Tuesday, 31 March 2020

கைகவர் முயக்கம் - ஔவையார்


செங்கணை நடந்து கொண்டிருக்கிறான். பகல் தாண்டிய வேளை. கிழக்கே தோன்றிய கதிரவன் மெல்ல ஊர்ந்து உச்சிக்கு ஏறிவிட்டான். ஏதோ ஒரு வேலை நிமித்தமாக நெஞ்சு நிறைந்த காதலி, எயிற்றியைப் பிரிந்து வந்து கொண்டிருக்கிறான். என்ன செய்வது வேலை நடந்தாக வேண்டுமே. அவளும் கூடவே வருகிறேன் என்றுதான் சொன்னாள். ஆனால், கோடையின் வெப்பத்தில் பாலையாய்த் திரிந்துகிடக்கும் இடங்களைக் கடந்து அவளையும் அழைத்துக் கொன்டு செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. "சீக்கிரம் வருகிறேன், அதுவரை அவளைப் பார்த்துக் கொள்" என்று தோழியிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

செங்கணை செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்ற எயிற்றியின் கண்களில் மெல்ல நீர் எட்டிப்பார்க்கிறது. ஊர் எல்லையில் அவன் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டே நிற்கிறாள். கண்கள் மாரியெனப் பொழிகின்றன. அருகில் நின்ற தோழி அவள் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். "அழாதே.. அவன் விரைவில் வந்துவிடுவேன் என்று சொல்லித்தானே செல்கிறான். கலங்காதே" என்று காதருகில் சொல்கிறாள். அதற்கு மேல் அவளாலும் பேச இயலவில்லை. எயிற்றியின் கவலை இவளையும் வாட்டுகிறது. மெல்ல அவளது கண்ணீரைத் துடைக்கிறாள். அழுகையிலும் மெல்ல முறுவல் பூக்கிறாள் எயிற்றி. "நான் அவர் போய்விட்ட கவலையில் அழவில்லையடி பெண்ணே"...

"பிறகு எதற்கு இவ்வளவு கண்ணீர்?"

Wednesday, 25 March 2020

காலவரையறையின்றி...

புனிதநூலாகவே இருந்தாலும்
தொட்டபின்
கைகழுவ வேண்டியிருக்கிறது.

கடவுளே வந்தால்கூட
ஐந்தடி இடைவெளியில்,
வாய்மூடித்தான்
அளவளாவ வேண்டியிருக்கிறது.

வழிபாட்டிடங்கள்
வெற்றுக் கட்டிடங்களாய்
நின்றுகொண்டிருக்கின்றன.

மரணத்தின் அச்சுறுத்தல்
மதங்களுக்கு
விடுமுறை விட்டிருக்கிறது.

எல்லாக் கடவுள்களும்
சமூகத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்,
காலவரையறையின்றி.

Friday, 13 March 2020

காற்று மட்டுமே...

கதிரவன் மறைந்தாலும் மனிதக்
காலரவம் மறையாத பெருந்தெருக்கள்,
மேலிருந்து பார்த்தால்
வண்ணம் கண்ணுக்குத் தெரியாமல்
மறைத்துக்கொண்டு ஓடிய
ஊர்திகளின் கீழே
நீண்டு கிடந்த சாலைகள்,
இடையறாது இறைவனோடு
மனிதன் பேசிகொண்டிருந்த
வழிபாட்டிடங்கள்,
எங்கிலும்;
காற்று மட்டுமே கைவீசி நடக்கிறது.
தரை மெல்லக் கூன் நிமிர்க்கிறது.
கரியமிலவளியைப் பூசிக்கொள்ளாமல்
கண்சிமிட்டுகிறது வானம்.
சொந்த ஓசையெழுப்பிச்
சுழன்றோடுகின்றன ஆறுகள்.
இளைப்பாறுகிறது இயற்கை.
அணுக்குண்டுகளையே அச்சப்பட வைத்துவிட்டு
காற்றின் பாதைகளில் காத்துக்கிடக்கிறது
கொரோனா.

உரைகல்

பழந்தமிழின் பாட்டிசைத்துப் பகல்விழிப் போமெங்கள்/
பாவாணர்ப் பயிலரங்கைப் படைவீடாய்ச் செய்திடுவோம்/
பாராண்டத் தமிழினத்தின் பேராண்மை கொண்டுசெய்வோம்/
ஊராளும் மன்னவர்க்கோர் உரைகல்/


தமிழ்






யாப்பணியா எம்பாவை -மனதின்
பூப்பணிந்தச் சிறுபூவை -உலகின்
மூப்பணிந்த தென்தமிழே -உன்
முன்வைத்தேன் ஏற்பாய் நீ.

