Friday 3 August 2018

புது வெள்ளம்


தாடகைமலையும், புத்தனாறு கால்வாயும்

புது வெள்ளம். இந்த சொல்லே புத்துணர்வு அளிக்க வல்லது. பழையாறு எனப்படும் கோட்டாறு, புத்தனாறு கால்வாய், பெரியகுளம், வீர கேரளப்பனேரி என சுற்றிலும் நீர்நிலைகள் நிறைந்த ஊரில் பிறந்தாலோ என்னவோ எனக்கு நீண்ட நேரம் குளிப்பது (ஆடுவது) மிகவும் பிடிக்கும்.

புத்தனாற்றின் கம்பிப் பாலத்திற்கும் கல் பாலத்திற்கும் இடைப்பட்ட சிறு தொலைவுக்குள் என் சிறு வயது வாழ்க்கையின் பெரும்பகுதி நகர்ந்திருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது.

பண்டு முல்லையிலும் குறிஞ்சியிலும் வாழ்ந்த மனிதன், அங்கிருந்த எல்லா விலங்குகளையும் போல நீராடுவதில் பெரும் விருப்புக் கொண்டிருந்தான். அருவிகளைப் பின்பற்றி, ஆறுகளின் வழி நடந்து சமநிலங்களில் புகுந்த போதும் அந்த விருப்பில் குறைவின்றியே இருந்திருப்பான் போலும். எனக்கும் என் நண்பர்கள் சிலருக்கும் அந்த விலங்குப் பண்பு இருந்ததை உணர்ந்திருக்கிறேன். தணீருக்குள் குதித்து விட்டால் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு கரையேறும் எண்ணமே வந்ததில்லை.

ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கும் புத்தனாற்றுக் கால்வாயில் வெள்ளம் வருவதற்கும் ஏறத்தாழ சரியாக இருக்கும். பேச்சிப்பாறை அணையில் தேக்கிவைக்கப் பட்டிருந்த வெள்ளம், கலங்கலின்றி கண்ணாடிபோல் வரும். சில்லென்ற அந்த வெள்ளத்தில் கல் பாலத்தின் மேலிருந்து சாடுவது (குதிப்பது)  பேரானந்தம். ஓடும் நீரில் நீந்திப் பிடித்து விளையாடும் ஆட்டம், படித்துறைகளில் நிற்பவர்கள் எத்தனை முறை ஏசினாலும் நிறுத்தப்பட மாட்டாது.

முதன்முதலாக 'கல்பாலத்திலிருந்து சாடி மாட்டுத்துறை சப்பாத்தில் ஏறிய' நாளை யாருமே மறந்திருக்க மாட்டார்கள் எங்கள் ஊரில்.  எல்லோருக்குமே அது ஒரு வீர நிகழ்வு. ஏனென்றால் எல்லோருமே அனேகமாக அவர்களின் பத்து வயதிற்குள் இதை நிகழ்த்தியிருப்பார்கள். ஆண், பெண் என கிட்டத்தட்ட எல்லோருமே நீச்சல் அறிந்திருந்தார்கள். என்றைக்கு கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டால் யாரிடமும் தீர்க்கமான விடையிருக்காது.

ஐப்பசி அடைமழை செம்மண் நிறத்தில் வெள்ளத்தைக் கொண்டுவரும்.  கூடவே தண்ணீர் பாம்புகளும், தாழைச் செடிகளும், முறிந்து விழுந்த புன்னை மரக்கிளைகளும். ஆள் முழுகும் அளவிற்கு வரும் வெள்ளத்தில் மூழ்கி எழும்போது இவற்றில் ஏதேனும் ஒன்று தலையில் தட்டுப்படும். உதறி எறிந்துவிட்டு ஆட்டத்தில் மூழ்கி விடுவோம். துவைத்த துணியோடு பாம்பையும் பிழிந்து வீட்டுக்குக் கொண்டுபோன பெண்களும் உண்டு. ஒரு முறை எனக்கு சில ஓலைச் சுவடிகளும் கிடைத்திருக்கின்றன. பெரு வெள்ளத்தில் சுவடிகள் எறியப்படுவது அதுவரை கூட நிற்கவில்லை போலும். வெள்ளத்தில் போனவை எவ்வளவோ?   "கெற்பக்கோள் சாத்திரம்" என்று ஒரு தொகுப்பு. பெண்களின் கருப்பை பற்றிய சுவடி அது. ஓரளவிற்குப் படிக்க முடிந்தது. "முன்னம் முழு" என்று தொடங்கிய இன்னொரு சுவடித்தொகுப்பு. ஆனால் இது அத்தனை எளிதாய்ப் படிக்கக் கூடியதாய் இல்லை. சோதிடம் பற்றியதாய் இருக்கலாம் என்று நினைக்கிறேன். வீட்டில் கொண்டு போய் வைத்திருந்தேன்.  சுவடிகள் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு ஆகாதென்று அண்ணன் அவற்றை ஊர் நூலகத்தில் சேர்த்துவிட்டார். அங்கே கவிமணியின் படத்தின் பின்னால் வைக்கப்பட்ட அவை பிறகு என் கண்ணில் படவே இல்லை.

