Friday 15 January 2021

வீட்டைக் கொளுத்திவிடாதீர்கள்

 


 என்னைப் பார்க்கும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது. கழிந்த சில ஆண்டுகளாகப் பொங்கலன்று மாலையே ஓர் அயற்சி வந்துவிடுகிறது. மறுநாள் மாட்டுப்பொங்கலன்று அஃது இன்னும் பெருகிவிடுவதாகவே உணர்கிறேன். என்னைப் போன்று உணரும் அல்லது சிந்திக்கும் பலருடைய பதிவுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இன்று 15-01-2021 காலையில் கண்ணில் பட்ட முதல் பதிவு மாமாவினுடையது. இன்றைய சமூகத்தில் இல்லாத மாட்டிற்கு ஒரு விழா. இறைவனுக்கு இணையாக எல்லாக் குடும்பத்திலும் இருந்து மறைந்து விட்ட உழவனின் தோழருக்கு விழா.....மாட்டுடன் எனது பழைய நினைவுகளை அசைபோட ஒரு விழாஎன்று பதிவிட்டிருந்தார்.

அடுத்து தம்பி செயப்பிரசாத்தின் மீள்பதிவு. எண்பதுகளில் நடந்த காவிரிக்கரையின் பொங்கல் குறித்தானது. “4 மணிக்கே அம்மா அப்பா எழுந்திடுவாங்க அப்பா 2,3 நாட்களுக்கு முன்பே வயலில் விளைந்திருக்கும் நெல்லை கொஞ்சம் அறுத்து எடுத்துக் காய வைத்து இருப்பார் வீட்டில் பொங்கலுக்குப் புது அரிசியில் பொங்கல் வைக்க . பொங்கல் அன்று காலை எழுந்தவுடன் அம்மா அந்த நெல்லை எடுத்துக் குந்தாணியில் குத்தி புடைத்துக் கொண்டு இருப்பார் மற்றவர் அனைவரும் எழுந்து வாசலில் பொங்கல் வைப்பதற்கு ஆக வேண்டிய வேலைகளைப் பார்ப்போம்என்று தொடர்ந்தது அந்தப் பதிவு.

உள்ளுக்குள் மெல்ல ஒரு வெற்றிடம் ஏற்படுவதை உணர்கிறேன். வெகுகாலமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு விழாவில் மாற்றங்கள் மெல்ல எழுவது தவிர்க்க இயலாததுதான். ஆனால், பண்பாட்டுக் கூறுகளை மறந்து அல்லது இல்லாது அந்த விழா நடக்கும் போது மெல்ல மெல்ல ஒரு சடங்காக அந்த விழா மாறுவதைக் காண்கையில் வருத்தமும் அயற்சியும் தோன்றுகிறது.

 


சொந்த வரலாற்றைப் படிக்காத இனம் தன் பண்பாட்டுக் கூறுகளை இழந்துவிடும்என்பதில் ஐயப்பாடு ஏதும் தேவையில்லை என்று சான்றளிக்கின்றன தற்காலத்தைய பொங்கல் நிகழ்வுகள்.

நேற்று 14-01-2021 பொங்கல் வைக்க நல்ல நேரம் குறித்த பதிவுகள் சலிப்பைத் தந்தன. கடந்த சில ஆண்டுகளாக இதைப் பார்க்கிறேன். சடங்கு என்னும் கிடங்கில் தள்ளி, தைப்பொங்கலைச் சாவடித்து விடாதீர்கள் தமிழர்களேஎன்று நல்லநேரம் பார்க்கும் தமிழர்களைப் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது. இதை அதிகமாகச் செய்வது படித்தவர்(?)களே என்பது இன்னும் சிறப்பு. இதில் ஒரு …. … மாட்டுப்பொங்கல் வைக்கவும் நல்ல நேரம் குறிப்பிட்டிருந்தது.

