Sunday 27 August 2017

ஆனைக்கா




       


     ஓராண்டுக்கு முன்பு நண்பரோடு திருவானைக்கா கோயிலுக்குச் சென்றிருந்தேன். நண்பர் வீடும் அருகிலேயே இருக்கிறது. கோயிலில் நுழைந்து கொஞ்சங் கொஞ்சமாக உள்ளே செல்லும்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். பெரும்பாலும் கோயில்கள் உள்ளே செல்லச்செல்ல மேடாகவோ அல்லது வெளியிலிருந்து கருவறை வரை சமதளமாகவோ
அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் திருவானைக்கா வெளியிலிருந்து உள்ளே செல்லச்செல்லத் தாழ்வாகிச் செல்கிறது. கருவறை முற்றும் தாழ்ந்தநிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது.



கோயில் கற்றளி மிகச்சிறந்த உயர்கலை நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய
கணிணி வழி வடிவகணிதத்திலும் எளிதாக வரைந்துவிட முடியாத வளைவுகள் கல்லிலே
செதுக்கப்பட்டிருக்கின்றன. அந்த முப்பரிமாண வளைகோடுகளின் ஒழுங்கமைதி என்னைப்
பெருவியப்பில் ஆழ்த்தியது. எத்தனைத் திறமையான தச்சர்கள், அவர்களை ஒழுங்குபடுத்தி
தன் மனதில் உருவகப்படுத்தியிருந்த கற்றளியைக் கண்முன்னே நிறுத்திய பெருந்தச்சன்,
இந்தப் பணியை முன்னெடுத்த மன்னன், மன்னனுக்கு தம் விளைச்சலின் பங்கைத் தவறாது
வழங்கிய மக்கள், மக்களுக்கு விளைச்சலை வரையாது கொடுத்தக் காவிரி அத்தனையும்
அந்தச் சிற்பங்களின் ஒழுங்கில் பெருங்கோயில் அழகில் என் கண்முன்னே வந்தன. காவிரி
என்னும் இந்தப் பேராறுதான் இத்தனைக்கும் மூலம். காவிரி இல்லையென்றால் இப்படி வேலைகளே இங்கு நடக்காமல் போயிருக்கலாம்.



உயிர்வாழ்தலின் முக்கியமான நீரைப் பெருங்கொடையாய்க் கொடுத்தக் காவிரியைப்
என்றென்றும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த மன்னனுக்கு வந்திருக்கலாம்.
அதனால் "நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவனின் ஒன்றேமுக்காலடிக் குறளுக்கு
இத்தனைப் பெரிய கற்றளி விளக்கத்தைக் கட்டிவிட்டான் போலும். நீரைத்தேடிப் போகிற
வடிவமாய்க் கோயிலையும் வடிவமைத்து விட்டான். எம் முன்னோர் மரபறிவை வியந்து
கொண்டே கருவறை அருகில் சென்றேன். சுவற்றில் ஓட்டைகள் மட்டுமே இருந்தன.நேராக
வாயில்இல்லை. நிறைய ஆண்களும் பெண்களும் முட்டி போட்டு நின்று கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்க்கிற புதியவர்களும் முட்டி போட்டு வணங்குகிறார்கள். எனக்குள் கேள்விகள்
வரத்தொடங்கின. தமிழர் அறிவின் உச்சமான ஒரு கோயிலில் எப்படி இது போன்ற நிகழ்வுகள்
நுழைகின்றன.
        ஆனைக்கா. ஆனைகள் இருந்தக் காடாக இந்த இடம் இருந்திருக்கலாம். கரிகாலனும்
ஆனைப்படை வைத்திருந்தவன்தான். பொருந்துகிறது என்றாலும் அது வேறு ஆய்வு. இந்த ஆனைக்காதான் திருவானைக்காவாகித் திருவானைக்காவில், திருவானைக்கோயில்
என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மரபறிவிலிருந்து விலகி வள்ளுவனை மறந்து சுற்றிலும்
நடந்த வேளாண்மையைப் புரிந்துகொள்ளாமல் "நீர் தலம்" என்று பக்தியோடு அழைக்கப்
படுகிறது. அந்தப் பெருங்கோயிலின் குறியீட்டைப் புரிந்துகொள்ள யாருமில்லை. பலவாறு
எண்ணிக்கொண்டு வீடு திரும்பினோம். கொஞ்சநேரத்தில் "உங்களுக்கு சாப்பாடு தயாராயிடுச்சி"
சாப்பிட வாங்க என்று நண்பரின் துணைவியார் அழைத்தார். இரவு உணவை அங்கேயே
முடித்துவிட்டுக் கிளம்பி என் வீடு வந்து சேர்ந்தேன்.
         எண்ணம் சுழன்றுகொண்டே இருந்தது. எம் முன்னோர் பேரறிவு எங்கே போயிற்று?
இந்தச் சுழற்சியில் ஒரு பாடல் எழுதினேன்.
 


அள்ளக் குறையா ஆனைக்காச் சிவனைச்
சொல்லக் குறையாச் சோணாட் டோம்பலைச்
செல்வங் குறையாச் செய்திட்டக் கோயிலில்
வல்லம் போல்வளைந்து காண்.

 
       இதன் பொருளை நாளை சொல்கிறேன். ஆனைக்கா செல்லும் அன்பர்களே, பேரறிவின்
வழித்தோன்றல்களே திருவானைக்காவில் மண்டியிடாதீர்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
எனக்குத் தெரியாது. வணங்கவேண்டுமா? வேண்டாமா? நான் சொல்லப் போவதில்லை. ஆனால்
ஒன்று உறுதியாகத் தெரியும். ஆனைக்கா பேரறிவின் சின்னம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்