Sunday 9 July 2023

காலத்தின் அடையாளம்



புலரும் முன்பே
இருள் விலக்கிக் கொள்கிறது
இராசாவின் காப்பிக்கடை.

இளவேனில் காலத்தில்கூட
அடுக்களைக்குள்
மேகம்பரப்பும்
இட்டலிப் பானை.

விடிந்தபின்னும்
வெண்ணிலாக்களைப்
பெற்றெடுக்கும் ஆப்பச்சட்டி.

இரசத்தில் குளித்தெழும்
பருப்புவடைகள்.

இவற்றோடு பிரியாத
உறவாய்த்
தேங்காய்ச் சட்டினி.

உணவின் ஏற்றத்தாழ்வை
உடைத்தெறிந்த
காலத்தின் அடையாளங்களோடு,

இன்னும் தொலைந்துவிடாத
அழகுடன் எனது சிற்றூர்.

===========================
'மொட்டை மாடியில் பட்டாம்பூச்சிகள்' கவிதைத் தொகுதி.
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
09-07-2023
===========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்