காலை 11:50 – 12:30க்குள் பொங்கல் வையுங்கள் என்கின்றன பத்திரிக்கை குறிப்புகள். அந்த நேரத்தில்தான் தை மாதம் பிறக்கிறதாம். இதை வானியல் படி சரி என்று வைத்துக்கொண்டால், இதே கூட்டம் எல்லா ஆண்டுகளிலும் திசம்பர் 31 நள்ளிரவில் கோயில்களில் வரிசையில் நிற்கிறதே! அதற்கு இரவிலும் பூசை செய்து வணங்கி வருகிறதே! ஆண்டின் முதல்நாள் லட்டுவாங்கக் கிலோமீட்டர் நீள வரிசையில் காத்துக் கிடக்கிறதே! போதாதென்று ஆகமம் வேறு பேசித் திரிகிறதே! சனவரியில் கால்கடுக்க நின்று வணங்கும் புத்தாண்டு, தை 1 ல் வராது என்றும் பிதற்றுகிறதே! இந்த முரண்களையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது.

பிறந்ததிலிருந்து உழவுக் குடி மக்களாக வேளாண்மையைத் தாங்கிப் பிடித்த நண்பர்கள், உறவுகள் கூட வேறு வேலை வணிகம் என்று மாறி, வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டு, அறியாமை என்பதைக் கூட அறியாமல் பொங்கலுக்கு நல்ல நேரம் பார்ப்பது வேதனையைத் தருகிறது. வேளாண்மை செய்யாவிட்டாலும் அது குறித்து அறிந்திருக்கிறோமா? அவர்களது உழைப்பை, உணர்வை மதிக்கிறோமா? பல்லாயிரமான்டு வழக்கத்தை, நாம் அறியாத காரணத்தால் யாரோ ஒருவர் மாற்றிவிட முடியும் என்றால், நாம் அதற்கு அடிமையாகித் தொடர்ந்தோம் என்றால் நம் அறிவும் கல்வியும் வீண்தானே? அன்பு உறவுகளே, இரவில் வெளிச்சம் வேண்டுமென்பதற்காக வீட்டைக் கொளுத்திவிடாதீர்கள்.

நகர வாழ்க்கையில் பொங்கலிடுவதில் இன்னும் சிக்கல். முற்றம் இல்லை. புரையிடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் வாயிலைத் திறந்தால் தெரு தட்டுப்படாத அடுக்ககங்களே மிகுதி. மொட்டை மாடியில் இடலாம் என்றால் பொதுவான குடியிருப்பில் அஃது அத்தனை எளிதல்ல.

எல்லோரும் இணைந்து செய்தால் சாத்தியமாகும். ஆனால் அதற்கான வாய்ப்புகளில்லை. விறகு, புகை, நெருப்புப் பாத்திரங்களில் ஏற்படும் கரி(#) இப்படி எத்தனையோ(??!!) சிக்கல்கள் இருக்கின்றன. எனவேவழக்கம் போல அடுப்பங்கரை(?) பொங்கலாகவே இடவேண்டியிருக்கிறது. எப்பொழுதும் போல அஃது ஒரு சமையல் வேலையாகவே தோன்றுகிறது. எல்லோரும் கலந்து நிகழ்த்தும் விழாவாகத் தோன்றவில்லை. பரவாயில்லை எல்லோரும் சேர்ந்து நின்று சமையலறையிலேயே பொங்கலிடலாமென்றால் அந்த 640 சதுர அடி வீட்டில் அடுக்களை கையகலந்தான்.

பொங்கல் படையல் இடும்போதும் இதே சிக்கல்தான். கிழங்கு காய்கள் கரும்பு இவையெல்லாம் எதற்கு என்று தெரியாமல், இவற்றை உண்பதற்கும் பழக்கப்படுத்தப்படாத குழந்தைகள் எப்படி விழாவின் உணர்வைப் பெறுவார்கள் என்று புரியவில்லை.

