Wednesday 1 April 2020

என்னுள் பெய்த உவகை - கபிலர்


நல்மான்கோம்பையின் சிறிய தெருக்கள் கதிரவனின் மெல்லிய மஞ்சள் வண்ணக் கீற்றில் குளிக்கத் தொடங்குகின்றன. தாயங்கண்ணி மாடுகள் அடைபட்டிருக்கும் பட்டியை மெதுவாகத் திறந்துவிடுகிறாள். தமையன் அவற்றை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வான். தலைநிமிர்த்தி மேற்கே பார்க்கிறாள்.  வானமலை செம்மஞ்சள் பூசி நிற்கிறது.

"இன்றேனும் அவன் வந்து விடுவானா? இல்லை பொழுது கடந்து போய் விடுமா?" அவள் மனதில் மெல்லிய கவலை எழுந்தது. குடிலை நோக்கி நடக்கலானாள்.
"எனக்குத்தான் மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது. ஆனால், அவளுக்கு அந்தக் கவலை சிறிதும் இல்லையே. எந்த வருத்தமும் முகத்தில் இன்றி இருக்கிறாளே. இன்று கேட்டுவிட வேண்டும்" என்று எண்ணியபடி குடிலுக்குள் நுழைந்தாள்.


அவள், தாயங்கண்ணியின் தோழி ,நெடுவெண்ணிலவி. இருவரும் வானமலையின் அடிவாரத்தில் இருக்கும் நல்மான்கோம்பையில் பிறந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். உயிர்நட்பு இருவருக்குள்ளும். 

அதோ... மேற்கில் வானம் தழுவி ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒருபகுதியின் தலைவன் பெருங்காடனை நெடுவெண்ணிலவி பார்த்த முதல் நாள் தொடக்கம், அவர்களின் களவின் உளநிலை அனைத்தும் அறிந்திருந்தாள் தாயங்கண்ணி. குறிஞ்சியும் முல்லையும் கைகோர்க்கும் அந்த மலையடியில் அவர்கள் வளர்த்தக் களவின் விளையாட்டனைத்தும் தன் தோழியுடன் சொல்லாமல் விடமாட்டாள் நெடுவெண்ணிலவி. 

பேரியாற்றுக் கரையில் சிறு பூசலொன்றைச் சரிசெய்யச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவன், சொல்லிச் சென்றக் காலக்கெடு முடிந்தும் வந்தானில்லை. இன்று வருவான், இன்று வருவான் என்று நாள்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. தோழியின் காதல் இப்படி ஒரு நிலையில் சிக்கிக் கொண்டதே என்றப் பெருங்கவலை தாயங்கண்ணிக்கு வந்து விட்டது.  ஓருயிராகவே வளர்ந்த நட்பாயிற்றே. இப்படியான எத்தனையோ நட்புகள்   செவ்விலக்கியம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

ஆனால், நெடுவெண்ணிலவியோ எந்தக் கவலையும் அற்று வழமை போலவே இருக்கிறாள். இன்றும் எழுந்து தயிர்கடைந்து மூதாட்டியிடம் கொடுத்தனுப்பிவிட்டு , பாலில் வெந்த வரகுச்சோற்றை உண்டுகொண்டிருக்கிறாள்.

"வெண்ணிலா... அவனுக்கும் சேர்த்து உண்கிறாயா? கவலையின்றி இருக்கிறாயே எப்படியம்மா" என்று கேட்டுக்கொண்டே தாயங்கண்ணி வீட்டுக்குள் நுழைந்தாள்.

"பாரு... அவன் இன்னும் வரவில்லையே என்ற கவலை உனக்கு இருக்கா? நல்ல உட்கார்ந்து தின்னுகிட்டு இருக்க... கறுப்பி.. கருகறுப்பி"

நெடுவெண்ணிலவி கண்கள் இடுக்கி மெல்லச் சிரித்தாள். 

"சிரிப்ப பாரு. கண்ணுல கொஞ்சமேனும் வருத்தம் தெரியுதா பாரு. அடிச்சு பெய்த மழையில் செழிச்சுக் கெடக்குற மழைப்பிச்சிச் செடியில, கொத்துக் கொத்தா பறிக்க முடியாம இருக்கிற பிச்சிமொட்டின் முதுகு நிறம் போல அழகாச் சிவந்து இருக்கு கண்ணு. கொழுகொழுன்னு பார்த்தாலே ஆசை வர மாதிரிதான் இருக்கு. "

வெண்ணிலா மறுபடியும் வெடித்துச் சிரித்தாள். அவளுக்குள் அந்த ஆழமான காதலின் நம்பிக்கை நெட்டுயரத்திற்கு நின்று கொண்டிருக்கிறது. அவன் கண்டிப்பாக வருவான் என்ற நம்பிக்கை. அவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினாள் தாயங்கண்ணி.

"சரி... கண்ண விடு. உடம்ப பாரு. நெடுநாள் ஆகிவிட்டதே என்று பசலை பூத்து நிக்குதா?. முன்னாடி இருந்தத விட தளதளன்னு பளபளப்பு ஏறி நிக்குதடி கறுப்பி.. எப்படியடி? என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, சிறிது தொலைவிலிருந்து தெள்ளத் தெளிவாய்க் கேட்டது அந்தச் சீழ்க்கையொலி.

தாயங்கண்ணிதான் முதலில் எழுந்தாள். சிறுமூங்கில் கோர்த்திருந்தச் சாளரத்தின் வழியே எட்டிப்பார்த்தாள். 

