Monday 27 August 2018

மேற்குத் தொடர்ச்சிமலை - திரைப்படம்


நீண்டு நெளிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியின் வாழ்வியலை, ஆனிச் சாரலாய் பெய்துவிட்டுப் போகிறது "மேற்குத் தொடர்ச்சிமலை" திரைப்படம்.  ஏராளமான விருதுகளையும் அதைவிட ஏராளமான திறனாய்வுகளையும் பெற்றிருக்கிறது இந்தப் படம். புதிதாய் என்ன சொல்ல

ஆனாலும்,  இந்த மலையின் கடைசித் துணுக்குகளின் நடுவே பிறந்து வளர்ந்த  எமக்கும் எதையேனும் விட்டுவைத்திருக்கும் அது. படம் பார்த்த போது அரங்கில் பக்கத்தில் இருந்த ஒருவர் "என்ன அதுக்குள்ள இன்டெர்வெல் வந்துருச்சு" என்றார். சில விமரிசனங்களிலோ படம் மெதுவாய் நகர்கிறது என்கிறார்கள்.  இது முரண் இல்லை இயல்பு. வேகமான நகர வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் ஒருவருக்கு இந்த வாழ்வியல் மெதுவாக நகர்வதாகத் தோற்றமளிக்கும். அதுதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் அந்த மக்கள் பெற்ற பெரும் பேறு.

நகர வாழ்க்கையில் உயிர்ப்போடு இருப்பது போல் தோற்றமளிக்க நாம் பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. பணம் கொண்டே எல்லாவற்றையும் தீர்மானிக்கவேண்டிய நிலை நோக்கி நர்ந்து வந்துவிட்ட நம்மால்,

"சீனிய உள்ள வெச்சுட்டு கல்லால காசு இருக்கு எடுத்துக்கோ"


"பத்தரம் முடிச்சிட்டு வாங்கிக்கிறம்பா. "

" சாமி படத்துக்கு கிட்ட வெச்சுர்றேன்" என்பன போன்ற பணத்தைவிட மனிதர்களை , அத்தனை மனிதர்களையும் நேசிக்கிற, நம்புகிற உரையாடல்களை அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியவில்லை. என்னதான் பணத்திற்காக மலையில் சுமை தூக்கி ஏறினாலும், பணத்தை விட அவர்கள் மனிதர்களையே நேசித்தார்கள் என்கிற வியப்பான வாழ்வியல் செய்திதான், அதையும் தனியாகச் சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களை நகரத்தின் திரையரங்குகளில் உலவவிட்ட இயக்குனர் லெனின்பாரதியின் உத்திதான் இந்தப் படத்தை இத்தனை உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.


திரையில், அறிந்த மொழியில், அறிந்திராத ஒரு வாழ்க்கையை விழி மூடாமல்  பார்த்துக் களிக்கிறார்கள் இளந்தலைமுறையினர். கடந்துவந்த பாதை நினைவுக்கு வர கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வயதானவர்கள்.

படத்தில் கதையொன்றும் இல்லை. தேனில் குழைத்த உரையாடல்கள் இல்லை. நடிகர்கள் இல்லை. இசையில்லை. பெருங் காட்சியமைப்புகள் இல்லை. அப்புறம்... சொல்ல மறந்துவிட்டேன்.


அதில் நீங்கள் இருக்கிறீர்கள்.  உங்கள் உறவுகள் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் ஐயாவிடமும் அம்மாவிடமும் பேசிய பேச்சுகள் இருக்கிறது. உங்களுக்காகவோ  அல்லது உங்கள் மூத்த தலைமுறையில் எவருக்காகவோ படிப்பதற்கோ, திருமணத்திற்கோ விற்ற நிலம் இருக்கிறது. பெருநகரொன்றில் நீங்கள் வாங்கியிருக்கிற வீட்டிற்கான தவணை இருக்கிறது. நன்றாகக் காதுகொடுத்துக் கேளுங்கள், நீங்கள் சிரித்ததோ அல்லது அழுததோ அல்லது சினந்ததோ அல்லது மகிழ்ந்ததோ இசையாய்க் கேட்கிறது. நீங்கள் பார்ப்பதெல்லாம் உங்கள் வீட்டு முற்றமும், படிப்புரையும், சோத்துச் சட்டியும் தான். அதனால்தான் உங்களையும் மறந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.


அதோ அந்தப் பாதையில்  ஏழெட்டு பேர் மூட்டை சுமந்து செல்கிறார்களே, அதில் ஒருவன் நானாகக் கூட இருக்கலாம். நீண்ட நெடுங்காலமாய் அந்தப் பாதை இருக்கிறது. ஆம். செவ்விலக்கியம் தொடங்கி செல்பேசிக் காலம் வரை நீண்டு நெளிந்து கிடக்கின்றன மேலமலையும் அந்தப் பாதையும். ஒருமுறை நடந்து பாருங்கள். கண்டிப்பாக,  நிலமற்ற  அந்தக் கிறுக்குக் கிழவி உங்களுக்குத் தென்படுவாள். ஆனால் அவள் கண்டாங்கிச் சேலை கட்டிக்கொண்டு, கையில் வளவி போட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டுமென்பதில்லை.



நன்றி.

சிராப்பள்ளி மாதேவன்,
சென்னை
27/08/2018

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்