Saturday 17 December 2022

கன்னத்தில் அறைந்த காலம்



இன்று கண்விழிக்கும் போதே பறையொலியும், சங்கொலியும் கேட்டன. சோகத்தின் ஈனக்குரலாய் இடையிடையே மணியொலியும். யாராக இருக்கும் என்ற சிந்தனையோடு கதவைத் திறக்க முனைகையில், துணைவியார்...

"பக்கத்து வீட்டுக்கெல்லாம் தண்ணிக் கேன் போடுறான்ல அந்தப் பையனோட மனைவி இறந்துட்டாங்களாம்" 
 
"என்னாச்சு திடீர்னு?... வயசு குறைவுதானே?"
 
"ஆமா. நாப்பது வயசு போல தான் இருக்கும். ரெம்ப நாளாவே கேன்சர் இருந்துதாம்"
 
"அப்படியா?"
 
"ஆமா.. பாவம் ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க வேற"

பட்டென்று யாரோ இடது கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. மனம் பின்னோக்கி ஓடத் தொடங்கியது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சிராப்பள்ளி வாழ்க்கை. காவிரியின் நீர்ப் பெருக்கு வீடுகளுக்குள்ளேயும் வளம் நிறைத்து வைத்திருந்தது. குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க, மரம் செடிகளுக்கு ஊற்ற... என நாளும் வற்றாது வீடுகளுக்குள்ளும் ஓடியவள் காவிரி.
 
குழாயில் வரும் நீரை அப்படியே பிடித்துக் குடிப்போம். அத்தனைச் சுவை. சுடவைத்தல் கூடக் கிடையாது. ரசினி போன்ற வயதான நடிகர்கள் மிக இளவயதுப் பெண்களுடன் குத்தாட்டம் போடுவது போல, எப்பொழுதாவது ஊருக்குப் போகும் போது பேருந்து நிலையத்தில் வாங்கும் தண்ணீர்க் குப்பி எம்மோடு பொருந்தாமல் காட்சியளிக்குமே அத்தோடு சரி. ஆர்வோ, கேன் என்று எதையும் அறியாமலேயே வாழ்க்கை ஓடிவிட்டது.

காலம் ஒருநாள் சென்னைக்குப் புலம் பெயர வைத்தது. வடபழனி வாடகை வீட்டில் முதல் நாளே ஐந்து லிட்டர் தண்ணீர் குப்பி வாங்கி... எத்தனை தேடியும் வேறு வழியின்றி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி... வாங்கி..  மனம் நொந்து, சேச்சே கொடுமை.

அப்படித் தண்ணீர் கொண்டுவர முதலில் வந்தவரின் மனைவிதான் இப்பொழுது இறந்து போனவர். எங்கள் அடுக்ககத்திற்கு அருகில் தான் அவரது வீடு. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கொண்டு வருவார். 

அருகே இருக்கும் தேநீர்க் கடையொன்றில் ஒருநாள் தண்ணீர்க் கேன் இருபது உருவாய்க்கு வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். உசாவியதில் அதுதான் எங்கள் பகுதியின் பரவலான விலை என்பதை அறிந்தேன்.

மறுமுறை பணம் கொடுக்கும் போது,
 
"என்ன தம்பி எல்லாரும் 20 உருவாய்க்குத் தானே தராங்க" 

"நம்மகிட்ட 25 தாங்க" என்றார்..

ஏராளமானோர் தண்ணீர் வணிகம் செய்து கொண்டிருந்ததால் மறு நாள் முதல் வேறு ஒருவரிடம் வாங்கத் தொடங்கி, கொரோனாவில் அவரும் ஊர் விட்டுச் செல்ல இப்பொழுது இன்னொருவர் தந்து கொண்டிருக்கிறார்.

பெருநகரமென்றாலும் நானிருக்கும் பகுதி மிகப் பழமையான இடம். கரிகாலனின் 'புலியூர் கோட்டம்'. சிற்றூர் போன்ற மனித உறவுகளின் பின்னல் கொண்டது. சிறிய ஊரொன்றில் பிறந்த எனக்கு இந்தப் பகுதி ஒருநாளும் பெருநகரம் போல் தோன்றியதில்லை.

இரண்டு பெண்களின் தந்தை, இறந்துபோன பெண்ணின் கணவன், முதல் முறை எமக்கு நீர் கொணர்ந்தவர்; மீண்டும் பக்கத்து வீடுகளுக்கு வருவார். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மனதுக்குள் மெல்லிய வருத்தம் வரும்.

"ஏன் கூடுதலாகக் கேட்கிறீர்கள்?" என்று கேட்டிருந்தால் ஒருவேளை அவர் சொல்லியிருக்கக் கூடுமோ? கேட்காமல் போனது பிழையென்றே தோன்றுகிறது. கேட்டிருந்தால் அவரது வலிக்கு சிட்டுக்குருவியின் இறகாலேனும் விசிறிவிட்ட ஆறுதல் எனக்குக் கிடைத்திருக்குமோ?

காலம் கன்னத்தில் அறைந்துவிட, எங்கிருந்தோ வந்து யார் இறப்புக்கோ மனதுக்குள் அரற்றிக் கொண்டிருக்கிறேன். உறவுகளின் பொருள் உணர்த்தி வளர்த்த என் மண்ணிற்கும், மக்களுக்கும் நன்றி!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்