பொங்கலுக்கான முன்னேற்பாடுகளில் ஏராளமான மாற்றங்கள். சுண்ணாம்பு அடிப்பது என்ற சொற்கட்டு கூட நகரங்களிலிருந்து காணாமல் போய்விட்டது. ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயின்டுஅடித்தால் போதும். வெளிக்காற்றும் வெளி ஈரமும் புழங்காத வீட்டு அறைகளில் தூய்மை செய்வது என்பதுகூடத் தனியானதொரு வேலையாயில்லை. எங்கேயோ யாரிடமோ எட்டு அல்லது பத்து மணிநேர வேலையில் சேர்ந்து ஞாயிறு ஓய்வு என்ற அனுமதியும் கிடைத்ததால் (வேளாண் குடிகளுக்கு இப்படியான வாழ்வியல் இல்லை) வாரம் ஒரு முறை ஏற்கனவே அது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

கைப்பேசியை எடுத்து அமேசானில் சட்டையைத் தருவித்துக் கொள்ளத் தெரிந்த குழந்தைக்கு கோடித் துணியும்பொருட்டாயில்லை. பாத்திரங்களை விளாகி வைக்கலாமென்றால் அப்படியான ஏனங்கள் ஏதும் இல்லை. மேல்நிலைத் தொட்டியிலிருந்து குழாய் வழியாகக் குளிக்கும் அறைக்குள் நீர் கொட்டியதும் குத்துப்போணிகளும் அண்டாக்களும் காணாமல் போயின. சுவரில் மாட்டும் கொதிகலன்கள் வெந்நீர்தோண்டிகளை (கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்த அதே தோண்டிதான்) அப்புறப்படுத்தின. தேவையில்லை என்றால் தூக்கி எறிந்துவிடும் நெகிழிக் கலன்கள் (உலகை அழிக்கின்றன என்பது இன்னொரு விடயம்) வீட்டை நிறைத்தன. கழுவிக் காய வைப்பதற்கு ஏதுமில்லை பள்ளிச் சீருடையில் இடம்பிடித்த குழந்தையின் காலணிகளைத் தவிர.


   இந்தக் கரிப்பிடித்த பானை  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா என்று ஐயப்பாட்டோடு பார்க்கும் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லித்தரப் போகிறோம். பொங்கல் வருகிறது என்பதற்கான எந்தச் செய்தியும் / வேலையும் குழந்தைகளை ஈர்க்கும்படியாக நாம் செய்யவில்லை / சொல்லவும் இல்லை. குழந்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பண்டிகை என்பது விழலுக்கு இறைத்த நீரே.

இன்று மாட்டுப்பொங்கல் என்பதை எப்படி ஒரு குழந்தைக்குப் புரியவைப்பது. காலையில் பாக்கெட்டில்வந்து விழும் பால், அங்காடியில் குளிரூட்டப்பட்டுக் கிடைக்கும் வெண்ணெய்”, விளம்பரத்தில் காணக்கிடைக்கும் மணல் மணலானநெய்”, அமேசானில் கிடைக்கும் வண்ணத் தாளில் சுற்றப்பட்ட வறட்டி (cow dung cake)“, இவையெல்லாம் மாட்டிலிருந்து கிடைக்கிறது என்று அந்தக் குழந்தைக்கு எப்படிப் புரியவைப்பீர்கள். சரி எப்படியோ புரியவைத்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம் இதெல்லாம் பசு, எருமையிலிருந்து தானே கிடைக்கிறது. அப்புறம் எதுக்குக் காளை மாட்டுக்கு கொம்புல கலர் அடிச்சு, பூவெல்லாம் போட்டுப் பொங்கல் வைக்கணும்என்று அந்தக் குழந்தை கேட்டால் நம் பதில் என்ன?
வா வந்து பாருஎன்று நகரத்திலிருந்து சிற்றூர்களின் வயல் காட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனால், “யண்ணே ஒரு மணிக்கூருக்கு ஐஞ்ஞூறு ரூவா. வெள்ளன எறக்கிட்டேன். பாத்துக்கோங்கஎன்று ஓட்டிக்கொண்டிருக்கும் டிராக்டர்களைதான் காட்டவேண்டியிருக்கும். சரி பசுப் புதிது புதிதா வேணும் தானே, அதுக்குஎன்று கூறி அலைந்தீர்கள் என்றால், கால்நடை மருத்துவமனை வாயிலில் செருமன் சினை ஊசிஎன்ற பலகை உங்களை வரவேற்கும். களைப்படைந்து விடுவீர்கள்.

