Saturday 19 October 2019

தி.மா.ச. படத்திறப்பு


 தோழர் தி.ம.சரவணன் படத்திறப்பு 20-10-2019

மலையிறங்கி; முல்லை மருதமென
நிலம் நனைத்து உயிர்வளர்க்கும்
ஆறுகள் தெய்வமென்றால் — அவை
கரைகடந்து கடல் நுழைந்து
உப்பாக மாறியபின் -  அதன்
நன்னீர் முகந்தெடுத்து
வானமலை உச்சியில் தெளித்து
மறுபடியும் ஆற்றுக்கு உயிர்கொடுக்கும்
மேகமதை என்ன சொல்வீர்?
தி.ம.ச. மேகமானவன்.

காற்றடிக்கும் திசையெங்கும்
கடும்நெருப்பு பரந்து சூழ
காடழிந்து மரமழிந்து
நீறுபூத்த நெடுமலையின்
பேரும் அழிந்து போனபின்னே
பெரும்நெருப்பை பகையென்று சொன்னால்
பாறையின் இடுக்கொன்றில்
மீண்டும் ஒருநாள்
வீழும் மழைத்துளியை விழுங்கி - தரை
கீறியெழும் விதையொன்றை
என்ன சொல்வீர்?
தி.ம.ச. விதையானவன்.

கருப்பையின் இருள் கிழித்து
தரைதொட்ட முதல் நொடியில்
உள்ளிளுத்த மூச்சுக்காற்றை உயிரென்று சொன்னால்
வெளியிட்டோர் வீடுகளில்
விற்பனை அரங்குகளில்
நூல்நிலைய அடுக்குகளில்
காணக்கிடைக்காமல் மாண்டுபோன சீரிதழ்கள்
உயிர்பெற உழைப்பைத் தந்த
மகனிவனை என்னென்று சொல்வீர்?
தி.ம.ச. உயிர்வளியானவன்.


வாழ்ந்த கதையெல்லாம்
வைகையாறு கொண்டுசெல்ல
தாளாத தமிழரினம்
மண்மூடி அமிழ்ந்துபோக
காலங்கள் தாண்டி - அதைத்
தோண்டி வெளிக்கொணர்ந்த
மாந்தர்தமைப் புகழ்வோமென்றால்
பானை வனைந்த பின்னே - அதன் கழுத்தில்
தன்பெயரை தமிழில் எழுதி வைத்த
பாட்டனை என்ன செய்வீர்?
என்ன செய்வீர்?
அதையே செய்வீர்
இதழியலின் கீழடியாய் மாறிப்போன
எங்கள் தீந்தமிழன்
தி.ம.சரவணனுக்கே!!!

 


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்