Thursday 10 June 2021

மருத்துவரை நம்பணும்


 
"ஏன்னா எனக்கு தெரியாது...
தெரியாத ஒன்றை தெரிந்ததைப் போல சொல்லும் பழக்கம் எனக்கில்லை..." தம்பி யின் பதிவில் இருந்த இந்த சொற்றொடர் எனக்கு ஊர் நினைவொன்றை மீட்டியெழுப்பியது.

எங்கள் ஊரில் (கீழூரில்) ஒரு சித்த மருத்துவர் இருந்தார். நிறைய சிக்கலான நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்துகளை செய்து தருவார். நல்ல வசதியாக இருந்தவர் என்று சொல்வார்கள்.ஊரில் ஏராளமான பேர் அவரை "கொஞ்சம் சிடு மூஞ்சி" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
 
ஆனால், அப்பாவின் நெருங்கிய நண்பர். அப்பா நிறைய பேருக்கு அவரிடம் மருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே எனக்கு நான்கு ஐந்து சித்த மருத்துவர்களைத் தெரியும். என்னோடு ஏராளமான செய்திகளைப் பரிமாறிக்கொண்ட மருத்துவர்களும் உண்டு.

இவரிடம் இருந்த உயர் குணங்களாக மூன்றைச் சொல்லுகிறேன்.
 
1. மருத்துவத்தின் மீதும் மருந்தின் மீதும் தன்மீதுமான நம்பிக்கை.

2. நோயாளியிடம் உரையாடி பரிசோதித்த பின் "நாளைக்கு மருந்து செய்து தாரேன்." என்பார். மறுநாள் மருந்தோடு வருவார். "வைத்தியரே.. எவ்வளவு?" என்று கேட்கும் போது; 
வசதியானவர்களாய் இருந்தால் "கடைச் சரக்கு மட்டுமே 50 ரூவா ஆச்சு.." என்பார். அவர்கள் 75 ஓ 100ஓ கொடுப்பார்கள். வாங்கிக் கொள்வார்.
ஏழைகளாய் இருந்தால்: "மருந்துக்கு ஆன செலவச் சொன்னா குடுத்துருவியா? பெரிய இவன் மாதிரி கேக்குற. இருக்குறத குடுடே" என்பார். 5 ரூபாய் கொடுத்தால் கூட வாங்கிக் கொண்டு சென்று விடுவார்.

3. இதற்கிடையில் ஒன்று நடக்கும். அதுவே அவரது ஆகச் சிறந்த குணமாக நான் பார்க்கிறேன். (ஆனால் ஊர் அதைத் தான் "சிடுமூஞ்சி" என்று சொல்லும்).

எடுத்துக்காட்டாக ஒருவர் கண்ணில் ஏதாவது பிரச்சனை என்று மருந்து கேட்டிருப்பீர்கள். செய்து எடுத்துக் கொண்டு வருவார். அவருக்கு முன்னால் வந்ததும், 
 
"இதான் உன் கண்ணுக்கு மருந்து. இதப் பாரு இப்படி ரெண்டு சொட்டு கண்ணில் விடணும்" என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கண்ணில் இரண்டு சொட்டு மருந்தை விட்டுக்கொள்வார். பிறகு குப்பியை அவரிடம் நீட்டுவார்.

"கண்ணுல விட்டா வேற ஒண்ணும் செய்யாதில்ல வைத்தியரே.. நல்லா கொணமாயிரும்லா." என்று நம்மாளு வழக்கம் போல கேட்டு விட்டால் அந்தக் குப்பியைப் பிடுங்கி ஓங்கி தரையில் அடித்து உடைத்துவிட்டு (அப்ப எல்லாமே கண்ணாடிக் குப்பிகள் தான்), அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார்.

ஏன் இப்படிச் செய்கிறார் என்று அப்பாவிடம் கேட்டால் "மருந்த நம்பணும்டா, வைத்தியன நம்பணும்டா.." என்று சொல்வார்.

அவரது மருத்துவத்தின் சிறப்பை பல முறை நேரில் கண்டிருக்கிறேன். 

நினைவைக் கிளறிய தம்பிக்கு நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்