Wednesday 16 June 2021

காக்கா கதை


 வானம் இருண்டுகொண்டுவந்தது. தொலைவில் மெல்லிய மின்னல் கீற்றுகள் பளிச்சிட்டன. மண்ணிலிருந்து வெப்பம் மெல்லக் கிளம்பியது. உடலில் சூடு படுவதை உணர்ந்த அந்தக் காக்கை தன் கூடு நோக்கிப் பறக்கத் தொடங்கியது. காட்டிலிருந்த எல்லா காக்கைகளும் வரத்தொடங்கியிருந்தன.  கூடவே கிளிகளும், கொக்குகளும், ஒன்றிரண்டு குயில்களும். 

அந்த வேப்பமரத்தில் ஏராளமான உயிர்கள் வாழ்கின்றன. அதன் வயது யாருக்கும் தெரியாது. அது எத்தனையோ உயிர்கள் முட்டையின் ஓடு உடைத்துப் பிறந்ததை,  வயதாகி கிளையிலிருந்து வீழ்ந்து மடிந்து எறுப்புகளுக்கு உணவாகிப்போன பறவைகளை, தன்மீது ஊர்ந்துகொண்டிருக்கும்போதே குருவிகளால் கொத்தித் தின்னப்பட்ட புழுக்களை, காக்கைகளைத் துரத்தும் அணில்களை, உதிர்ந்துகிடக்கும்  சின்னக் குச்சிகளை எடுத்துச் செல்லும் புறாக்களை, வெயில் கொதிக்கும் வேளைகளில் தன் நிழலில் தங்கிச் செல்லும் ஆடு மாடுகளைப் பார்த்திருக்கிறது. ஆனாலும் அங்கே ஏராளம் வதிபவை காக்கைகளே.

 சின்னத் தூறல்கள் விழத்தொடங்கின. காக்கைகள் சிறகு ஒடுக்கி அமர்ந்துகொண்டன. வானம் இன்னும் இருண்டது. பெருந்தூறலாய் மழை பெய்யத் தொடங்கியது. இலைகளின் வழியே நீர் வடிந்து சிறகு நனைக்கத் தொடங்கியது. மழை நிற்கும் வரை வேறெதுவும் செய்ய இயலாது. வேண்டுமென்றால் இந்தக் கிளையிலிருந்து அந்தக் கிளைக்குத் தாவலாம். ஓயாமல் அங்குமிங்கும் பறந்து, ஆற்றல் எல்லாம் செலவாகிப் போனால் மழை நின்ற பிறகு சிறகு உலர்த்த  காலதாமதம் ஆகிவிடும். அப்புறம் பசிக்கு உணவெடுக்க முடியாது. எனவே பொறுத்திருப்பதே சிறப்பு என காக்கைகள் எல்லாம் எதுவும் செய்யாது அமர்ந்துகொண்டு ஒன்றையொன்று பார்த்துக்கொண்டிருந்தன. 

மரத்தின் உரிந்த பட்டை ஓரிடத்தில் கிளைக்கு மேலே துருத்திக்கொண்டு நின்றது. அந்தப் பட்டைக்குக் கீழே ஒரு காக்கை அமர்ந்திருந்தது. மற்ற காக்கைகளை விட அது குறைவாகவே நனைந்தது. இதை இன்னொரு காக்கை பார்த்துக்கொண்டே இருந்தது. அதற்கு "காக்கையார்" என்று பெயர் வைத்துவிடுவோம்.

மெல்ல மழை வெறித்து வானம் தெரிந்தது. காக்கைகள் எல்லாம் சிறகுலர்த்த இடம் தேடி அமர்ந்தன. மெல்லப் பறப்பதும், அங்குமிங்கும் தாவுவதுமாக இருந்தன. "காக்கையார்" மரப்பட்டையின் அடியில் அமர்ந்திருந்த காக்கையை கவனித்துக்கொண்டே தானும் சிறகு உலர்த்திக்கொண்டிருந்தது. மிகுதியாக ஈரமாகாத காரணத்தால் அந்தக் காக்கையின் இறகு விரைவிலேயே உலர அது உணவுதேடிப் பறந்துவிட்டது. அதை "காக்கையார்" கவனிக்கத் தவறவில்லை.

இன்னொரு மழைநாளில் தொடக்கத்திலேயே "காக்கையார்" அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. ஆம் அது நினைத்தது போலவே இம்முறை அதுவே முதலில் சிறகுலர்த்திப் பறந்தது. ஆனால் மறுமுறை வேறொரு காக்கை முந்திக்கொண்டது.

