Wednesday 27 June 2018

பிரிவுத் துயரம்

பொருளாதாரத்தின் துரத்தலில் வெகுதூரம் ஓடி வந்துவிட்டோம். உறவுகள் திசைக்கொன்றாய்ச் சிதறிப் பிரிந்துகிடக்கிறார்கள். சித்தி,சித்தப்பா, மாமா, அத்தை என்றக் குருதிச் சொந்தங்களின்றி வாழுகிற குழந்தைகளையும் பெற்றாகிவிட்டது. முதியோர் இல்லங்களும், குழந்தைகள் காப்பகங்களும், மனநல நடுவங்களும் நாம் ஓடிய ஓட்டத்தில் தோற்றுப்போனதன் அடையாளங்களாக எழுந்து நிற்கின்றன. நம் கடிகாரத்தின் முட்கள் காலக்கணக்கைச் சொல்வதை விடுத்துப் பொருட்கணக்கைப் பேசிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் பகல் நமக்கு இரவு என்ற ஒரே காரணத்திற்காக அயனாவரத்தில் நள்ளிரவு குளித்துக் கிளம்புகிற இளஞனைப் பார்க்கையில் பொருளாதாரம் படுத்தும் பாடு புரிகிறது.

பணம், பொருள், வீடு, நகர வாழ்க்கை, நாகரிக உடைகள், பல நாட்டு உணவுகள், இணையத்தில் விளையாட்டு, கைப்பேசியில் திண்ணைப் பேச்சு என பொருளாதாரம் புரட்டிப் போட்ட வாழ்க்கையில் பரண் மீது தூக்கி வீசப்பட்டன பல்லாங்குழிகளும் பல உளுத்துப்போன உள்ளங்களும். இந்த உள்ளங்களில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மனைவி என எல்லோரும் இருக்கிறார்கள். அப்படி ஒரு உள்ளத்தின் அழுகுரலைத்தான் இன்று வள்ளுவர் வாய்மொழியாகக் கேட்கப் போகிறோம்.

காமத்துப்பாலின் கற்பியலில் பிரிவாற்றாமை அதிகாரத்தில் வரும் குறள் இது.

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு  உரை. 

மணமுடித்து சில நாட்களில் வேலை மற்றும் பொருள்தேடிப் பிரியப் போவதாய்ச் சொல்லும் கணவனிடம் மனைவி சொல்வதாய் வள்ளுவர் சொன்னக் குறள் இது.

"செல்லாமை"  என்றால் கண்டிப்பாக எக்காலத்திலும் பிரிந்து செல்லாமல் இருப்பது என்று பொருள். தற்காலம் பிரியாமல் பிறிதொரு நாள் பிரிவேன் என்றால் "இப்பொழுது செல்வதில்லை" என்றப் பொருள் தரும் சொல்லை வள்ளுவர் எடுத்தாண்டிருப்பார்.

"உண்டேல்"  என்றச் சொல்லாடல் ஆழம் மிகுந்தது. அது மிகத் தெளிவாய் ஒற்றைப் பொருள்பற்றி நிற்கிறது. செல்லாமை என்பதே இறுதிப் பொருள் தரும், அதை இன்னும் உறுதி செய்ய "உண்டேல்" என்கிறார்.

"செல்லாமை யுண்டேல் எனக்குரை"  என்னைப் பிரிந்து செல்வதில்லை என்றால் என்னிடம் சொல் என்று துணை தன் இணையிடம் சொல்கிறாள்.

அடுத்துவரும் "மற்றுநின்" என்றத் தொடர்வழி பெண்ணின் உள்ளத்தை எத்துணை நுட்பமாக பேராசான் சொல்கிறார் பாருங்கள். நீ பிரிந்து செல்வதில்லை என்பது எனக்கானது, அதைவிடுத்து மற்ற எதுவாயினும் அது என்னுடையது இல்லை என்று துணையின் உள்ளவேட்கையைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லும் மிகநுட்பமான சொல்லாட்சி இது.

"வல்வரவு"  என்பது அடுத்த சொல். மிகவிரைந்து வருவது எனப் பொருள் தரும். வேலைமுடித்து திரும்பி வருவதற்கான அத்தனைத் திட்டங்களும் தீட்டியாகிவிட்டது. கணவன் சொன்ன நாளில் திரும்பி வந்துவிடுவான். ஆனாலும் மனைவி என்ன சொல்கிறாள்?

"வாழ்வார்க்கு உரை"  என்கிறாள். நீ திரும்பி வரும்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் போய் உன் வல்வரவைச் சொல் என்கிறாள்.

செல்வதில்லை என்றால் என்னிடம் சொல்  அதுவன்றி விரைந்து திரும்பி வருவேன் என்பதை நீ வரும் வரை வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் சொல் என்கிறாள் துணை. அப்படியெனில் கணவன் திரும்பி வரும் போது அவள் உயிருடன் இருக்கமாட்டேன் என்கிறாளா?

இங்குதான் பேராசான் கோடி கோடிப் பெண்களின் குரலாய் ஒலிக்கிறார்.