1983 ல் திருநெல்வேலிக்கு படிப்பதற்காக வந்தபோது தான் "தாமிரபரணியை"ப் பார்த்தேன். பழையாற்றிற்கும் இதற்கும் தான் எத்தனை வேறுபாடு. கற்காளால் ஆன பெரும் படித்துறை மண்டபங்கள். மண்டபங்களை மூழ்கடிக்கும் வெள்ளம். வியப்பூட்டியது அது.

அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் "பொன்னி" யைப் பார்த்தேன். அப்பப்பா. நான் இதுவரை பார்த்திருந்த எல்லா ஆறுகளையும் ஒன்றாய்ச் சேர்த்து வைத்ததைப் போன்ற பேராறு. இங்கே புதுவெள்ளம் ஆடுபவர்கள் பேறு பெற்றவர்கள் என்று நினைத்தேன்.

காவிரிக்கரையிலேயே என் வாழ்க்கையின் ஒரு பகுதி கழிந்துவிட்டது. காவிரியோடு என் வாழ்க்கை பின்னிக்கிடக்கிறது என்பதாகவே உணர்கிறேன். அவள் கரையெங்கும் அலைந்திருக்கிறேன்.  அந்தப் பண்பாடுகளோடு ஒன்றியிருக்கிறேன். என்னை நான்  மீட்டெடுத்ததில் காவிரிக்கரைக்கு பெரும் பங்கிருக்கிறது. அவள் கரைபுரண்டு ஓடிய காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். வேழம் இழுத்தெறியும் அவள் வேகம் உணர்ந்திருக்கிறேன். அவள் விருந்தோம்பலில் திளைத்திருக்கிறேன். இங்கு வந்தபிந்தான் "ஆடிப்பெருக்கு" அறிந்தேன். வைகாசியில் புதுவெள்ளம் வந்துவிடுகிற எங்கள் ஊரில் ஆடிப்பெருக்கு இல்லை. இந்த நாட்களில் பாலாறு, பூவானி, குழித்துறையாறு, கேரளத்தின் பாரதப் புழா, பேரியாறு என நிறைய ஆறுகளைப் பார்த்துவிட்டேன். ஆனாலும், எந்த ஆற்றைப் பார்த்தாலும் சிறுவயது கல்பாலம் நினைவுக்கு வராமல் போவதில்லை.

இப்பொழுது காவிரியில் புதுவெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிது. தொலைக்காட்சி களில் தான் காண்கிறேன். இன்று ஆடிப்பெருக்கு. புதுவெள்ளம் ஆடவேண்டும். ஆனால்,  சென்னையின் அடுக்ககக் "குளிமுறி" க்குள் நினைவுகளோடு நீராடுவது தவிர வேறெதுவும் இயலவில்லை.ஆனால்,

ஆண்டுதோறும் அவள் வர வேண்டும் என்ற வேட்டலை மட்டும் நான் நிறுத்தப் போவதில்லை. சட்டங்களைப் பட்டியலிடும் போது அவளை மறந்து போகிறோம். எண்ணம் அவளிடம் இல்லாமல் போய்விடும். வாவென்று எப்பொழுதுமே அழைத்துக் கொண்டிருங்கள்.

"அவள் வருவாள்.
வானமலை கறுத்து
பெருமுழவின் ஒலியெழுப்பி வருவாள்."
புது வெள்ளம் கொண்டு தருவாள்.
----------------------------------------------------------------
என்றென்றும் அன்புடன்,
சிராப்பள்ளி மாதேவன்.
சென்னை.    03/08/2018

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்