Tuesday 31 March 2020

கைகவர் முயக்கம் - ஔவையார்


செங்கணை நடந்து கொண்டிருக்கிறான். பகல் தாண்டிய வேளை. கிழக்கே தோன்றிய கதிரவன் மெல்ல ஊர்ந்து உச்சிக்கு ஏறிவிட்டான். ஏதோ ஒரு வேலை நிமித்தமாக நெஞ்சு நிறைந்த காதலி, எயிற்றியைப் பிரிந்து வந்து கொண்டிருக்கிறான். என்ன செய்வது வேலை நடந்தாக வேண்டுமே. அவளும் கூடவே வருகிறேன் என்றுதான் சொன்னாள். ஆனால், கோடையின் வெப்பத்தில் பாலையாய்த் திரிந்துகிடக்கும் இடங்களைக் கடந்து அவளையும் அழைத்துக் கொன்டு செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. "சீக்கிரம் வருகிறேன், அதுவரை அவளைப் பார்த்துக் கொள்" என்று தோழியிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

செங்கணை செல்வதைப் பார்த்துக்கொண்டே நின்ற எயிற்றியின் கண்களில் மெல்ல நீர் எட்டிப்பார்க்கிறது. ஊர் எல்லையில் அவன் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டே நிற்கிறாள். கண்கள் மாரியெனப் பொழிகின்றன. அருகில் நின்ற தோழி அவள் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். "அழாதே.. அவன் விரைவில் வந்துவிடுவேன் என்று சொல்லித்தானே செல்கிறான். கலங்காதே" என்று காதருகில் சொல்கிறாள். அதற்கு மேல் அவளாலும் பேச இயலவில்லை. எயிற்றியின் கவலை இவளையும் வாட்டுகிறது. மெல்ல அவளது கண்ணீரைத் துடைக்கிறாள். அழுகையிலும் மெல்ல முறுவல் பூக்கிறாள் எயிற்றி. "நான் அவர் போய்விட்ட கவலையில் அழவில்லையடி பெண்ணே"...

"பிறகு எதற்கு இவ்வளவு கண்ணீர்?"

"நம் ஊர் கடந்து சிறிது தொலைவு சென்றவுடன் கடினமான இடங்களை அவன் கடக்க வேண்டிவரும். இப்பொழுது உச்சிக்கு ஏறிவிட்ட சூரியனை நெருப்பு போன்ற செந்நிற வட்டம் சூழும். தரையிலிருந்து அலையென வெம்மை மேல் நோக்கி எழும்பும். அனல் பறக்கும் அந்தக் காட்டிடையே இலைகளில்லாமல் வெறும் மலர்கள் மட்டுமே கொண்ட இலவமரங்கள் நின்று கொண்டிருக்கும். வழக்கமாகச் சட்டென்று மொட்டுகள் மலர்ந்து விடுகிற இலவமரங்கள் செந்நிறத்தில் பூத்துக் கிடக்கும்.  அந்த பாலை போன்ற இடங்களை நானும் அறிவேன்"

"எப்படியடி?"

"முன்பு ஒருமுறை அதைக் காணவே இருவரும் சென்றோம். இன்று என்னவோ என்னை விட்டு விட்டுச் சென்று விட்டான்"

"விரைவில் வருவானடி.. கலங்காதே"

"கலங்கவில்லை பேதையே. கார்த்திகைத் திங்களில் ஆரவாரத்துடன் ஏராளமான பெண்கள் கூட்டம் நீண்ட வரிசையில் எடுத்துச் செல்லும் விளக்கின் சுடர் வரிசையைப் பார்த்திருக்கிறாயா?, அது போல இருக்கும் அந்த இலவமர வரிசை. அருகிலே இருக்கும் ஆழமான குளம் முற்றிலும் நீர்வற்றி, வெகுநாள்களாகக் காய்ந்ததில் உள்புறமெல்லாம் துகள் பறக்கத் தொடங்கியிருக்கும். அதைத் தாண்டிச் சென்றால் சிறிது தொலைவில் ஆறு ஒன்று இடைமறிக்கும். இப்பொழுது அதுவும் காய்ந்து தான் கிடக்கும். அவனுக்கு இந்த பயனிறந்துபோன காட்டில் என்ன மகிழ்ச்சி இருக்கும். பைத்தியக் காரன், அந்தக் காட்டிலே என்னோடு கழித்திருந்தால்..!"

