Thursday 2 April 2020

நண்டிடம் சிக்கிய நாவல்பழம் - அம்மூவனார்



முடிநாகன், பேரியாற்றங்கரை முசிறியிலிருந்து மாந்தை நகருக்கு வந்து பதினேழு ஆண்டுகள் ஓடிவிட்டன. மன்னன் குட்டுவன் கோதையின் தம்பி கேட்டுக் கொண்டதற்கு இணங்க துணைவியையும் ஒன்றரை வயது மகள் இளவெயினியையும் அழைத்துக் கொண்டு மாந்தைக்கு வரவேண்டியதாயிற்று. முசிறியைப் போன்ற ஆற்றுத் துறைமுகத்திற்கும் மாந்தையைப் போன்ற கடலடித் துறைக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தன. அவர் சிறுவனாக இருந்த போதே முசிறி உலகறிந்தத் துறையாக இருந்தது. அன்று மாந்தை, சிறுதுறைதான். செங்கடல் வணிகம் சிறக்க இன்னொரு பெருந்துறை வேண்டிவந்ததால் மாந்தையை வளமாக்கும் பணியில் மன்னன் ஈடுபாடு கொண்டான். மாந்தையும் வளரத் தொடங்கியது. கூடவே இளவெயினியும்.

இன்று சீனத்திலிருந்து மீன்பிடி வலைகளைச் சுமந்து வரும் பெருங்கலமொன்று வந்து விடும். அதிலிருந்து இறக்கும் வலைகளை எண்ணி முத்திரையிட்டு சுங்கம் பெற வேண்டும். எப்படியாகினும் உச்சிப்பொழுது தாண்டிவிடும். உணவுக்கு வீட்டுக்கு வருவதை விட எடுத்துச் செல்வதே சிறப்பென்று தோன்றியது. 

"மகளே... வெயினி... அந்தச் சோற்றுவாளியில் உச்சைக்கான உணவை எடு. நான் கொண்டு போக வேண்டும்"

சிறிது நேரத்தில் கையில் சோற்றுவாளியுடன் நின்றாள் இளவெயினி.

"அப்பா... இதோ சோறு"

கையில் வாங்கிக்கொண்டு பனையோலைக் குடை ஒன்றையும் எடுத்துக்கொண்டு துறை நோக்கி நடக்க ஆரம்பித்தார் முடிநாகன். தொலைவில் குடகடல் அலையெழும்பும் ஓசை. மனதுக்குள் இளவெயினி பற்றிய எண்ணம். 

"அவளும் நன்றாக வளர்ந்து விட்டாள். ஒரு ஆண்மகனுடன் சேர்ந்து வாழ வேண்டிய காலம் வந்துவிட்டது" என்று மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த வேளையில் தான் ஊர் பேசும் 'அலர்' குறித்து தெரிந்து கொண்டார். யாரோ ஒருவனோடு களவில் இருக்கிறாள்.  குடநாட்டின் 'நறவு' தான் அவனது ஊராம். ஆண்மை கொண்டவனாம். மேலோர் சொல்கேட்கும் நன்மகனாம். இருவரும் ஒருவரை ஒருவர் உளமார விரும்புகிறார்களாம். துறையின் நீங்கி அருகே உள்ள நாவல் மரக்காடுகளிலும், நெய்தல் பூத்துக் கிடக்கும் நீர்நிலை அருகிலும் களவில் ஈடுபடுகிறார்களாம்.  நறவுக்கும், மாத்தைக்கும் அதிக தொலைவு இல்லாததால் அவனும் அடிக்கடி வந்து விடுகிறானாம். இப்படியே அவனைக் குறித்து இளவெயினியின் தோழி சொன்னவற்றையெல்லாம். அவரோடு பகிர்ந்து கொண்டாள். கேட்டுக் கொண்டே இருந்தவர்,

"அவளை எப்பொழுதும் வெளியே சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்று சொல்லிவைக்கிறாயா? அவள் தோழியிடமும் சொல். சிந்தித்து நல்ல முடிவொன்று எடுப்போம். இந்தக் காற்றடிக் காலம் முடியும் வரை வேலை அதிகமாக இருக்கும்.... சொல்லிவைக்கிறாயா?" என்றார். துணைவியாரும் சரியென்று சொல்லி நின்றார்.