மறுநாள் காக்கையார் உணவு தேடலுக்கு இடையிடையே சரியான ஒரு கிளையைத் தேடியது. மேலே குச்சிகளைக் கொண்டு மரப்பட்டைபோல செய்துகொண்டது. கீழே முட்களால் கட்டப்பட்ட கூடு. இவையெல்லம் செய்வதற்கு அது சில நாள்கள் உணவு தேட அலைவதைக் குறைக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் பசி பொறுக்க வேண்டியிருந்தது. ஆனால், அடுத்த மழை வந்தபோது மிகுதியாக நனையாமல் தப்பியது. எப்பொழுதுமே முதல் ஆளாக சிறகுகள் காய்ந்து உணவு தேடிப் பறந்தது.

மற்ற காக்கைகளுக்கு வியப்பு. "இதை எப்படி கட்டினாய்?  எங்களுக்கும் சொல்லிக்கொடேன்" என்றன  "காக்கையாரிடம்". 

"அதற்கு நேரமில்லை, நான் உணவு தேடிப் போகிறேன்" என்றபடி பறந்தது அது.

மறுநாள், "காக்கையாரே இன்று உனக்கான உணவை நான் தேடித்தருகிறேன். அதுபோல் எனக்குக் கட்டித்தருகிறாயா?" என்று கேட்டது இன்னொரு காக்கை.

"ம்" என்று மெல்லத் தலையாட்டியது காக்கையார்.

முழுமூச்சாகக் கூட்டின்மீது தடுப்பு அமைப்பதை மட்டுமே செய்ததால் மாலையாகும் முன்பாகவே வேலை முடிந்துவிட்டது. ஆனால், காக்கையாருக்கு உணவுதேடியதில் வழக்கத்தைவிட களைப்படைந்திருந்தது அந்தக் காக்கை. ஆனாலும் என்ன? அதற்கொரு நனையாத இடம் கிடைத்துவிட்டதே. 

ஆளாளுக்குக் கேட்க காக்கையார் முழுநேரமாக கூடு செப்பனிடுவதைச் செய்யத்தொடங்கியிருந்தது. தேவைக்கு மேல் உணவு சேர அதை எறும்புகள்,  பறவைகளிடமிருந்து பாதுகாக்க ஏற்பாடு செய்யவேண்டிவந்தது. அந்தச் சிந்தனையில் கூடு கட்டும் வேலை தடைபட, தன் குஞ்சுகளுக்கு அந்த வேலையைக் கற்றுத்தந்தது. அவைகள் அந்த வேலையைத் தொடரத் தொடங்கின. 

காக்கையார் மண்டையைக் கிளறியும் பலவாறு அலைந்தும் "பெட்டகம்" ஒன்றைச் செய்துவிட உணவு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், தன் மக்கள் வெகுவாகக் கூடு செய்வதிலேயே காலங்கழிப்பதால் இயல்பான உணவுதேடல் மறந்துபோகுமே. என்றாவது உணவு தேடவேண்டிய நிலைவந்தால் அவை என்ன செய்யும் என்ற கவலையும் காக்கையாருக்கு வந்தது. சிந்தனையின் இறுதியில் வாரம் ஒருமுறை உணவுதேடுவதை குஞ்சுகளுக்குக் கற்றுத்தருவது என முடிவெடுத்தது.

"இன்று எல்லோரும் போகலாம் வாருங்கள்" என்று சொல்லிக் கிளம்பும்போதுதான் அடுத்த சிக்கல் தோன்றியது. வெளியே போய்விட்டு வரும் வரை "பெட்டகத்தை" யார் பார்த்துக்கொள்வது. பக்கத்தில் யாரிடமாவது சொல்லிவிட்டுப் போகலாம் என்று இன்னொரு காக்கையிடம் கேட்டது.

"சரி பார்த்துக்கொள்கிறேன். ஆனால், நான் வெளியே போக இயலாதே. எனக்கு உணவு?"

"ம்.. அதுவும் சரிதான். இந்தா இதை வைத்துக் கொள்" என்று பெட்டகத்திலிருந்து கொஞ்சம் உணவை எடுத்துக் கொடுத்தது. அன்றிலிருந்து வாரம் ஒருமுறை இது நடைபெறலாயிற்று.

