Thursday 11 April 2024

தமிழர் வானியல் - பாரதி

 



தமிழர் வானியல்

 

 வாழ்வில் சில தவறுகள் திருத்த இயலாதவையாக, காலத்தே பயிர் செய்யாது கவலையுறும் உழவனின் ஆற்றாமையைப் போல உள்ளத்தை வாட்டுகின்றன. இதுவும் அப்படியான ஒன்றுதான்.

திருச்சிராப்பள்ளி நண்பர் மறைந்த தி.ம.சரவணன் அவர்களை நாள்தோறும் மாலை நடைப்பயிற்சியின் போது பெரும்பாலும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பலவாறும் உரையாடுவோம். நான் சென்னைக்கு இடம்பெயர்ந்த பிறகு சந்திப்புக் குறைந்து தொலையொலிவியில் (Phone) உரையாடல்கள் தொடர்ந்தன. இடையே எனது முதல் நூலை அவரது கலைநிலா பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டோம்.

நூல் வெளியிட்ட 2018 ஆம் ஆண்டிலேயே அவரது உடல்நலம் சீர்கெடத் தொடங்கியிருந்தது. உடல் வலியும் உளவலியும் அவரை இயல்பினின்று பேரளவு மாற்றியிருந்தன. முகாமையாகச் செய்துகொண்டிருந்த எழுத்துப் பணியைக் கூட நிறுத்தியிருந்தார்.

அப்படியான ஒரு நாளில் சென்னையிலிருந்து சென்று அவரைச் சந்தித்தேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை 

“தோழர் அந்தக் கீழடுக்கில் உங்களுக்காக நூலொன்று வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

அவர் சொன்ன இடத்தில் ஐயா குணா எழுதிய ‘”வள்ளுவத்தின் வீழ்ச்சி”’ நூல் இருந்தது. நெடு நாட்களுக்கு முன் இந்த நூல் குறித்து ஏதோ பேசியிருக்கிறேன் போலும். “கையெழுத்திட்டுக் கொடுங்கள் தோழர்”’என்றேன். அவரால் இயலவில்லை. “நீங்களே எழுதிக் கொள்ளுங்கள் தோழர்” என்றார். “எவ்வளவு எழுதிய கை” என்ற மனவருத்தம் தோன்ற நானே எழுதிக்கொண்டேன்.

இறுதிக்காலம் அவருக்கு வலி நிறைந்ததாகவே இருந்தது. சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக வாரமிருமுறை சிறுநீர் பிரிப்பு (dialysis) க்கு உட்பட்டிருந்தார். தொண்டைக்குழியிலும், கை மணிக்கட்டிலும் அதற்கான இணைப்புகளோடு அவரைக் காண்பதே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

 “எல்லாம் சரியாகி வேலையைத் தொடர்வேன் தோழர்” என்ற அவரது சொற்களில் வாழவேண்டுமென்ற பேரவா நிறைந்திருந்ததைக் கண்டேன். ஆனால், அவரது வாழ்வு முடிந்துபோனது.

இரண்டு கிழமைகளுக்கு முன் ஒரு செய்தி அறிவதற்காக இன்னொரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது “வள்ளுவத்தின் வீழ்ச்சி” நூலில் அது கிடைக்க வாய்ப்பிருக்கும் என்றார். சட்டென்று நண்பர் தி.ம.ச. அளித்த நூல் நினைவுக்கு வர, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் தாண்டி, எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.

சில பக்கங்களைத் தாண்டும் முன்பே ஆறு ஆண்டுகள் வீணாகிப் போனதாக உணர்ந்தேன். ஏராளமானத் தரவுகளோடு பேராய்வாக மலர்ந்திருக்கும் வள்ளுவத்தின் வீழ்ச்சி நூலுக்காக, ஐயா குணா அவர்களுக்குத் தமிழினம் பெருங் கடப்பாடுடையது என்பதில் ஐயமில்லை.

 தமிழர் தம் வானியலும் மெய்யியலும் ஒன்றில் ஒன்றாக இருப்பதே தமிழரது பேரறிவின் வெளிப்பாடு. நேற்றென்பதும் நாளையென்பதும் இன்றென்பதும் இல்லை என்பதே அந்தப் பேருண்மை. ஓட்டத்தின் ஒவ்வொரு நொடியும் புதிதாய்ப் பிறக்கும் ஆற்றைப் போல எப்பொழுதும் புதிதாகவே இருக்கின்றது காலம். எழுதி வைக்கப்படுவனவற்றை விட அவ்வப்பொழுது கண்டு தெளிவதே சிறந்த வானியல் நுட்பம். ஏனெனில் இப்பொழுது கண்டது இனி வரப்போவதில்லை என்பதே தமிழர் முடிபு.

வானமண்டலத்தியல் கண்டுதெளிவோம் என்ற பாரதி தமிழர் வானியல் குறித்து அறிய முயற்சித்திருப்பான் அல்லது கொஞ்சமேனும் அறிந்திருப்பான் போலும். பாரதியின் கட்டுரைகளில் ஒன்றில் இந்தச் சிந்தனைத் தாக்கம் இன்னொரு விதத்தில் வெளிப்படக் காண்கிறேன்.