கோள்பிறந்து குளிரடங்கி நீர்பிரிந்து நிலம்தெரிந்து
உயிர்பிறந்து ஊர்ந்து நடந்து ஓர்நாள்
மாந்தனாய் எழுந்துநின்ற மறுநொடியில் பிறந்தவளே,
பிறப்பறியா மூப்பறியா பெருந்தமிழே,
பனையேறி நீரெடுத்துப் பழம்பறித்துப் பகுத்துண்ட
பனைநாட்டின் குமரிமகன் பழந்தமிழன்
ஒலியெழுப்பி சைகைசெய்து மொழி வளர்க்க
உமைப்பெற்றோம் எம்தாயே உலகத்தின் தாய்மொழியே.

உயர்ந்திருந்த மரமேறி பெருத்திருந்த பழமறுக்க
ஒருநூறு தீஞ்சுளைகள் ஒருசேர உள்ளிருக்க
தனித்தனியே பிரிந்துவர சக்கையென்று பெயர்சொன்னான்.
தண்டிற்கும் மடலென்றே தமிழ் சொன்னான்.
இன்றுவரை ஈதேயெம் குமரிநில வழக்கம்
என்றுமே ஓயாதெம் இயற்சொல் முழக்கம்.

சக்கை மரம்பிளந் தாரக்கால்கள் செய்து
சக்கைஆரம் என்றே சக்கரம் செய்தான்.
குமரிக் கண்டத்தின் குறுக்கும் நெடுக்கும்
உனது மகனோடி உயிர் நிறைத்தான்,
உலக வரலாற்றைத் தொடங்கி வைத்தான்.

பார்த்த நிகழ்வைப் படமாய் எழுதி
ஓர்த்தல் பிறழ்கையில் ஒலி போதாதென
கோடுகள் சேர்த்தே குறிகள் செய்தான்.
வரிகள் மாறின வட்டெழுத் தாயின.
பட்டறிந்த யாவையும் பதிவு செய்திட
வட்டெழுத் தெடுத்தோர் வரைமுறை செய்தான்.
பனையோலை நறுக்கெடுத்துப் பட்டறிந்த தெழுதி
பொத்தக மென்றே பெயர்ச்சொல் வைத்தான்.

கடல்கோள் கொண்டதில் நிலம் பிரிந்தான்,
கட்டுமர மேறியும் கடல் கடந்தான்,
கால்நடை யாகவும் நிலம் கடந்து
காடுகள் யாவிலும் குடி புகுந்தான்,
ஆண்டுகள் ஆயிர மான காலையில்
அகிலம் முழுதும் நிலை பெற்றிருந்தான்.

பாறையில் பதிவதும் கல்லில் வடிப்பதும்
பழக்கமாய்க் கொண்ட பழந்தமிழ் மாந்தன்
வரிகளும் குறிகளும் வடித்தெடுத் துந்தன்
ஒலியையும் எழுத்தையும் ஓயாமல் காத்தான்.

ஆண்டுகள் போயின பல்லாயிரம் தாண்டின
பண்டு நகர்ந்தப் பழந்தமிழ் மாந்தனை
தண்ணலும் வேனலும் தென்றலும் வாடையும்
முன்னம் இருந்தமெய் நிலைமாற்றிச் செய்தன.
மூக்கினில் பிறழ்ந்து முகிழ்ந்து திரிந்து
நாக்கின் நுனியில் நடுத்தொண்டை யடியில்
காற்றும் வெயிலும் கலந்து திரிந்திடப்
பாக்களில் நிலைபெற்றப் பழந்தமிழ்ச் சொற்கள்
பிறழ்ந்தும் நீண்டும் திரிந்தும் மருங்கியும்
பிறந்தன தமிழுக்கு ஆயிரம் குழவிகள்.

பிறந்த விடத்தில் பெரும்பேறு பெற்றதமிழ்
கறந்த பாலென களங்கமற் றிருந்தது.
சங்கம் வளர்த்தது புலவர் பாடினர்
மங்காப் புகழுடன் செந்தமிழ் தழைத்தது.
முதலும் இடையும் கடல் கொண்டோட
மூன்றாம் சங்கமும் முளைத்துத் துளிர்த்தது.

மலைகடந்து போனவன் தன்னிலை மறந்தான்
ஊரும் பேரும் ஒப்பிலாச் சொல்லும்
கற்றதும் பெற்றதும் மற்றவர்க் களித்தான்.
வேர்மறந்து போனான் வேற்றின மானான்.

