Tuesday, 29 April 2025

பாவேந்தர் பிறந்தநாள் 2025



பேனாவுக்குள் பெருங்கடலை நிரப்பி
எழுதிய சொற்களின் ஈரம் காய
புயலை வேலைக்கு அமர்த்தியவன்.
கேட்கும் நொடியில் பாக்களின்
கேடுகள் களையும் மருத்துவன்,
ஆர்த்தெழும் தமிழால் குருதியில்
ஆற்றலைச் சேர்த்திடும் பாவலன்.
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
வானம்பாடி வயலுள் மறைந்தன்ன
கழிகடைப் பெண்களின் வீரம்மீள
தீயாய்ச் சொற்கள் கொளுத்தியவன்.
கைம்மை நோற்கும் பெண்களின்
கவலைகள் தீர்க்க முனைந்தவன்
மறுபடி ஒருமணம் புரிந்திட
மனத்தைச் செம்மை செய்தவன்
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
வேனிற்கால வேம்பின் கிளைபோல
உழவிடை மாந்தர்கள் சீரம்சாய
பெயலாய்ப் பாடல்கள் பாடியவன்.
இயற்கை தன்னைக் காதலால்
இயல்பாய் அணைக்கத் துடித்தவன்
நாட்டுப்புறத்தொடு காட்டுக்குறத்தியை
நல்மணம் செய்ய நினைத்தவன்
புரட்சிப்பாவலன் எங்கள் புரட்சிப்பாவலன்.
=======================
சிராப்பள்ளி ப.மாதேவன்,
29 / 04 / 2023
=======================

Sunday, 20 April 2025

வட்டப்பாலை

சிதம்பரத்திற்குச் சென்று விட்டுத் திரும்பிய வெள்ளிக் கிழமை (18-04 - 2025) இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கியது தமிழிசை குறித்தான பேச்சு. நண்பர் முத்துக்குமாரசாமியின் வீட்டின் மேசைமேல் கிடந்த வீணை எசு. இராமநாதன் எழுதிய "சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்" என்ற நூலே அதற்குக் காரணம்.

இசையறிவும், இசைக்கருவிகளை வாசிக்கும் திறனும் இசை குறித்தத் தேடலும் கொண்ட நண்பரோடு தமிழிசை குறித்தப் பேசசு என்பது மகிழ்வூட்டுவது. 

ஆப்பிரகாம் பண்டிதர் - அவர் வழி வந்த இசையாசிரியர் தனராசு - அவர் மாணாக்கர் இளையராசா - அவரை உள்வாங்கிக் கொண்ட முத்துக் குமாரசாமி, நினைப்பதை வாசித்துப் பார்த்து விட எதிரே ஒரு கின்னரப்பெட்டி . தாளக் கருவிகள். ஆம் அது ஒரு அழகிய சூழல்.

உறக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு நூலைப் படித்துப் பேசுவது, குறிப்பெடுத்து இசைப்பது என மூன்றேமுக்கால் மணி நேரம் கடந்து போனது. ஆனாலும் வட்டப் பாலையின் நுணுக்கம் சிக்காமல் இருந்தது. சரி, காலையில் பார்ப்போம் என உறங்கச் சென்றோம்.

காலையில் ஆறு மணிக்கெல்லாம் நூலைக் கையில் எடுத்துக் கொண்டேன். இசைக்கும் எனக்கும் தொலைவு மிகுதி. தமிழோடு கொண்ட காதலே நூலைப் படிப்பதற்கான உந்துதல். இளங்கோவும், அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும் அள்ளித் தெளித்தத் தமிழ்க் குறிப்புகளில் இசைமலர்கள் சிதறக் கண்டேன். பொறுக்கியெடுத்துக் கோத்துக் கோத்து வட்டப் பாலையைக் கண்டடைந்த போது நண்பரும் விழித்தெழுந்து வந்தார். கண்ட வட்டப் பாலையைக் காதுகளில் சேர்த்தார்.
செம்பாலை அறிந்தோம்.

அடியார்க்குநல்லார் அறிவுறுத்த, குரல் துத்தமாய் நரம்பு மாற கின்னரப்பெட்டியில் வல முறைத் திரிபில் படுமலைப் பாலை பிறந்த போது அடடா... உள்ளம் மகிழ்ந்தது.

குரல் கைக்கிளையாகச் செம்பாலை மெல்ல மெல்லச் செவ்வழிப் பாலையாய் ஒலித்த போது கின்னரப்பெட்டியின் கட்டைகளின்மீது முடத்தாமக்கண்ணியும், ஒளவையும் நாட்டியமாடக் கண்டேன். பாணர்களின் தலையில பொற்றாமரை அணிவித்தக் கரிகாலனும் பேருருவாய் நிற்கக் கண்டேன்.

தமிழிசை குறித்து அறிந்தது மட்டுமின்றி செவிப்புலன் சேர்த்து இன்புற்ற நொடிகள் மகிழ்வானவை. காலம் கூடும் போது எல்லாப் பண்களையும் இசைத்துக் கேட்க வேண்டும். கேட்கும் எல்லாவற்றையும் எழுதும் தமிழையும் யாம் பெற வேண்டும்.

இசைத்தமிழே வாழி.

======================
சிராப்பள்ளி ப.மாதேவன் 
20-04 - 2025
======================