கேரளத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு மொழிப் பாடம் நடத்தும் போது கதிரவன் உதிக்கும் திசை கிழக்கு, மறையும் திசை மேற்கு என்று சொல்லிக்கொடுத்துவிட்டு; புவியியல் பாடம் நடத்தும் போது கதிரவன் உதிக்கும் திசையில் இருக்கும் மலையைமேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats)” என்றால் எவ்வளவு குழப்பம் வருமோ, அவ்வளவு குழப்பம் பொங்கல் குறித்தும் நம் குழந்தைகளுக்கும் வரும் என்பதை மறுப்பதற்கில்லை. தவறு குழந்தைகள் மீதல்ல. கூறுகளைத் தொலைத்த நாமே அதற்குக் காரணம்.

இடையிடையே ஆப்பிப் பொன்கல்என்று ஒரு கூட்டம். ஐயோ.. ஐயோஇதுதான் பெருங்கொடுமை. தமிழறியாத அயலார் அப்படி வாழ்த்தினால் அது தமிழருக்குப் பெருமை. நம் பண்டிகையை அவர்களும் நினைத்துப் பார்க்கிறார்களே என்ற மகிழ்ச்சி. ஆனால் தமிழர்களே ஆப்பிப் பொன்கல்என்று கூவுவது இழிவின் உச்சம்.

பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் இன்னொரு சிக்கல். இளவயதினரின் உள்ளத்திலிருந்து பண்பாட்டுக்கூறுகளை அறுத்தெறிய அவற்றால் எளிதாக இயலுகிறது. (90’s kids சண்டைக்கு வரவேண்டாம். நாங்களும் சிலவற்றைத் திரையரங்குகளில் தொலைத்தவர்கள் தான்.) காலை மூன்று மணிக்கே திரையரங்க வாயிலுக்குச் செல்வதால் தொலைத்துவிடுகிற பண்பாட்டுக் கூறுகளைக் குறித்து அக்கறை ஏற்படுத்தாத / அறியப் படுத்தாத திரைப்படங்கள் பேசுவதென்னவோ விவசாயம்”, “பயிர்” “கல்விகுறித்ததாம். நகை முரண்.

சொல்லுவதற்கு இன்னும் இருக்கிறது. ஆனாலும் ஏதாவது ஓர் இடத்தில் கட்டுரை முடிந்தாக வேண்டுமே. அன்புக்கினிய தமிழினமே பொங்கலை ஒரு சடங்காக மாற்றிவிடாதீர்கள். பொங்கலை வைத்து விட்டால் நல்லகாலம் பிறக்கும், பொருள் சேரும் என்பதில்லை.. நல்ல வேளாண்மையும் நல்ல விளைச்சலுமே பொங்கல் வைப்பதற்கான அடிக்கூறுகள். அதிலிருந்து பிறழ்ந்து வேறு ஏதோ ஒன்றை நம் தலைமுறைக்குச் சொல்லிச் சென்றால் அது நம் பிழை. மன்னிக்க முடியாத பெரும் பிழை.

 

எங்கள் குடும்பத்திற்கு ஒரு வயல் இருந்தது. என் பாட்டனாருக்கு வேளாண்மையைத் தவிர வேறேதும் தெரியாது. என் தந்தை படித்திருந்தார். ஆனால் வேளாண்மையையே தொழிலாகக் கொண்டிருந்தார். எனக்கு வயல் இருக்கும் இடம் தெரியும், ஆனால் வேளாண்மை தெரியாது. என் மகனுக்கு வயல் எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. நாளை எனது பேரனிடம் வயலே இருக்காது. பொங்கல் மட்டும் எப்படிபொங்கலாகஇருக்கும். என்ன செய்யப்போகிறோம்.?

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்