Sunday 1 July 2018

எல்லா தவறுகளும் எங்கள் மீதா? 
அடிக்கடி வரும் சிந்தனை தான். ஆனால் குறள் பற்றிப்பேச ஆரம்பித்ததிலிருந்து ஒரு கேள்வியை அடிக்கடி சந்திக்கிறேன். அதனால் இன்று எப்படியும் எழுதிவிட வேண்டுமென்று தீர்மானித்தேன்.
 
எல்லா தலைமுறை மனிதர்களிடமும் இருந்த ஒரு பொதுப் பண்பு தங்கள் தவறுகளை வரும் தலைமுறையின் மீது ஏற்றிவிடுவது. நாமும் அதற்கு விலக்கல்ல போலும்.
 
மலிவான ரசனையும், வரைமுறையற்ற வாழ்க்கையையும் விரும்பும், புதிய முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சமுதாயத்துக்கு, தாய்மொழியையே தேவையில்லை என்று உதறித் தள்ளும் சமுதாயத்துக்கு, திருக்குறள் எல்லாம் எதற்கு? அவர்கள் அதையெல்லாம் எடுத்துக்கொள்ளவா போகிறார்கள்? தொலைபேசிகளில் தொலைந்துகொண்டிருக்கும் அவர்கள், திரையிசையில் மூழ்கிக் கிடக்கும் அவர்கள், உழைத்து சேர்த்த பணத்தை பகட்டு உணவுவிடுதிகளிலும் ஆடம்பரங்களிலும் செலவிடும் அவர்கள் உங்களிடம் நின்று பேசவா போகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளை நான் எதிர்கொள்கிறேன்.
 
எப்படித் தொடங்குவது? 
 
"தாய்மொழியே தேவையில்லை என்று உதறித் தள்ளும் தலைமுறை" என்பதிலிருந்து தொடங்கலாம்.
 
பள்ளியில் சேர்க்கப்பட்ட அந்த முதல் நாளில், "பள்ளிக்குச் செல்லமாட்டேன்" என்று அடம்பிடித்த நிறைய குழந்தைகளை எனக்குத் தெரியும். ஆனால், "ஆங்கில வழிமுறைக் கல்வியில்தான் என்னைச் சேர்க்கவேண்டும்" என்று அடம் பிடித்த ஒரு குழந்தையைக் கூடத் தெரியாது. உங்களுக்கு அப்படி யாரையேனும் தெரியுமா?
 
வலுக்கட்டாயமாகத் தாய்மொழிக்கல்வியைத் தவிர்தவர்கள் நாமே அன்றி அந்தக் குழந்தைகள் அல்ல. ஆங்கிலத்தைச் சிறப்பாகப் பேசுகிறாய் என்று முதுகில் தட்டிக்கொடுத்ததே முதலில் நாம்தானே. உங்கள் தாய்மொழியை, அதன் சிறப்பை; வரலாற்றை, அதன் பெரும்பொருளை என்றேனும் அவர்கள் குழந்தையாய் இருந்தபோது கதைகளாய்ப் பேசியிருக்கிறீகளா?
அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி "சேட்டன்பகத்" எழுதிய கதையொன்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில் "உனக்குப் புதுமைப்பித்தனைத் தெரியுமா?" என்று கேட்கிறீர்கள். உங்கள் புத்தக அடுக்கில் இல்லாத புதுமைப்பித்தனை அந்தக் குழந்தை எங்கே பார்த்திருக்கும்? புதுமைப்பித்தனின் உயரத்தை எப்படிப் புரிந்து கொள்ளும். உயரமான மலைகளில் ஏறமுடியவில்லையென்றால் சுற்றிச் சென்றுவிடுவது மனித இயல்புதானே. பள்ளியில் தான் நாம் அவனை தமிழ் வழிக்கல்வியிலேயே சேர்க்கவில்லையே.
 
"தமிழாசிரியர் சொல்லிக்கொடுக்க வேண்டியதுதானே?" என்று கேட்காதீர்கள். பாவம் அவர். உங்கள் குழந்தைகளை தமிழிலும் நூறு மதிப்பெண்கள் வாங்க வைப்பதற்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்து "கோச்சிங்" கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
 
நாம் இப்பொழுதெல்லாம் நூறு மதிப்பெண்கள் எடுக்காத மாணவனைவிட, அவனது ஆசிரியரையும் அந்தப் பள்ளியைம் தான் மதிப்பதேயில்லை என்ற பேருண்மை தமிழாசிரியர்களுக்கும் தெரிந்துவிட்டது.
 
"தமிழில் நூறு மதிப்பெண்ணா?" தொல்காப்பியனும் வள்ளுவனும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.
 
