Thursday 14 December 2023

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு - நூல் மதிப்புரை

 

கீழடி அகழாய்வு குறித்தப் பேச்சுக்கள் எழத்தொடங்கிய 2015ல் அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். ஏறத்தாழ பத்தடி ஆழம் தோண்டப்பட்டிருந்த சில குழிகளின் அருகிருந்து மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பானைப்பொறிப்பைக் கையில் வைத்துக்கொண்டு 'இதில் திசன் என்று தமிழ்ப்பிராமியில் எழுதியிருக்கிறது' எனச் சொன்னார் ஒருவர். 

"ஐயா, ஒன்று தமிழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அல்லது பிராமியில் இருக்கிறது என்று சொல்லுங்கள். அதென்ன இப்பொழுதும் கூட தமிழ்ப்பிராமி?" என்று கேட்டபோது சினங்கொண்டார் அவர். எமக்குள் தருக்கம் தொடங்கியது. "எங்கள் குழுத்தலைவரிடம் வந்து கேளுங்கள்" என நெகிழிப்பாய் வேய்ந்த குடிலுக்கு அழைத்துச் சென்றார். தலைவர் (திரு அமர்நாத்) அங்கில்லை. கோவையானத் தரவுகள் இல்லாமல் மாணவர்களிடம் தெளிவுபடுத்த இயலாத நிலையில் நண்பரும் நானும் திரும்பிவிட்டோம். இந்த நூல் அன்றே கிடைத்திருந்தால் வேலை எளிதாக முடிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அத்தனை பெறுதியானது இந்நூல்.

எனக்கு நூல் கிடைத்த கதையும் நூலைப் போன்றே பெறுமதியும் சுவையும் கொண்டதுதான். மகராசன் அவர்களின் 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' மற்றும் 'திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்' எனும் இரு நூற்களும் வேண்டுமென்றும் விலை விவரம் அனுப்புங்கள் எனவும் ஆதி பதிப்பகத்திற்குச் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

"ஐயா பணம் எதுவும் அனுப்ப வேண்டாம் முகவரி மட்டும் அனுப்புங்கள். நூற்களை அனுப்பிவைக்கிறேன். செந்தில் வரதவேல்." என்றொரு மாற்றச் செய்தி வந்தது. பிற்பாடு நூற்களும் வந்தன. அருமையான நூற்களை அனுப்பிவைத்த செந்திலுக்கு மிக்க நன்றி. (காலந்தாழ்ந்து எழுதுகிறேன் பொறுத்தருள்க).

தமிழும் தமிழரும் பலகாலும் பவாறான வினாக்களை, தெளிவுபடுத்த இயலாத கருத்தாக்கங்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் தரவுகளைத் தேட பல நூற்களை, கட்டுரைகளைத் தேடிப் படிக்கவேண்டியது கட்டாயமாகிறது. பேரறிஞர் பலரால் ஆய்வு செய்து எழுதப்பெற்றக் கட்டுரைகள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களால் எழுதப் பெற்ற ஆய்வு முடிவுகள், அகழாய்வுச் செய்திகள், செவ்விலக்கியச் செய்திகள் என பலவற்றையும் படித்தால் மட்டுமே பல வினாக்களுக்கும், வலிந்து செய்யப்பெறும் திரிபுகளுக்கும் விளக்கமளித்து ஏற்கவோ மறுக்கவோ இயலும்.

இப்படி பல்துறைத் தரவுகள் இன்றைய காலகட்டத்தில் பெருந்தேவையாக இருக்கின்றன. அவற்றை நோக்கி நகர்வதற்கான நுழைவாயில்கள், அறிமுகங்கள் கட்டாயமாகின்றன. எளிமையாகவும் அதே வேளையில் செறிவாகவும் தொகுக்கப் பெறும் ஆய்வு நூற்கள் இந்தத் தேவையை முழுமையடையச் செய்யும்.

அப்படியொரு ஆய்வு நூல்தான் முனைவர் திரு மகராசன் எழுதிய "தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு". பரந்துபட்ட பெருவேலையின் சிறுவிளைச்சலாக அருமையாகப் படைக்கப்பட்டிருக்கிறது நூல்.

"தமிழி"க்கு சாதி சமய அடையாளங்கள் இல்லையென்பதை அடிக்கூறாகக் கொண்டு, பெருநகரொன்றின் கையடக்க வரைபடம்போல, பெருங்கோட்டையொன்றின் நுழைவாயில் அறிவிப்புப் பலகைபோல விரிகின்றன பக்கங்கள்.

"சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல. மொழிக்கும் நீண்ட நெடிய வளர்ச்சிக் கட்டங்கள் இருக்கின்றன. ஆயினும், மனிதகுலத்தைத் தவிர்த்த தனியான வளர்ச்சியல்ல. மனிதகுல வரலாற்றோடு மொழியின் வரலாறும் பிணைந்து கிடக்கின்றது." எனத் தொடங்கி மொழியின் பிறப்பியல் குறித்து விவரிக்கையில் ஒலி, சைகை, ஓசை, பேச்சு என எல்லாவற்றையும் ஆசிரியர் தொட்டுக்காட்டுகின்றபோது தமிழ் போன்ற இயன்மொழியின்; உழைப்புக்காலத்திற்கு முந்தைய காரணிகள், மொழிக்கூறுகள் மொழியியல் அறிஞர்களால் முகாமையானதாகப் பார்க்கப்படவேண்டுமென்ற உரையாடலொன்று உள்ளுறையாகத் தொடங்குகின்றது, சிறப்பு.
 
நூலின் அளவும் படிப்போரின் எண்ணவோட்டங்கள் குறித்தானச் சிந்தனையும் மாந்த வரலாற்றின் பல பக்கங்களை விரைந்து கடக்கவேண்டிய கட்டாயத்தை ஆசிரியருக்கு ஏற்படுத்தியிருக்குமோ என்ற எண்ணம் எமக்குள் ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை. காட்டு வாழ்வியலின் பெரும்பகுதியிலிருந்து சட்டென்று கூட்டுழைப்பின் காலத்திற்குள் அடியெடுத்து நடக்கிறது நூல். 
 
தமிழி, பிராமி குறித்தான சிறப்பான விவரிப்பு, சீராய்வு நூலை மிக்கச் செழுமையுடைதாகச் செய்கின்றது. அசோகப் பிராமியின் காலம் குறித்தச் செய்திகள் மற்றும் ஒப்பாய்வு தமிழியின் காலத்தை முன்னிறுத்துவதோடு தமிழுக்கு உற்றார் மற்றும் உறார் யாரென்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. (இத்தனைக்குப் பின்னும் 'தமிழ்ப்பிராமி' என்பாரும் உளர் என்பது தமிழுக்கும் தமிழருக்கும் பெருங்கேடு).

"தமிழி எழுத்து வடிவம் அசோகரின் காலத்திற்கு முன்பான காலகட்டத்தைச் சார்ந்தது. அசோகர் காலத்திற்கு முன்பு பிராமி என்பதான எழுத்து வடிவமே கிடையாது. அசோகர் காலத்தியப் பிராமி எழுத்து வடிவம் வேறு; தமிழி எழுத்து வடிவம் வேறு. தமிழி எழுத்து வடிவம் தனித்து வளர்ச்சி அடைந்தும் பரவலாக்கம் பெற்றும் வந்துள்ளது. சிந்துவெளி எழுத்துக் குறிகளோடு தொடர்புடைய எழுத்துக் குறியீடுகள் தமிழி எழுத்து வடிவத்தோடும் பொருந்திப் போகின்றன எனலாம்.தமிழி எழுத்து வடிவமானது அரசதிகார மரபின் உருவாக்கம் அல்ல; அக்காலத்தியத் தமிழ் மக்களின் பாடுகளையும் அறிவையும் புலப்படுத்துவதற்கான பண்பாட்டு மரபின் உருவாக்கம் ஆகும். தமிழி எழுத்து வடிவங்களின் தொல்லியல் புழங்கு வெளிகளை வைத்து நோக்கும்போது, மக்கள் மொழியாகத் தமிழி எழுத்து வடிவம் உயிர்ப்பாக இருந்திருக்கிறது என உறுதியாகக் கருத முடிகிறது." என்ற வரிகளில் காணக்கிடைக்கும் ஆசிரியரின் ஆய்வுநோக்கும், உறுதியும் நூலெங்கும் விரவிக்கிடக்கிறது.
 
