Saturday 24 August 2024

வாழை


நேற்றைய வண்டிகளின் பேரிரைச்சல் அடங்கிய, சக்கரங்கள் நெரித்துப் புழுதி கிளம்பி  மரங்களின் இலைகளில் படிந்து அதிகாலைப் பனிமூட்டமாய் மிரட்டும் வடபழனி கோடம்பாக்கம் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். மெட்ரோ பணிகளுக்காகக் புலியூர் அரசுப் பள்ளியின் அருகே முறித்து வீழ்த்தப்பட்ட பெரிய அரசமரத்தின் காய்ந்துபோன தடி ஒன்றின் மேலே எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்திருக்கிறார். அருகே சோற்றுவாளி ஒன்றைத் திறந்தபடி  நாற்பதைத் தாண்டிய ஒருவர்; மகனாக இருக்கலாம்.  சாப்பிடுமாறு சைகை செய்துவிட்டு நகர்ந்து போகிறார்.

இருவருமே  ஒப்பந்தப் பணியாளர்களுக்கான ஆரஞ்சு மற்றும் நீல வண்ணங்களில் சீருடை அணிந்திருக்கிறார்கள்.  இந்த பெரியவருக்கு இங்கு என்ன வேலை? பளு தூக்கும்  இயந்திரங்கள் நகர்ந்து வருகிற போது எதிரே வருகிற வாகனங்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கலாம், எச்சரிக்கை செய்யலாம் இப்படியான பணிகள் இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதில் சிக்கலில்லை. 


எந்த ஊரில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள் என்பது தெரியாது. இந்தப் பெருநகரத்தின் பல்வேறு இரைச்சல்களுக்கு நடுவே, வெட்டி வீழ்த்தப்பட்டது போக எஞ்சியிருக்கிற தூசி படிந்த மரங்களுக்கு இடையே சோறுண்ணும் அவரது மனதுக்குள் ஒரு நிலத்தின் ஓவியம் இன்னும் மாசு படியாமல் இருக்குமோ? என்ற எண்ணத்தோடு சுற்றிலும் பார்க்கிறேன். சாலையில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கும் மனிதத் தலைகள். தாம்பரம் கடற்கரைத் தொடரியைப் பிடிக்க விரைந்து செல்லும் கால்கள், பேருந்து நிறுத்ததில் இமை மூடாது எண்களைத் தேடி நிற்கும் கண்கள், மாசு படிந்த காற்றுக்குப் பழகிப்போன நாசிகள். எல்லோர் மீதும் இரக்கம் வருகிறது. என்மீதும்.

எல்லாருடைய மனதிலும் விட்டு நகர்ந்து வந்த ஒரு நிலத்தின் ஓவியங்கள் இருக்கின்றன. எல்லோரிடமும் தூரிகைகள் இல்லை. தூரிகை கிடைக்காது மனதுக்குள் உறங்கும் பலரது ஓவியங்களை நேற்று திரையில் பார்த்த அனுபவம் தான் இந்த எழுத்தின் ஊற்றுக்கண்.

எல்லைகளற்ற நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் ஓசையின் நடுவே  இழூம் என்ற குறிகாரனின் குடுகுடுப்பை ஒலியால் பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டுப் படிமங்களை,  வாழ்க்கையின் எச்சங்களை காலடிக்குக் கீழே புதைத்து வைத்திருக்கும்  பெருநிலம் ஒன்றின் கால ஓவியத்தை வரையத் தொடங்குகிறது வாழை.

நிலத்தின் வண்ணத்தை தன் உடலெங்கும் பூசிக்கொள்கிற,  அப்பிக்கொண்டு நெடுக நடக்கிற ஒரு திரைக்கதையை மாரி செல்வராசு தன் நினைவுகளிலிருந்து மெல்ல மெல்ல விரிக்கிறார். 

