Monday 12 August 2024

வெண்சர்க்கரை தீது



 . ==================

' வெண்சர்க்கரை தீது
. (வஞ்சிப்பா)
. ==================
மூடுபனிபோல் தூள்காட்டுமவ்/
வேடுபறியா டுபரிநிறத்துக/
ளோடுயினியா துமருந்திநற்/
கேடடையுமோ ருடலங்கொளீரென/
கோடைதனிலா சையொடுகுளித்/
தாடுமொருகா கமெனப்பெரு/
மேடைதனிலோ சையொடுமுடை/
வாராடையெ னவோர்கவிதை/
பின்ஊர்/
திரும்பிச் செல்கை யிலேகடைத் தெருவில்/
விரும்பி யுண்பார் திருநெல் லைக்களியே/
சிராப்பள்ளி ப.மாதேவன்
13-02-2020
==============
எளிய வடிவம்

மூடுபனி போல் தூள் காட்டும்
அவ் வேடுபறி ஆடு பரி
நிறத் துகளோடு,
இனி யாதும் அருந்தி
நற்கேடடையும் ஓர் உடலங் கொளீர், என
கோடைதனில் ஆசையொடு குளித்தாடும் ஒரு காகமெனப்
பெருமேடைதனில் ஓசையொடு முடைவார் ஆடையென ஒரு கவிதை.
பின் ஊர்திரும்பிச் செல்கையிலே கடைத்தெருவில்
விரும்பி உண்பார்
திருநெல்லைக் களியே.




பார்க்கும்போது மூடுபனி போல, திருவரங்கம் வேடுபறி விழாவில் காணக் கிடைக்கும் குதிரையின் நிறம் போல வெண்ணிறத் துகள்களாக இருக்கிறது வெள்ளைச் சர்க்கரை.
அதனால் செய்யப்பட்ட பண்டங்கள் எதையும் உண்டு கேட்டிலும் நற்கேடு அடையும் உடலைப் பெறாதீர்கள் என்று, கடுங்கோடையிலே நீரைக் கண்டவுடன் குளித்து ஆடும் காகத்தைப் போல உடலை அசைத்து, பெரிய மேடைகளிலே கவிதை ஆடை முடைந்துவிட்டு ஊர் திரும்பும் வேளையில், திருநெல்வேலிக் கடைத்தெருவில் ஆசையுடன் திருநெல்லைக்களி உண்பார்.
"- திருவரங்கம் வேடுபறி நிகழ்ச்சியில் வெண்குதிரை வாகனத்தில் ஊர்வலம் நடக்கும். வெள்ளை நிறத் தூள் சர்க்கரையைக் குறிக்க இந்த வரி.
திருநெல்லைக் களி - திருநெல்வேலி அல்வா.



===============
இன்று நெல்லைத் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கும் போது, எனது பழைய கவிதை ஒன்றிற்கு எழுதிய விளக்கம்.
12-08-2023
==================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்