மறுநாள் தொடங்கி இளவெயினியை பெரும்பாலும் வெளியே செல்லாமல் பார்த்துக் கொண்டாள் தாய். முற்றத்தில் நுழைந்த தோழியிடம் தந்தை சொன்னவற்றைச் சொன்னாள். "என்ன காரணம் கொண்டும் இளவெயினியிடம் சொல்லிவிடாதே" என்றும் கேட்டுக்கொண்டாள்.

இளவெயினி நினைத்தது நடந்து விடப்போகிறது என்ற மகிழ்ச்சி, தோழிக்கு வந்தது. வேலையை விரைவு படுத்த எண்ணினாள்.

இரண்டு நாள்கள் கழித்து பகற்குறி தேடி வந்தவனிடம் இளவெயினி இற்செறித்து வைக்கப்பட்டிருப்பதைக் கூறினாள். அதைக்கேட்டுச் சினம் கொண்டவனிடம் செய்தி முழுவதையும் சொன்னாள். தணிந்தான்.

"சரி.. இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும்"

"ம்.. இளவெயினியோடு புன்னைமர நிழலில் கூடிக்களிக்கையில் என்னைக் கேட்டாயா?"

"இதென்ன கேள்வி. எல்லாமும் உனக்குத் தெரியுந்தானே?"

"சரி.. சரி. நீ ஒன்று செய்.  வரும் நான்காம் பிறை நாளில், உன் தந்தையொடு வந்து இளவெயினி வேண்டுமென அவள் தந்தை முடிநாகனிடம் கேள்"

"விடுவேனா... கண்டிப்பாக வருகிறேன். இளவெயினியிடம் சொல்" என்றவன் முகம் மலர, கிழக்கே நறவு நோக்கிச் சென்றான்.

வீட்டுக்கு வந்தவள் இளவெயினியிடம் ஏதும் கூறாது, தாயிடம் மட்டும் செய்தி சொன்னாள்.

மறைநிலவு கடந்து நான்காம் பிறையும் வந்தது. உச்சிவேளை கழிந்த நேரம் அவன் உற்றாரோடு வந்து நின்றான். இளவெயினியின் தந்தையை நோக்கி "உமது பெண்ணோடு நான் வாழ விரும்புகிறேன். எமது களவை ஊரறிந்து விட்டது இனியும் காலம் தாழ்த்த விரும்பவில்லை.  எங்களை இணைத்து வையுங்கள்." என்று கேட்டு நின்றான். எல்லோரும் மகிழ்ந்து வாழ்த்தினர். மாலை உணவு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அவன் மெல்ல நடந்து இளவெயினியைத் தனியாக அழைக்க முயன்றான். அதற்குள் அவளது தோழி, அவன் கையைப் பிடித்து இழுத்து முற்றத்திற்கு வந்தாள்.

"நினைவில் வைத்துக் கொள். என் தோழியை குட்டுவன் இந்த நகரை பார்ப்பது போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். இளவெயினி இந்த மாந்தை நகரைப் போன்ற நன்னலம் கொண்டவள்"

"என்ன அப்படிச் சிறப்பான நலம் மாந்தையிலிருக்கிறது? இதுவும் ஒரு ஊர் அவ்வளவு தானே!"

