் வரும் நிறைய உரையாடல்கள் வேறு வேறு வட்டாரவழக்குகளில் காலங்காலமாய்ப் பரிமாறப்பட்டவையே. என் இலையிலும் கூட. எல்லோருக்கும் ஏதோ ஒரு அடி விழுந்திருக்கிறது. என்மீதும் கூட. இதைச் சொல்லமுடியாதவர்கள் மேலை நாகரிகம் என்று இன்னும் ஒரு கம்பளியைப் போர்த்திக் கொள்கிறார்கள். உள்ளே இருப்பவனுக்கும் புழுங்குகிறது, வெளியே இருந்து பார்ப்பவனுக்கும் புழுங்குகிறது. மன அழுத்தமும் அதற்கான வடிகால் தேடல்களுமென முடிந்துபோகிறது வாழ்க்கை. போர்வைகளைச் சுமந்து கூன் விழுந்த முதுகுகளை வைத்துக்கொண்டு என்ன நடந்தாலும் கேள்வி கேட்காமல் நடந்து கொண்டிருக்கிறோம்.
     அகச்சிறை உடைத்து அழுத்தம் கரைத்து வீதிக்குவந்து நமக்காக வாழும் நாட்கள் என்றுவரும் என்றக் கேள்வியோடு அந்த ஏழாவது மாடி அரங்கம் விட்டு  Lift க்குள் நுழைகிறேன். அங்கே குப்பிகள் நிறைந்த பையோடு “அப்பா” என்ற அந்தச் சிறுவனின் பதில் குரல், இன்னும் நைந்துபோன போர்வைகளின் அழுக்கு நூலில் சிக்கித்தவிப்பதைத் தவிர்க்கமுடியாமல் மௌனமாய் வெளியேறுகிறேன்.


 வாழ்த்துகள் ராம்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்