காவல் இருந்ததற்காகப் பெற்ற உணவை உண்ணும் போது அந்தக் காக்கைக்கு இன்னொரு சிக்கல் எழுந்தது. உணவு காய்ந்திருந்தது. உண்ண இலகுவாக இல்லை. அதை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த குளத்தில் நனைத்து உண்டது. வாரத்தில் ஒருநாள் இதைச் செய்வதற்கு, கூட்டின் அருகிலேயே நீர் கிடைத்தால் சிறப்பாக இருக்குமே என்று அதற்குத் தோன்றியது. அது இயலாதபோது குளத்தருகே இருக்கும் மரத்தைத் தேட வேண்டியதாயிற்று. அங்கும் சில காக்கைகள் நகர ஆரம்பித்தன. மெல்ல மெல்ல காட்டுக்கு வெளியேயும் காக்கைகள் பரவத் தொடங்கின.

பலகாலம் ஓடிவிட்டது. பெட்டகம் செய்யும் காக்கைக்கு உணவுசேகரித்தல் முற்றுமுழுதாக மறந்துபோய்விட்டது. அதன் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததென்னவோ பெட்டகம் செய்வதை மட்டும்தான். "உணவு தேடும் விழா" இப்பொழுதெல்லாம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே சடங்காக நடக்கிறது.

கூரை மட்டுமல்ல, கூடுகட்டுவதற்கென்றே தனியான கூட்டம் உருவாகிவிட்டது. சில காக்கைகளோ கதிரவனுக்கு முன்னமே எழுந்து இருட்டும் வரை உணவு சேகரித்துக் கொண்டிருக்கின்றன.

தூக்கணாங்குருவிகளைப் போலே மின்மினிப் பூச்சிகளை விளக்காகப் பயன்படுத்தி இரவிலும் உணவு தேடலாமா என்று ஒரு காக்கை சிந்திக்கத் தொடங்கியிருந்தது.

மெல்ல மெல்ல காலம் நடந்துகொண்டிருந்தது. இப்பொழுது அங்கே நிறைய மரங்கள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் ஏராளமாகக் கூடுகட்டும் காக்கைகள், உணவு சேகரிக்கும் காக்கைகள், பெட்டகம் செய்யும் காக்கைகள் என எல்லாக் காக்கைகளும் சேர்ந்து வாழ்கின்றன.

தன் குஞ்சுகளுக்கான உணவையும் இந்த ஏமாளிக் காக்கைகளே தேடித்தரட்டுமென்று; காக்கைகள் ஏமாறும் வேளையில் கூட்டில் முட்டையிட, குயில்கள் சில இவற்றைப் பார்த்துக்கொண்டே காத்திருக்கின்றன. 

 

=========================================

எல்லோரும் ஒரே மாதிரியான மனிதர்களே. பிறப்பால் அனைவரும் ஒன்றே. வேறுபாடுகள் நாமாகக் கற்பித்துக்கொண்டவையே என்பதை தன் பேரக் குழந்தைகளுக்கு கதையாகச் சொல்லுமாறு நண்பர் ஒருவர் கேட்டார். சொன்னேன். சொல்லி முடித்ததும் எனக்குள் ஒரு நிறைவு வந்ததை உணர்ந்தேன். அதனால் அந்தக் கதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

நான் பேச்சு வழக்கில் அவர்களுக்குச் சொன்னது இந்தக் "காக்கா கதை". படித்துவிட்டு நீங்களும் பேரக்குழந்தைகளுக்குச் சொல்லவிரும்பினால், "ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது" என்று பேச்சு வழக்காகவே சொல்லுங்கள். கண்டிப்பாக அவர்கள் விரும்பிக் கேட்பார்கள்.

நன்றி.

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

16-06-2021


2 comments:

  1. அருமையான கதை, மனித நேயமும் பிற எந்த உயிர்களையும் துன்புறுத்தாமல் வாழ்பவரே மனிதர்
    கசாப்பு கடை வைத்திருப்பவரும் அவரவர் தெய்வத்தை வேண்டி தான் காலையில் தொழிலைத் தொடங்குகிறார்கள்
    பிறரை ஏமாற்றாமல் பிறருக்கு கெடுதல் நினைக்காமல் வாழ நினைப்பதே வாழ்க்கை மற்றவை யாவும் சமூகத்தை ஏமாற்றி வாழும் போலி வாழ்க்கையே..

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்