Saturday 22 May 2021

மழைப் பாடல்


 

திருச்சிராப்பள்ளியிலிருந்து தோழர் ராவெ தமிழ் இனியன் 20-05-2021 அன்று கைப்பேசியில் விளித்தார். சிறிது நேரம் நலம் உசாவியபின்,

"தோழர் மழை குறித்து பள்ளிகளில் சிறுவர் பாடும்படியான பாடல் ஒன்று எழுதுகிறீர்களா?" என்றார்.

"முயற்சிக்கிறேன்" என்றேன்.

"தோழர் கொஞ்சம் எளிய நடையில், சொற்களில் இருக்கட்டும்" என்றார்.

"புரிகிறது தோழர்" என்றேன்....

பாடல் எழுதி அவருக்கு அனுப்பினேன். அவருக்குப் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிகும் என எண்ணுகிறேன். 

கண்டிப்பாக பாடல் குறித்தான கருத்துகளைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

==========================================

 

மழைப் பாட்டு

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

 

ஒழுகிசை அகவலோசையுடைய நிலைமண்டில ஆசிரியப்பா

 

மழையே மழையே வாவா வா

மண்ணுங் குளிர்ந்திட வாவா வா

அமிழ்தம் நீதான் உலகுக் கென்றே

ஐயன் வள்ளுவர் சொன்னா ரே

அவரது வழியில் நாளும் நின்றே

அழைத்தோ மிங்கே வாமழை யே.

 

நெல்லும் கரும்பும் தெங்கும் பனையும்

எள்ளும் பருப்பும் கம்பும் தினையும்

உண்ணும் அனைத்தும் உன்னால் விளையும்

தண்ணீ ராலே தாகமுந் தணியும்

உணவையுஞ் செய்தாய் உணவென வானாய்

உலகஞ் செழிக்க வாமழை யே.

 

எங்களு ழவரு மேர்பிடித் தங்கே

மண்ணை யுழுது பயிரை வளர்த்து

கண்ணுங் கருத்தாய்க் காவலுஞ் செய்து

உண்ணும் யாவையு முலகம் பெறவே

விண்ணிலே செல்லும் மேகமு டைத்து

மண்ணில் பெய்வாய் மாமழை யே. 

 

உந்தன் நீர்த்துளி உடலில் பட்டால்

புல்லுங் கைகளை நீட்டிக் களிக்கும்

பூக்களுந் தலையை ஆட்டிச் சிரிக்கும்

புள்ளின மாயிரம் பாடல் இசைக்கும்

நாங்களும் நன்றா யாடிக் களிக்க

நல்லோர் சொல்போல் வாமழை யே   

 

-------------

காணொளி இங்கே   https://youtu.be/7i5JtcloLao



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்