"என்ன அப்படி நினைத்துவிட்டாய்.... போட்டி பொறாமை இல்லாத மக்கள். நிறைவான மனம் கொண்ட உயிர்கள். செழிப்பான நகர் இது. மேலைக் கடல் பொங்கியெழுந்து கரைசேர, மணலை வாரி கரையில் சேர்க்கும்.  அது பஞ்சு மெத்தை போன்று விரிந்து கிடக்கும். ஒருநாள் நல்ல காற்று வீசியது. ஆடிமாதம் என்று நினைக்கிறேன். அங்கிருந்த பெரிய நாவல் மரத்திலிருந்து மெல்லிய காம்புடைய, கொழுத்தக் கனிகள் காற்றுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல் உதிர்ந்து விழுந்தன. அருகே பறந்து கொண்டிருந்த கருவண்டொன்று, பெண்வண்டுதான் விழுந்ததென்று எண்ணி நாவல்பழத்தை நெருங்கிப் புரட்டியது.  அந்த நேரம் வளையிலிருந்து வெளியேறிய நண்டு... புரளும் கருவண்டை நாவல் பழமென எண்ணித் தன் பெருங்கையால் பிடித்துக் கொண்டது. நண்டிடமிருந்து தப்பிவிட எவ்வளவோ முயற்சி செய்தும் இயலாது போகவே, விரைந்து வலுவாக மீட்டும் யாழ்நரம்பின் பெரொலியாகப் பெருங்குரலெடுத்து ரீங்காரமிட்டது. அந்த ஓசையைக் கேட்டு தொலைவில் இரைதேடிக் கொண்டிருந்த நாரை விடுவிடுவென்று வந்து நண்டைப் பிடித்து உலுக்கி எறிந்தது. வண்டும் விடுபட்டது. நண்டும் பிழைத்துப் போனது. தெரியுமா!. அத்துணைச் செறிந்த பெருந்துறை மாந்தை"

"ஊர்ப் பெருமை சிறப்பாகத் தான் இருக்கிறது. நான் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்"

"ஆம் அவள் முன்பும் இப்படித்தான் இருந்தாள் தெரியுமா? ஆனால், ஒன்று அறிவாயா?"

"என்ன?"

"நீங்கள் இருவரும் களவில் கூடிக்களித்த காலத்தில் நேரம் அறியாது, பணியறியாது இன்புற்றிருந்த வேளைகளில் எல்லாம் அவள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பாள். உன் கைப்பிடி சிறிது தளர்ந்தாலும் அவள் நலம் சிறிதேனும் கெட்டு விடுகிறது தெரியுமா? அவள் கள்ளுண்டக் களிப்பு போன்றக் காமத்திற்குச் சொந்தக்காரி. உன் முயக்கத்தில் சிறிது கை நெகிழ்ந்த்தாலும் அவள் கண்கள் பசலை கொள்ளும். அதனால் மாந்தையின் நலங்கெடாது மன்னன் பார்ப்பதுபோல நீயும் இவளைப் பார்த்துக் கொள்ளவேண்டும், புரிந்ததா?" என்று பெருமிதம் பொங்கப் பேசி முடித்தாள்.

இயற்கையின் படைப்பில் ஒரு பெண்ணின் தேவை என்னவென்பதை தோழி வாயிலாக ஆணுக்குச் சொல்லும் அழகுமிகு பாடல் இது. ஒரு நாட்டின் வளத்தைப் பொன் பொருள் கொண்டு பேசுவதுபோல , உயிர்ச்சூழலைக் கொண்டும் சொல்ல இயலும் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று. ஆம் பல்லுயிர் ஓம்புதல் எல்லாவற்றிலும் தலை.

பாடல் கீழே.

நற்றிணை - 35 - நெய்தல் - அம்மூவனார்
====================================


பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப் புற இருங்கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப்
பல்கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம்,
பண்டும் இற்றே; கண்டிசின் தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ, மகிழ்ந்தோர் 
கள் களி செருக்கத்து அன்ன
காமம் கொல் இவள் கண் பசந்ததுவே?


அருஞ்சொற்பொருள்
====================

புன்கால் - மெல்லிய காம்பு
பொதிப்புற - களி பொருந்திய, கொழுத்த, சதைப்பற்று
இருங்கனி - கரியநிறக் கனி
கிளை - தன் இனம்
செத்து - ஒப்ப, போன்ற, என
பலகால் அலவன் - பலகால்கள் கொண்ட நண்டு
அசாந்து - அசந்து, தளர்ந்து
இமிரும் - வண்டின் ஊதல் ஓசை
பூசல் - பேரொலி
கன்டிசின் - காண்பாயாக
தெய்யோ - அசைநிலை




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்