அதனை யறிந்தவர் அந்நிலை யடைந்திட
மந்தை களோடும் மடந்தைய ரோடும்
கைபரில் நுழைந்து எம்வள நாட்டின்
வடபுலத் திரிதமிழ் எழுத்துக்கள் கோர்த்தனர்.
நாடோடி ஒலிகட்கு எழுத்துகள் கிடைத்திட
நற்றமிழ் கிரேக்க இலக்கணஞ் சேர்த்து
நாகரிகத் தமிழரின் வாழ்வியல் குழைத்து
புத்தின மென்றொரு புனைவினஞ் செய்தனர்.

கச்சியில் பல்லவர் காலமும் வந்தது
வேள்விகள் செய்தவர்த் தோள்களி லேறினர்.
சேரரும் சோழரும் சிற்றரசர் நூற்றுவரும்
களப்பிரர் தாமும்  பாண்டியர் தோளும்
சோர்ந்திருந்த வேளையிலே சோலைத்தமிழ் நாட்டில்
சமயம் வளர்த்ததமிழ் சமற்கிருதம் சேர்த்ததுவே.
ஆட்சிமொழி தமிழெனினும் அரசன் சொற்கள்
வேற்றுமொழி கலந்ததனால் மக்கட் பேச்சும்
வேரறுந்து விதிமறந்து வேற்றொலி கேட்டுக்
காற்றில் கரைந்தன கன்னல்தமிழ்ச் சொற்கள்.

காலம் கடந்தது காட்சிகள் மாறின
உற்றவர் இல்லா ஒற்றைப் புனைமொழி
அற்றுப் போனது அழிவினைத் தொட்டது
வேரின்றி வீழ்ந்தமொழி வேதமொழி யானது.

அழகு தமிழ்மொழியில் அமிலம் கலந்திருக்க
ஆங்கிலமும் நுழைந்தங்கே அழுக்குச் சேர்ந்துவிட
இன்தமிழ் இறுத்து வன்தமிழ் ஆக்கிட
ஈந்தனர் உயிரை எம்தமிழ் மாந்தர்கள்.

உருவற்றுப் போனமொழி ஊமையாய் உள்ளிருந்தே
ஊர்ந்திங்கே வருகுதடா மீண்டும் ஆள.
எழுந்திடுவாய் என் தமிழா விழித்திடுவாய்
ஏற்கும்மொழி தமிழ் ஒன்றே என்றுரைப்பாய்.

பழந்தமிழின் பாட்டிசைத்துப் பகல் விழிப்போம்
பாவாணர் பயிலரங்கைப் படைவீடாய்ச் செய்வோம்
பாராண்டத் தமிழினத்தின் பேராண்மை கொண்டு
ஊராளும் மன்னவர்க்கு உரைகல் செய்வோம்.

பாட்டன் சுந்தரனார் பாட்டெடுத்துச் செந்தமிழின்
வாழ்த்தென்று வகுத்து வைத்த நல்லவர்கள்
காற்றில் கரைத்துவிட்ட ஓரடியை எம்பாவின்
ஈற்றடியாய் எடுத்துவைத்து இனிதே முடிக்கின்றேன்
ஆரியம் போலுலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

சிராப்பள்ளி மாதேவன்.
------------------------------------------------------------------------
(13-08-2014 ல்  உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு  ஆய்வு நிறுவனம், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை இணைந்து திருச்சிராப்பள்ளியில் நடத்திய "சமற்கிருத ஆதிக்கமும் தமிழக பாதிப்புகளும்" கருத்தரங்கப் பாவீச்சு.)

Wednesday, 11 March 2020

மா.இராசமாணிக்கனார் பிறந்தநாள் - 2020

(நேரிசை ஆசிரியப்பா)

பள்ளி ஆசிரியப் பணியில் தொடங்கி
பல்கலைப் பேராசிரி யராய் விரிந்து
ஆய்வு நூல்களின் கொடு முடியென
அருமை நூலொன்று செய்து கொடுத்தவரே
பத்துப் பாட்டல்ல அது தமிழர்தம்
சொத்துப் பாட்டென்று சொல்லிக் கொடுத்தவரே
உண்மையின் மீது கொண்ட வேட்கையில்
ஊரெல்லாம் நடந்து வரலாறு தெளிந்தவரே
நெடுநுகத்துப் பகல் போல நின்று
தமிழ்த் தாத்தாவின் தவறையும் இந்தத்
தமிழகம் அறியச் சுட்டிச் சென்றவரே
உம்பணி ஒளித்து வைத்த கயவரும்
தன்னிழல் மீதே வீழ்ந்து மாய்ந்தார்
உம்மை அறிவார் இனி தமிழர்
தம்மை அறிவார் தமிழறிவார்
உய்த்தெழட்டும் உம் நினைவால் இனமே.