தாமிரபரணி காலாற நடக்கும் நிலம். எங்கிலும் வேளாண்மையின் சான்றாகச் செழித்துக்கிடக்கும் நெல், வாழை. சேறோடும் நீரோடும் கலந்துவிட்ட மக்களின் வாழ்வின் ஆதாரம். இன்ப துன்பங்களில் முதலில் பங்கெடுக்கும் உறவு. வாங்கும் கடனும், வட்டியும் முதலும் வாழையின் பெயர் சொல்லியே. அழும்போது கட்டியணைப்பதும், பசியில் உணவூட்டுவதும் அதுவே. எழுந்து நிற்பதும் வீழ்ந்து மடிவதும் அதன் இலைகளுக்கு நடுவேதான். வாயில் இனித்துத் தொண்டையில் மறையும் ஒரு துளித் தேனாய் காதலும்; காய்க்காத வாழைப்பூவின் இதழ்களில் தான். இப்படி எல்லாமுமாக இருக்கிற தன் நிலத்தின் காட்சிகளை பெருந்திரையில் தீட்டுகிறார். 

பொதுவாகவே, ராப்பாடிகள் பாடியிராத கருப்பு இரவுகள் வேளாண் நிலத்தில் பிறந்த மனதின் அடியாழத்தில் அழுகையோடு கலந்த வருத்தமாய்க் குடியிருக்கும். இப்படியான காட்சிகளைக் காணும் போது நெஞ்சம் உள்ளுக்குள் தானே எழுந்து நடக்கும். எல்லோரோடும் நானும் நடக்கிறேன், தோளில் இல்லாத சுமையோடு.

கூப்பிடுகிற தொலைவில் இருக்கிற ஆதிச்சநல்லூரின் அடிவயிற்றில் இருந்து எடுத்த உடைந்த பானை ஒன்றின் கழுத்தில் மின்னும் வரலாற்றின் பேரெழுத்து. அதன் அருகே வனைந்தவனின் குருதிக் கறை. என இரண்டையுமே காட்சியாய் விரிக்கின்றன மாரியின் கண்கள்.

ஆறு வழிச்சாலைகளின் கீழே புதைந்து கிடக்கும் வாழ்க்கையின் எச்சங்களை அறிந்திடாமல், காற்றைக் கூட  நுழைய விடாமல் கண்ணாடி அடைத்து விரைந்து செல்கிற  மகிழுந்துகளின் கதவைத் தட்டித் திறக்கின்றன காட்சிகள். எந்தக் காட்சியையும் உங்களிடம் சொல்லாமல் கடந்து போவதையே விரும்புகிறேன். அவை உங்கள் பார்வைக்காக இருக்கட்டும். 

பசி... பெரும்பசி. சோற்றுப் பானையைத் தேடியலையும் பசிப்பிணி. ஊரெங்கும் ஓலம். படைப்பில் நிலத்தின் பெரும்பங்கை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கிற மாரிக்கு நல்வாழ்த்து. நீங்கள் நினைப்பதைக் கடத்தியிருக்கிறீர்கள்.

கடைகளில் கிடைக்கிற கலப்படமற்ற மருதாணிப் பொடிகள் உள்ளங்கையை சிவப்பாக்குவதில்லை சிவப்பாக்குகிற மருதாணி பொடிகள் செயற்கை நிறமிகள் கலப்படம் செய்யப்பட்ட வணிகப்பொருள் தான். அதனால்  ஒரு மருதாணிச் செடியை உங்கள் மனதுக்குள் பதியம் போட்டு வளர்க்கிறார் மாரி செல்வராசு. படம் முடிந்து திரையரங்கின் விளக்குகளெல்லாம் எரியத் தொடங்கிய பின்னும் ஐந்து நிமிடங்களுக்கு இருக்கையிலேயே அமர்ந்து... அதன்பின் அனைவரும் கைதட்டிய அந்தப் பேரோசையே அதற்குச் சான்று.

சேரன்மாதேவியில் இருந்து கரையோரமாய் நடந்து நடந்து காரையாறு அருகில் மாசுபடாத தாமிரபரணித் தண்ணீரைக் கை நிறைய அள்ளி அள்ளிப் பருகிய உள்ள உவகையோடு திரையரங்கை விட்டு வெளியே வருகிறேன்.

சிவனணைந்தான் என் நெஞ்சோடும் அணைந்தான்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்