"கழித்தால் என்ன கிடைக்கும். வெம்மை குறைந்துவிடுமா என்ன?"

"அடி போடி.. பேதையே. கச்சை விலகிய பெண்போலக் கிடக்கிற அந்த ஆற்று மணல்வெளியில், ஒரு அடர்ந்த மரம் உண்டு. அதன் பருத்துப் பெருத்தக் கிளைகள் மணலில் புதையும் அளவிற்குத் தாழ்ந்து கிடக்கும். மெத்தை விரித்தாற்போன்ற நுண்மணல் திடலில், அந்தக் கிளைகளின் கொத்துக் கொத்தான மெல்லிய மலர்கள் விரிந்து கிடக்கும். நாங்கள் இருவரும் இணைந்து சென்றிருந்தோமானால், அந்த மலர்ப்படுக்கையில்; ஒருவர் மெய் இன்னொருவர் மெய்யில் புகுந்துவிட நான்கு கைகளும் ஓருடலுமாய் முயங்கியிருப்போம். கைகள் நான்கும் ஒன்றையொன்று கொள்ளையிட, அன்பும் காதலும் கொண்ட முயக்கம் பெற்றிருப்பான் அவன். பாவம் அது அவனுக்குக் கிடைக்கவில்லையே என்று நான் வருந்துகிறேன் பெண்ணே"

"அப்ப உனக்குக் கவலையே இல்லையா?"

"ம்... என்னை அழைத்துக் கொண்டு சென்றிருந்தான் என்றால், வறண்டு கிடக்கும் குளத்தைக் கண்டு வருந்தி ஓய்வின்றி நீர் சொரிந்து நிறைக்கும் மலர் போல நாளெல்லாம் அழுது நீர்சிந்தாமல் இருந்திருக்கும் எனது கண்கள். பாவம் அவை. நான் கவலையோடிருக்கிறேன் என்ற பழி இன்றி இமை புணர உறக்கம் கொண்டிருக்கும்.  என்ன செய்வது? அவன் போய்விட்டானே"

இப்படியொரு காதலியின் நிலைமையச் செந்தமிழில் செறிந்தச் சொற்கூட்டில் பாடியிருக்கிறார் ஔவையார். பாடல் கீழே.

அகம் - 11 - பாலை - ஔவையார்
==============================
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்/
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,/
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் /
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த /
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, /
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் /
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென, /
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் /
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,/
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் /
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர, /
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து/
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் /
அழுதல் மேவல ஆகி, /
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! /


அருஞ்சொற்பொருள்
====================
 உருப்பு - வெப்பம்
அவிர் - ஒளிர்வு
கலி - ஆரவாரம்
ஆயம் - மகளிர் கூட்டம்
மலிபு - மிகுதி, ஏராளமான
கயம் - ஆழமான குளம் (கசம்- குமரி வழக்கு)
பயம் - வளம், பயன்
தபு - இறத்தல்
கம்மென - கூடுதல், இணைதல்
வம்பு - கச்சு, ஆடை
சினை - மரக்கிளை
பயில் - ஏராளமான
இணர் - பூங்கொத்து
எக்கர் - நுண்மணல் திட்டு
கவர் - கொள்ளையிடுதல்
நயவர - அன்பும் காதலும் சேர
நிகர் - ஒளிபொருந்திய
கடுப்ப - போல
ஓ  - ஓய்தல், மூடுதல்
அல்கல் - நாள் (அல்லும் பகலும்)
படுகுவ - ஒன்றன்மேல் ஒன்றாக (உறக்கம்)

பொருள் :- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலிNo comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்