Thursday 13 February 2020

காதலின் நாளாம் (14-02-2020)



அரும்பு நனை முகை மொக்குள்
முகிழ் போது மலர் பூ வீ
பொதும்பர் பொம்மல் செம்மல் என
நிலைதெரிந்து,

அடும்பு முதலாக வேரி மலர்
ஈறாக
நூறுமலர் தாங்கியதெம்
பாட்டும் தொகையும்.

இருத்தலின் முன்னே
புணர்தலின் நிமித்தம்
போற்றிச் சிறந்தது எங்கள் மொழி.

கபிலரின் சொற்களில்
காதலில் நனைந்த
காடும் மலையும் எங்கள் நிலம்.
 
எல்லெனும் கதிரோன்
தென்முதல் வடக்கோடி;
மீண்டும் தென்சேர்ந்து
செலவை முடிப்பதுபோல்,
காலம் முழுவதும்
காதலைப் பாடியது எங்கள் இனம்.

நிலத்துக்கொரு மலரென்று
காதலின் நேர்நின்றது காலம்.

அதனால்தான்,
அறஞ்சொன்ன வள்ளுவனும்,
காதலைத் தன்
அடிகளில் நிறைத்துவைத்தான்.

அதியன் அளித்தத்
தேறல் குடுவைக்குள்,
ஔவையும் பாட்டிசைத்தாள்.

குமரித் துறைசேரும்
வண்ணமணல் போலே,
கோடிச் சொற்களில்
களித்துக் கிடக்குது
குறிஞ்சி தொடங்கி எம்காதல்.

வாழ்த்துவோம்
இன்று
காதலின் நாளாம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்