"வெண்ணிலஆஆஆஆ.... பெருங்காடன் வாராண்டி... பெண்ணே" மகிழ்ச்சியில் துள்ளினாள். உற்சாகம் பீறிட ஆசையுடன் நெடுவெண்ணிலவியின் கன்னங்களைக் கிள்ளினாள்.  முத்தமிட்டாள்.

"என்னடி இவ்வளவு மகிழ்ச்சி..."

"உனக்கென்ன நீ கவலையே இல்லாமல் இருந்தாய். நீங்கள் இருவரும் எப்பொழுது இணைவீர்கள் என்று நாளும், புலர்ந்தது முதல் கவலையோடு இருந்தேன் நான். அதனால் தான் இத்தனை மகிழ்ச்சி"

"இத்தனை என்றால் எத்தனை"

"போடி இவளே... கவலையற்றவளே. சில ஆண்டுகளில் கோடை நீண்டுவிடும். நாடெல்லாம் வறண்டு, உழவு செய்ய வேண்டிய கலப்பைகள் உறங்கிக் கொண்டிருக்கும். பச்சைப் பசேலென்று கிடந்த நிலம் பசுமை குன்றி காய்ந்து இருக்கும். ஆழமான பெருங்குளங்கள் வற்றி அதன் கரைகள் குன்றுகள் போல் தோற்றம் காட்டும். குளத்திலும், கரையோர மரத்திலும் வாழ்ந்திருந்த பறவைகள் இடம்பெயர்ந்து காணாது போய் திங்கள் இரண்டு தாண்டியிருக்கும். வலசை செல்லும் பறவைகளேனும் தங்குமா என்று பார்த்தால், அவையும் வறண்ட குளத்தைப் பார்த்த உடனே மரங்களில் அமராமலேயே சென்றுவிடும். அந்தக் குளத்தைப் பார்த்தால், அதனுள் கதிரவன் குடியேறி விட்டானோ என்று எண்ணத் தோன்றும். நாடே வெம்மையில் புரளும். ஊர் மக்களெல்லாம் வறட்சி தாங்காது மழை எப்பொழுது வரும் என்று எண்ணி எண்ணி ஏங்கித் தான் நாளும் உறங்கச் செல்வார்கள். அப்படி உறங்கிக் கிடந்த ஒரு நாளின் வைகறைப் பொழுதில், அந்தப் பள்ளத்தாக்கு போன்றப் பெருங்குளம் நிறைந்து வழியும் அளவிற்குப்  பெருமழையொன்று விடாது பெய்து தீர்த்தால் ஊர் மக்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள். அவர்களின் அத்தனை மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்து என் உள்ளத்தில் பெய்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது பெருங்காடன் உன்னைத் தேடி வந்து நிற்கும் இந்த வரவு"

பட்டென்று எழுந்த நெடுவெண்ணிலவி தோழியை இறுகக் கட்டியணைத்தாள். அவள் கொழுங்கடைக் கண்களில் மகிழ்ச்சியின் துளிகள் சிதறின. பெருங்காடனும் குடிலுக்குள் நுழைந்தான்.

நட்பின் உச்சத்தையும், காதலின் ஆழத்தையும் நம்பிக்கையையும் நற்றமிழில் கோர்க்கிறார் கபிலர். அருமையான இந்தப் பாடல் அகநானூற்றின் 42 வது பாடல். காதலின் ஆழத்தை உடலைக் கொண்டும், நட்பின் ஆழத்தை வறண்ட நிலத்தின் பெருமழையைக் கொண்டும் நெய்து கொடுத்த கபிலரின் பாவழகே அழகு. பாடல் கீழே.


மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரும் நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழும் கடை மழைக் கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்சக்
கோடை நீடிய பைது அறு காலைக்
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப்
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்த மாறே
 
அருஞ்சொற்பொருள்
===================
 
மலிபெய் - பெருமழை
கலித்த - தழைத்த
பித்திகம் - பிச்சி
கொயல் அரும் - பறிக்க இயலாத
பெயல் - மழை
முகை - மொட்டு
வெரிந் - முதுகு
மாஅயோயே - நல்ல கறுப்பு நிறத்தவள்
வறம் கூர - வறட்சிமிக
பைது - பசுமை
சே - தங்குதல்
சேக்கல்லா - தங்காமல்
புள்ள - பறவைகள்
என்றூழ் - வெப்பம் மிகுந்த (எல் + ஊழ், எல் - கதிரவன், ஊழ் - மிகுதி)
சேண் - சேய்மை , தொலைவில்
உயர்வரை - பெரிய மலை
வான் தோய் - வானம் தொட்டு
வெற்பன் - குறிஞ்சித் தலைவன்

 

1 comment:

  1. பன்மலை அடுக்கம் - தெற்கு நோக்கி செல்லும் கீழைபகுதியின் மலை அடுக்கமும், மேலை பகுதியில் வடக்கு நோக்கி விரியும் மலை அடுக்கமும் அவற்றிக்கு ஊடே செல்லும் மருத நிலனும், - இன்றய தேனீ - சின்னமனுர் -கம்பம்- கோம்பை-போடி பகுதியும் வருச நாட்டு பேரிழியாறும் -இன்றய சேலம் பகுதியில் அன்று வாழ்ந்து மறைந்த கபிலர் அறிந்தது எங்ஙனம் என்று வியப்பு மேலிடுகிறது.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்