முப்பைத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊரிலிருந்து படிப்பதற்காக சங்கரன்கோயில் அருகே ஒரு ஊருக்குச் சென்றேன். படித்த ஊரும் சிற்றூர்தான். இரண்டு ஊர்களுக்குமிடயே இருந்த திருநெல்வேலியை உள்வாங்கிக்கொண்டு, எங்கள் ஊரிலிருந்த ஓலை வேய்ந்த சிறுகடையொன்றில் நுழைந்து "யெண்ணே டொரினோ இருக்கா?" என்றுகேட்ட நான் தான், என் மகன் பெப்சி குடிப்பதை எதிர்த்துப் போர் நிகழ்த்துகிறேன். பாவம் அந்தக் கடைக்காரர். தலை நரைத்த பின்னும் பல வண்ணங்களில் குப்பிகளையும் , தகரக் கலன்களையும் குளிர்ப்பெட்டியில் அடுக்கிவைத்துக் கொண்டு வணிகம் நடத்துகிறார். முப்பது வருடங்களுக்கு முன் அவர் கடையில் நான் வாங்கித் தேய்த்த "சாம்பு பாக்கெட்" வீரநாராயணமங்கலம் ஆற்றங்கரைப் புன்னைமர மூட்டில் இன்னும் மக்காமல் கிடக்கிறது என்ற உண்மை எனக்கும் அந்தப் புன்னை மரத்துக்கும் மட்டுந்தான் தெரியும்.
 
தான் சேற்றில் நின்றிருக்கும் போது "நீ படித்து பெரிய ஆளாகவேண்டும்" என்று வயல் வரப்பை மிதிக்காமல் என்னை வளர்த்து விட்டார் அப்பா. நானோ நகரத்தில் வாழ்ந்து கொண்டு வேளாண்மை என்ற சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் மகனை வளர்த்துவிட்டு, "எப்படியாவது விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்று அவனிடம் சொன்னால், "எப்படி?" என்று கேட்கிறான் அவன். 
 
நீங்களே சொல்லுங்கள் "எப்படி?"
 
அக்கறாவும், சிற்றரத்தையும், சுக்கும் இருந்த கடைகளில் "நோவால்ஜின்" இருக்கா" என்று கேட்டவர்கள் நாம்தான்; நம் குழந்தைகளல்ல. இவ்வளவு ஏன், "கேக்", "பிஸ்கெட்" என்றச் சொற்களை நம் குழந்தைக்கு அறிமுகப்படுத்தியதே நாம் தானே. தொலைக்காட்சியில் விளம்பரம் வருகிறதே? குழந்தை பார்கிறதே, என்ன செய்ய? என்று சொல்கிறபோதே, அதை வீட்டுக்கு வாங்கி வந்ததும் நாம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. 
 
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அதைப் பட்டியலிடுவது என் நோக்கமன்று. இவ்வளவு நடந்தபின் எப்படி மாற்றமுடியும் என்ற கேள்வியை எதிர்கொள்வதே என் நோக்கம். 
 
ஒரு இனத்தின் பெருவாழ்க்கையில் தொய்வுகள் ஏற்பட்டபோது தான் வாழ்வியலை மறுபடி தொகுத்துவைத்த வள்ளுவர் தோன்றினார். ஒரு முதுமொழியில் வேறு பண்பாட்டின் கூறுகள் உரச ஆரம்பிக்கையில் தான் அம்மொழியின் பன்னெடுங்காலச் சிறப்பைச் சொல்ல தொல்காப்பியர் தோன்றினார். தருக்கவியலின் வீழ்ச்சியின் போது எண்ணியக் கோட்பாடுகளோடு பக்குடுக்கை நன்கணியார் தோன்றுகிறார். மதமும் சாதியும் கைகோர்த்துச் சீரழிந்து, காலங்கடந்த நிலையில் தான் வள்ளலார் தோன்றினார். தமிழே சமற்கிருதமாய் மாறி மணிப்பவழம் என்று கொண்டாடப்பட்டு, தமிழே மறக்கப்பட்ட நிலையில் தான் மறைமலையடிகள் தோன்றினார். மாக்ஸ்முல்லர் சொன்னதே மொழிப்பிறப்பு என்று நம்பிய காலத்தில் தான் தேவனேயப் பாவாணர் தோன்றினார். செயற்கை உரமின்றி வேளாண்மை என்பதே செய்யமுடியாது என்று நம்பப் பட்ட நேரத்தில் தான் நம்மாழ்வார் தோன்றினார். 
 
 மிகச் சிக்கலான காலகட்டத்திலிருந்து பலமுறை , மீண்டிருக்கிறோம், மீட்கப்பட்டிருக்கிறோம். இப்பொழுதும் முடியும். நம் தவறுகளைச் சரி செய்ய முயன்றாலே வரும் தலைமுறை சரியாகத்தான் வளரும். 
 
சென்னைக் கடற்கரை தமிழர் கடலான அந்த நிகழ்வு எப்படி நிகழ்ந்தது, யாரால்? தெரியாது. ஆனால் அது நிகழும். எங்கோ, யாரோ முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பேராசான் குரல் எங்கோ ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
 
"மெய்வருத்தக் கூலி தரும்"

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்