“விவேக போதினி' பத்திரிகையில் ஸ்ரீமான் ஆர். சாமிநாதய்யர் நமது பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழையொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்போது தைமாதப் பிறப்பை உத்தராயணத்தின் ஆரம்பமாக நாம் நினைப்பது தவறு; அது காட்சி அனுபவத்திற்கு விரோதம். மார்கழி மாதம் எட்டாந்தேதியே உத்தராயணம் தொடங்கிவிட்டது. அன்றைக்கே சூரியன் தனது தெற்கெல்லையிலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

மேற்படி ஸ்ரீ சாமிநாதய்யர் எழுதுகிறார் "ஒரு காலத்தில் வஸந்த விஷூவானது கார்த்திகை நக்ஷத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தினால் தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாக மாஸத்திற் பிறந்திருக்கும். அதற்கு இரண்டாயிரம் இரண்டாயிரத்தைந் நூறு வருஷங்களுக்கப்பால், அந்த விஷூ அசுவினி நக்ஷத்திரத்தில் மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்தது." இங்ஙனம், வஸந்த விஷூவானது மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்த காலத்தில் உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கிற்று. அதற்கப்பால் கணக்குத் தவறிப்போய் விட்டது.

அயன "விஷூக்களின் சலனத்தை அறியாமலோ, அறிந்திருந்தும் கவனியாமலோ, ஸம்வத்ஸரத்தின் பரிமாணத்தை 20 1/2 நிமிஷம் ஜாஸ்தியாகக் கணித்து விட்ட படியால், அயன விஷூ காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20 1/2 நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழு நாள் பிந்திவிடும். மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேகநூற்றாண்டுகளாய் விட்டபடியால், புண்ய காலங்கள் 20,22 நாள் பிந்திப்போய் நியமங்களும் பிரத்தியக்ஷத்துக்கு விரோதமாயிருக்கின்றன.

சித்திரையும் வைகாசியும் இளவேனிற் காலமென்றும், ஆனியும் ஆடியும் முதிர் வேனிற்கால மென்றும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிற் படித்தோம். இது பல நூற்றாண்டுகளின் முன்பு சரியாக இருந்தது. மேற் கூறப்பட்ட கணக்குத் தவறியதனால் பருவக் காலத்தையும் தவறாக்கிவிட்டோம். இப்போது, இளவேனிற் காலம் பங்குனி மாதம் எட்டாந்தேதியில் பிறந்துவிடுகிறது. ஆதலால் , நம்மவர் அயன விஷு காலங்களிற் செய்யும் ஸ்நாநம், தானம் முதலிய வைதீகக் கிரியைகளெல்லாம் புண்ணிய காலங்கள் கழிந்து மூன்று வாரங்களுக்கு அப்பால் தவறாக நடந்து வருகின்றன. அயன விஷக்களை நேராகத் தெரிந்து பஞ்சாங்கத்தில் வருஷப்பிறப்பைச் சரியான நாளில் வைத்தால், பருவக் கணக்கும் நேராகும். கால நிலையை ஹிந்துக்கள் பல விதத்திலே மறந்திருக்கிறார்கள். உடனே செம்மைப்படுத்திக் கொள்ளும் திறமையை நமக்குத் தேவர்களும் ரிஷிகளும் அருள் செய்க என்கிறார். (பஞ்சாங்கம் என்ற கட்டுரை)

மற்றொரு கட்டுரையில் “நான் அவரிடம்: -- அதென்ன ஸ்வாமி? இந்த ப்ராம்மண ஸமூஹத்தில் வருஷந் தவறாமல் இன்றைக்கு ஆவணியவிட்டமா நாளை ஆவணியவிட்டமா என்ற சண்டை நியதமாகவே நடந்துகொண்டு வருகிறதே, காரணமென்ன? என்று கேட்டேன். அவர் சொன்னார்:- "இந்துக்களிலே பத்தாயிரத்தில் ஒன்பதாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர் அபண்டிதர்கள். பஞ்சாங்கமே முழுதும் தப்பிதம். உத்தராயண தக்ஷிணாயனக் கணக்கில் 22 நாள் தப்பிதம் போட்டிருக்கிறான்; இருபத்திரண்டுக்கும் இருபத்து மூன்றுக்கும் நடுவிலே; அதாவது, பஞ்சாங்கம் பிரயோஜனமில்லை. நம்முடைய வருஷ மாஸந் தேதியெல்லாம் தப்பிதம். இதைக் கவனிக்க நாதனைக் காணோம். ஆவணியவிட்டச் சண்டை நிர்த்தூளிப்படுகிறது. அஹோ! அபண்டிதா என்றார்.” (ஆசாரச் சீர்திருத்தம் என்ற கட்டுரை).

பாரதியின் கவலை அவர்களுடையது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாரதி தன் கட்டுரையில் கைக்கொண்ட ஐயத்திற்கு விடை காணாமல், தவறாகவுள்ள பஞ்சாங்கத்தையே தொடர்கிறோமா? பாரதி சொன்ன அயன விழுக்கள் மட்டுமல்ல விழுக்களின் மாற்றத்தினால் ஏற்படும் கோள்களின் இட மாற்றம் (புவிமையக் கணக்கீடு) குறித்து அறிந்தோமா? இல்லை கதிர்மையக் கொள்கைக்கும் (Heleo Centic) தமிழர் வானியலுக்குமான தொடர்பை அறிந்தோமா?

ஏப்பிரல் 14 ஐ நெருங்கிவிட்ட நேரத்தில் தையா? சித்திரையா? என்பதைவிட தையும் சித்திரையும் இன்று எப்படி இருக்கின்றன என்று அறிவதே சிறப்பு.

இவையெல்லம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றதா? ஆவலென்றால்,  விடை “வள்ளுவத்தின் வீழ்ச்சி” நூலில் இருக்கின்றது.


 


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்