Monday, 9 March 2020

கள்ளிப்பழக் கவிதை

வெயிலேற் றுக்கெட்டித் தடித்த தோல்
சுற்றிலும் நெருக்கமாய் முட்கள்
கொடும்பால், இருந்தபோதும்
தீஞ்சுவைப் பழம் தரும்
கள்ளியைப் போல
வாழ்க்கை அவ்வப்போது
இனிப்பாய்க் கவிதைகள் தந்து சிரிக்கிறதே

Saturday, 7 March 2020

பெருமை கொள்கின்றன வரிகள்

மூக்கின்

ஒரு துளையில் காற்றோட்டமும்

மறு துளையில் போராட்டமும்

மூச்சாகிப் போக;

மூப்பும் பிணியும் மூட்டுவலியோடு

நொண்டி நொண்டி, பின்னே நடந்துவர,

முழுத்திறனோடு

முன்னே ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள்.

கோலமிட்டுச் சோறாக்கிக்

குழந்தை பேணிக் குடும்பம் காத்து,

பொதுவெளியில் மாந்தர்படும்

துயரம் பொறுக்காது,

பொழுது புலர்ந்ததும்

போராட்டத்தின் ஒளிக்கற்றைகள் தீண்டும்

முற்றம் கடந்து முன்னே வந்து

களப்பணிச் செய்தார்.



இவர்கள்,

அதிகாரப் பெருவெள்ளத்திலும்

அடிவேர் அசையாத நாணல்கள்.

கொடுங்காற்றிலும் குடைசாய்ந்துவிடாத

பெரு வேம்புகள்.

ஊர்நடுவே இளைப்பாறல் தரும்

ஆலமரங்கள்

கொல்லைப் புறத்தில்

உணவாய், மருந்தாய் நிற்கும்

முருங்கை மரங்கள்.

முதுகில் முள் சுமந்தாலும்

முகத்தில் நகை பூக்கும்

அருஞ்செடிகள்.



உம்மை அறிந்து

உம்பணி தெரிந்து;

பெண்குழந்தையொன்று பேசுவதாய்

என்னில் விளைந்த வரிகளுண்டு.

அதிலொன்றே இந்நாளில்

அன்புநிறை மகளிருக்கு உம்மொழியும்;

என்பங்கின் வாழ்த்துமாமே.



கேடுசூழ் நாடிதனை

ஊடாடிச் சீர்செய்வோம்.

கேளாச்செவி அனைத்தும்

கேட்கும்வரை குரல்கொடுப்போம்.

பாழாகும் சமுதாயம்

பார்த்து விழிமூடோம்.



மகளிர் நாள் - 2020




உலகம் வியந்த அதியனின் வாயிலில்
ஒருநாள் இசைத்தாள் அவள் பேரியாழ்
ஓசைகேட்டும் அவன் வந்தானில்லை.
வாயிலில் நின்றவன் கேட்டிடச் சொன்னாள்,
தன்னை அறியாதான் உன் தலைவன்
அன்றியும் என்னையும் அறியான்
நரம்பில் விரல்நிறுத்தி நல்லிசை முடிப்பேன்
எவ்விடம் இசைத்தாலும் எனக்குச் சோறிடுவார்
அன்றி இறந்து பட்டாலும்
என்பொருட்டு நில்லாது உலகு
என்றவள் நடந்தாள்; பின்னே,
அவள் பின்னே நடந்தது
ஆயுள் முழுவதும்  அதியனின் உலகு.
தடாரி அறைந்த தமிழ்ப்பெண் கைகளில்
தேறலின் குடுவை எடுத்துக் கொடுத்தான்.
ஊன்துவை அடிசில் ஊட்டி நின்றான்.
சுற்றம் மகிழ்ந்திட நெல்லும் பொன்னும்
சுற்றிக் கொள்ளப் பூவெனத் துணியும்
அள்ளிக் கொடுத்த அதியனைப் பாடிய
வண்டமிழ் உலகின் பெண்பேராளுமை
ஔவையின் தமிழ் கொண்டு
உலக மகளிர் வாழி! வாழி! என்போமே.