மணம் முடித்தவுடன் தனிக்குடித்தனம் என்பது பண்டைய தமிழ் மரபு.  அவர்கள் தங்கள் உள்ளத்தாலும் உடலாலும் அறிந்து, தெரிந்து நல்வாழ்க்கையும், நன்மக்கட்பேற்றையும் பெறவேண்டி இந்த மரபு தமிழர்களால் பின்பற்றப் பட்டது. தமிழின் இலக்கியச் செல்வங்களில் இது காணக்கிடைக்கிறது.  அது மட்டுமல்ல, இயற்கையின் பெருவிதியும் அதுதான். இயற்கை எப்பொழுதும் தன் இயல்பு மாறாமல் இயங்கிக்கொண்டே  இருக்கிறது.  அதன் இயக்கத்தில் உயிர்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குருவிகளும், குரங்குகளும் இணையோடு இருப்பதையே எப்பொதும் காண்கிறோம். இது விலங்காய்ப் பிறந்த மாந்தனுக்கும் பொருந்தும். இயற்கையின் உந்துதலில் இணையென்பது கட்டாயமாகிறது. இதை அந்தப் பெண்ணின் வாய்ச் சொல்லால் உணர்த்த நினைத்த வள்ளுவர் "வல்வரவு வாழ்வார்க்கு உரை" என்கிறார்.

கணவனுடைய அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள் இவர்களையே "வாழ்வார்கள்" என்று சொல்கிறாள் அந்தப் பெண். அவன் வேறு ஊரிலோ, நாட்டிலோ இருந்து ஈட்டும் பொருள், பணம் இவற்றை அவர்கள் துய்த்து இன்பம் பெற்று வாழ்கிறார்கள். அப்படி என்றால் இவளுக்கு அவையெல்லாம் கிடைக்கவில்லையா?

கிடைக்கிறதே. ஆனாலும் அவள் ஏன் தான் வாழவில்லை என்கிறாள். அம்மா, அப்பா, உடன்பிறந்தார் இவர்களால் துய்த்து இன்பம் பெற முடியாத, அவள் மட்டுமே துய்த்து இன்பம் பெற முடிகிற ஒன்று அவள் இணையிடம் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. அது செய்பொருளன்று. இயற்கையின் விதி. அதை அவளால் எங்கனம் மாற்றிவிட முடியும்.

இது போதாதென்று அவன் பேசிச் சென்ற சொற்கள், அவன் மெய்த்தீண்டல், அவன் கைப்பிடிக்குள் அடங்கிய கொல்லேறு என பார்க்கும், எண்ணும் பொருளனைத்தும் உள்ளத்தை நலிவடையச் செய்யும். அதனால் தான் அவள் வாழவில்லை என்கிறாள். எத்துணை ஒப்புரவாக வள்ளுவர் சொல்கிறார் பாருங்கள்.

காமம் அத்தனைக் கொடியதா என்ன? என்று நமக்குள் கேள்வி வரலாம். ஆனால் இயற்கை பெரியது. அந்த இயற்கையைப் பொருள்தேடலின் பொருட்டு மறுதலிப்பதை வள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை போலும்.

அதனால்தான் இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பெண்கள் கூடச் சொல்லத் தயங்குவதை, உள்ளத்தில் வைத்துக் கொண்டு உளுத்துப் போவதை ஒரு பெண்ணின் வாய்மொழியாய் மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே ஓங்கி ஒலித்திருக்கிறார் வள்ளுவர்.

பிரிந்துசென்றக் கணவனோடு பேச்சுத் தொடர்பு இல்லாத காலம் அது. அவனது சொற்களும் நினைவுகளும் மட்டுமே இருந்த நிலையில், உள்ள வேட்கை நாட்படக் குறைந்துவிடக் கூடும். உடல் வேட்கையை வெற்றிகொள்ள அது உதவக் கூடும்.

இன்றோ, தொடுதிரைக் கணினிகள், கையடக்கத் திறன் பேசிகள், நேருக்கு நேர் காணொளி உரையாடல்கள், வரவேற்பறையில் நாளெல்லாம் ஒளிரும் தொலைக்காட்சி, இணையம் என்று உள்ளவேட்கையை மறக்கடிக்க முடியாத சூழல். தொடுதிரையில் துணையின் கண்ணீரைக் காணலாம். துடைத்துவிட முடியாது. உலகத்தை முழுவதும் இணைக்கிற இணையத்தில் வாழ்க்கை நடத்த முடியாது. கைபேசியைத் தொட்டுப் பேசலாம். கையைத் தொட்டுப் பேசமுடியாது.

பொருள் கட்டாயம் தான். ஆனால் வாழ்க்கை அதைவிடக் கட்டாயமானது.

வள்ளுவர் சொல் கேட்போம். பெண்களை, அவர்களின் உள்ளத்தை, உணர்வை மதிப்போம்.
-------------------------------------------------

பதிவின் காணொளி கீழே இணைப்பில்

பிரிவு கொடிது

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்