எழுத்தின் வடிவங்கள், வகைகள் குறித்தான விவரிப்பு மற்றும் வரலாற்றுத் தொகுப்பு செறிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஓவிய எழுத்து, கருத்தெழுத்து, ஒலியெழுத்து போன்ற எழுத்துநிலைகளை விளக்க, ஏராளமான காட்டுகளை தொல் இலக்கியங்களிலிருந்தும் தொல்லியல் ஆய்வு முடிவுகளிலிருந்தும் எடுத்தாண்டிருப்பது தமிழ் குறித்தான உரையாடல்களில் பங்கேற்போருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

"பாண்டிய நாட்டை வென்ற பிற்காலச் சோழ மன்னர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச் சோழன், முதலாம் இராசராசன் காலம்வரை ஆண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக, பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட பிராமியின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும்தான் வழக்காறு பெற்றன. கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பாண்டியர் பகுதிகளில் வட்டெழுத்துப் பயன்பாடு குறைந்து விட்டது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து முறை மங்கி, கிரந்தத் தமிழ் எழுத்துமுறை மேலோங்கியது. இது, சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டதால், வட்டெழுத்துகள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது." என்பன போன்ற பலவிடங்களில்; வரலாற்றுச் செய்திகள் காய்தல் உவத்தலின்றி படிப்போரை வந்தடைகின்றன.
 
அதனாலேயே, "தென் இந்தியாவில் காணப்பெறுவது வட்டெழுத்து ஒன்றே. பின்னரே மொழியாளரும் பௌத்தரும் தத்தம் எழுத்துக்களோடு (கிரந்தம், பிராமி) தமிழகம் புக்கனர் எனப் பர்நெல் கூறுவதிலிருந்து, தமிழகம் முழுதும் பரவியிருந்த வட்டெழுத்துக்களே பிராமியின் தொடர்பாலும் வடமொழித் தொடர்பாலும் நாளடைவில் கிரந்தத் தமிழாகத் திரிபடைந்தது எனலாம். தமிழ் எழுத்துகளின் ஒலி, வரிவடிவங்களின் காரண காரிய இயல்புகளுக்கு மாறாகவும் புறம்பாகவும் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எழுத்து மரபுக்கு முரணான கற்பிதங்கள் பாட்டியல் உள்ளிட்ட பிற்காலத்திய இலக்கணங்கள் வாயிலாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இடைக்காலத்தில் அரசதிகாரத் துணையுடன் செல்வாக்கு செலுத்திய சாதி / சமய / பாலின / வர்க்கப் பாகுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எழுத்துகளின் வழியாகப் பரவலாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளுக்கும் அத்தகையச் சாதி / சமய / பாலின / வர்க்கச் சாயல்களையும் அடையாளங்களையும் புகுத்த முனைந்திருப்பதின் வெளிப்பாடே பாட்டியல் உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்களின் உருவாக்கமாகும்." என்ற ஆசிரியரின் முடிபு இயல்பாக இருக்கிறது.
 
'உ'வில் தொடங்கும் உலகுதழுவிய தமிழின் எழுத்துப்பண்பாட்டியல் குறித்தான  நூலின் பகுதி முகாமையானது. தமிழர்களின் மக்கள் பெயர்களும், தமிழர்கள் வாழ்கிற ஊர் இடப்பெயர்களும், தமிழர்களின் வழிபடு தெய்வங்களின் பெயர்கள்கூட ‘உலகம்’ எனும் சொல்லைக்கொண்டு குறிக்கும் பண்பாட்டு வழக்காறுகள் பற்றியச் செய்திகள் சீராகத் தொகுக்கபெற்றுள்ளன.

தமிழும் அதன் எழுத்துகளும் அதிகார, சமய, சாதி, பாலின மற்றும் வட்டாரச் சார்புகளின்றி மக்கள் மொழியாகவும் பொது எழுத்துக்களோடும் பன்னெடுங்காலமாகவே நிலவிவருகின்றது என்பதை அறுதியாக உறுதி செய்கிறார் முனைவர் மகராசன் என்பதே நூலின் பெருஞ்சிறப்பு. 
 
இளையோர் பலர் பங்கெடுக்கத் தொடங்கியிருக்கும் அறிவுக்களத்தில் இஃதோர் ஆய்தமாகும் என்பது உறுதி. இன்னும் விரித்துப் பேசியிருந்தால் பேராய்தமாயிருக்கும் என்பது எமது கருத்து. அப்படிப் பல நூற்களைப் படைக்கவேண்டுமென்று திரு மகராசனை வாழ்த்துகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
14-12-2023
 
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
+91 99948 80005.
 
அஞ்சலில் நூலைப்பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்