Tuesday 16 January 2024

தீக்குறளை சென்றோதோம் - ஆண்டாள்

 


"வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா(று) எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்."

 குறளை kuṟaḷai, பெ.(n.) 1. கோட்சொல்; calumny, aspersion, backbiting.
     "பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென" (மணிமே.30:68);.
   2. வறுமை; poverty, adversity.
     "குறளை யுணட்பளவு தோன்றும்" (திரிகடு.37);.
    3.நிந்தனை; sarcastic expressions, censure, reproach.
   4. குள்ளம்; dwarfishness.

     [குறு → குறள் → குறளை.] - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

குறளை = கோள்

கோள், அதிலும் தீக்கோள் சொல்லமாட்டோம் என்று பொருள் கொள்ளலாம்    என்று எண்ணுகிறேன்.

 ஓது-தல்ōdudal,    5.செ.குன்றாவி. (v.t.) 1. படித்தல்; to read, {} audibly in order to commit to memory.
     "ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும்" (குறள்.834);.
   2. சொல் லுதல்; to speak, say, declare.
     "ஓதரிய சுகர் போல" (தாயு.ஆகார.32);.
   3. வேதமோதுதல்; to recite the {} with the appropriate intonation.
   4. மந்திரம், வழிபாடு முதலியன செய்தல்; to utter mantras, repeat prayers.
   5. கமுக்கமாகக் கூறுதல்; to persuade clande- stinely, to breathe out; to whisper, as communicating information.
அவன் காதில் அடிக்கடி ஓதுகிறான்.
   6. பாடுதல்; to sing.
     "ஓதி ... ... ... ... களிச்சுரும் பரற்றும்" (சிறபாண்.22);.
   ம. ஓதுக;   க., பட. ஓது;   கோத. ஓத். துட. வீத்;   குட. ஓத்;   து. ஓதுனி;தெ. சதுவு.
     [ஊது → ஓது → ஓதல்.] - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

 “ஓதுதல்” என்பதற்கு "கமுக்கமாகச் சொல்லுதல்" என்ற பொருளும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் இருக்கிறது.

அன்றியும், குமரி, நெல்லைப் பகுதிகளில் "ஓதுதல்" என்ற சொல் இதே பயன்பாட்டில்தான் வழக்கில் ஆளப்பெறுகிறது.

"அங்க என்ன ஓதிக்கிட்டு கெடக்க."

"வயல்ல இருந்து அவன் வந்த ஒடனே எல்லாத்தையும் ஓதிக்கிட்டுதான் மறு சோலி பாப்பா இவ"

ஆண்டாளும் தெக்கத்திக்காரி தானே....

“நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்”

இவையெல்லாம் நாள்தோறும் செய்யும் வழ்மையான செயல்களைத் தவிர்ப்பதுபோன்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளன. எனில், ஆண்டாள் காலத்திலோ அதற்கு முன்போ நாள்தோறும் திருக்குறள் எங்கேனும் ஓதப்பெற்றதாய் இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் சான்றுகள் உண்டோ?  கிடைத்தால் நலம்.

 இது ஒரு கருத்துதான். அவ்வளவு பெரிய கவிதாயினி குறளைத் தவறாக ஆண்டிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். ஆனாலும் இருவேறு பொருள் தந்து மயக்கம் தருவதால் தவிர்த்திருக்கலாம். ஆனால், வழக்குச் சொற்கள் பயன்பாடு தவிர்க்க இயலாது போயிருக்கலாம். பெரும்பரப்பில் தன் பாடல் இசைக்கப்படலாம் என்பது குறித்தான ஆண்டாளின் எண்ணம் எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவில்லை?

 இதுபோன்ற காரணங்களால் தான் பாவாணர் வழக்குச் சொற்களுக்கும் முக்கிய இடம் கொடுத்து அகரமுதலித்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் போலும்.
 
படம் : https://www.behance.net/

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்