Sunday 11 December 2022

பாரதி எனும் பெருவியப்பு!

 

நாட்டு நலம் உரைத்த நல்ல

பாட்டுத் திறக்காரன் நீ!

வேட்டல் விடுதலை யென்ற

தேட்டை வளர்த்தவன் நீ!

ஏட்டுக் கவிகளிடை நல்ல

பாட்டுப் பெரும்புலவன் நீ!


கூட்டுப் புழுக்கள் என்றே வீட்டில்

பூட்டிக் கிடந்த பெண்கள்

தீட்டுக் கழித்தவன் நீ!


சாட்டை வரிகள் கொண்டு

கெட்ட சாதி எரித்தவன் நீ!

சீட்டி அடித்துப் பாட மக்கள்

பாட்டும் தந்தவன் நீ!

ஏட்டில் எழுதியே அரசை

ஆட்டிப் பார்த்தவன் நீ!


சூட்சியால் உயர் சிதம்பரம்

மாட்டிச் சிறைப்பட, சொந்த

நாட்டில் கையேந்திக் கப்பல்

ஓட்ட நினைத்தவன் நீ!


ஊட்டி வளர்க்கப் பிள்ளைக்கும்

பாட்டுச் செய்தவன் நீ!

காட்டுக் குயிலுக்கும் நல்ல

பாட்டுப் படித்தவன் நீ!

கூட்டுத் திரள் இயற்கை தனை

பாட்டில் அடைத்தவன் நீ!


பூட்கை இடறி வீழ்ந்த பின்னும்

மீட்சி அடைந்தவன் நீ!

நட்டநடு இரவில் மருந்தின்றி எமை

விட்டுப் பிரிந்தவன் நீ!


மட்டு சிறிதெனினும் வாழ்ந்த

மாட்சி பெரிதாக எம்முள்

காட்சி அளிப் பவன் நீ!


(இணைக்குறள் ஆசிரியப்பா)

=============================

2022, பாரதி பிறந்தநாள் பாடல்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்