Saturday 4 April 2020

மலர்ச்சோலை அழுதது - ஔவையார்



தன்னிழல் தன்னடி ஆகும் வேளையில் வீட்டிலிருந்து கிளம்பி ஊரெல்லையில் இருக்கும் அழகிய சோலைக்கு வரச் சொல்லியிருந்தான் மத்தி.  உச்சி கடந்து ஒருநாழிகை ஆகும் போது தானும் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தான். 

வீட்டு வாயிலில் அமர்ந்து முற்றத்தில் நின்று கொண்டிருந்த புன்னை மரத்தைப் பார்த்துக் கொடிருந்தாள். அதன் நிழல் மரத்தை ஒட்டி கீழே  இருந்த கேணியில் முழுவதுமாக விழும் வரைக் காத்திருந்தாள். அருகே தென்னை ஓலையில் உணக்குவதற்காக வைக்கப் பட்டிருந்த மீன்களைக் காகம் ஒன்று எடுத்துச் செல்வதில் கூட அவள் கவனம் செல்லவில்லை. விழி மூடாது கேணியையே பார்த்திருந்தாள். ஒருவழியாக அந்த நொடியும் வந்தது. வேளை உச்சிப்பொழுது என்பதை உணர்ந்தாள். உள்ளே ஓடிச் சென்று ஓலைப் பொதியில் வைத்திருந்த சுட்ட திருக்கைத் துண்டங்களை எடுத்துக் கொண்டு மெல்ல வெளியே ஓடினாள். வீட்டின் பின்புறமிருந்து படலை விலக்கிக் கொண்டு "கயற்கண்ணீஈஈ.. என்றழைத்த அம்மாவின் நீளமான குரல் கூட அவள் காதில் விழுந்ததாய்த் தெரியவில்லை.


தொலைவில் இருந்து பார்க்கும் போதே, கதிரவனின் ஒளியில்; வண்ண வண்ணப் பூக்களால் நிறைந்து கிடந்த அந்தச் சோலை பேரழகாக மின்னியது. அதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே சோலையில் நுழைந்தாள். முகப்பில் இருந்த சிறு குளத்தில் நெய்தல் மலர்கள் பூத்துக் கிடந்தன. மெல்லிய காற்றில் அசைந்த அவை மத்தியின் வரவை அறிவிப்பது போல் இருந்தன. இன்னும் ஒரு நாழிகையேனும் பொறுக்க வேண்டும். ம்...

தொலைவில் நாழிகைக் கணக்கர் காலம் சொல்ல, அதை ஊருக்கு அறிவித்துக் கொண்டிருந்தன பறையும் சங்கொலியும். அருகில் துறையொன்று இருப்பதால் இது நாளும் நடக்கும் நிகழ்வுதான். கயலுக்கு உள்ளம் துள்ளாட்டம் போட்டது. காதைத் தீட்டி, மடல்களில் கைகுவித்துக் கேட்டாள். குளம்படி கேட்காத அந்த மணல் வெளியில் மத்தியின் தேரை இழுத்துவரும் குதிரையின் கழுத்தில் கிடக்கும் மணிகள் எழுப்பும் ஓசை அவள் காதுகளை எட்டியது. கொங்கண் அல்லவா? இசையொலிக்கும் இனமணிகள் அவனது குதிரையின் கழுத்துப் பட்டியில் தொங்கிக் கொண்டிருந்தன.

மத்தி வந்துவிட்டான். தேரிலிருந்து இறங்கி குதிரையை மரமொன்றில் கட்டிவிட்டு அவளிடம் வந்தான்.  உச்சி முகர்ந்தான். 

"பகற்குறி தவறவிடாது வந்து விட்டாய். அம்மா பார்க்க வில்லையா கயல்?"

"வெளியேறும் போது அழைத்தார்கள். செவியில் விழாதது போல் வந்துவிட்டேன்"

"கையில் என்ன பொதி?"

"நல்ல திருக்கைத் துண்டம். மெந்தீயில் சுட்டு வைத்திருக்கிறேன். இளந் திருக்கையா.. அதனால் சுடும்போது  நல்ல  நெய் உருகிச் சேர்ந்திருக்கிறது."

"அடடா... எடு எடு. முதலில் அதை உண்கிறேன்"

"முதலில் அதை என்றால் பிறகு?"

"தெரியாதது போலவே கேட்கிறாய். எப்பொழுதும் முதல் நாள் போல் உன்னால் எப்படி இருக்க முடிகிறது கயல்?"

"நீங்கள் மட்டும் எப்படியாம்?" சிரித்தாள்.

அருகில் இருந்த பனைமரத்திலிருந்து அன்றில் பறவையின் "உளறல்' ஒலி கேட்டது. மத்தி கயற்கண்ணியின் அழகான கண்களை உற்றுப் பார்த்தான்.

குதிரையின் மெல்லிய கனைப்பொலி கேட்டு கயல் தலை உயர்த்தினாள். குளத்தில் நெய்தல் மலர் கூம்பத் தொடங்கியிருந்தது. அவள் மனதுக்குள் வாட்டம் வந்தது.

எழுந்து குளம் நோக்கி நடந்தாள். இறங்கி முகம் கழுவித் திரும்புகையில் தன் நிழல் கிழக்கில் நீண்டு நடப்பதைக் கண்டாள். மேற்கே வானமலையில் கதிரவன் இறங்கத் தொடங்கியிருந்தான். வானம் சிவப்பை அணிந்திருந்தது. ஈரக்கால்களில் நடக்கும் போது கூட வெம்மை தெரியவில்லை. கொஞ்ச நேரம் முன்புவரை முதுகெல்லாம் சூடு கொண்டது. இப்பொழுது நிலம் சூடு தணிந்திருந்தது.

அவனும் எழுந்து ஆடையிலிருந்த மணலைத் தட்டிவிட்டுக் கொண்டு குதிரையை நோக்கி நடக்கலானான். கயல் வாயிலில் நிறுத்தி வைத்திருந்தத் தேரின் அருகே வந்து நின்று கொண்டாள். குதிரையின் கழுத்து மணிகள் மீண்டும் ஒலித்தன. ஆனால் இம்முறை அது அவளுக்கு இன்பமாயில்லை. திரும்பிச் சோலையின் உள்ளே பார்க்கிறாள். இருள் கவ்வத் தொடங்கியதில் வண்ணமற்றுப் போயின பூக்கள். பொழுது சாய்ந்து விட்டது.

குதிரையைத் தேரில் பூட்டியவன் கிளம்ப அணியமானான். 

"வரட்டுமா... கயல்....."

"ம்..." என்று கை உயர்த்தினாள். அவ்வளவுதான். தேர் கிளம்பிச் சென்று மறைந்துவிட்டது. அவன் எந்தத் திசையில் சென்றான் என்பது கூட அவளுக்கு உணர்வில் இல்லை. தனக்குத் தானே பேசிக்கொள்ளத் தொடங்கினாள்.

"மெய்யெங்கும் நிறைந்த காமத்தோடு... உயர்த்திய கை இறக்காமல், உள்ளத்தில் அழுது ஒழிகிறேன். தேரோ சென்று மறைந்து விட்டது. தேன் தேடும் வண்டுகள் சுற்றிப் பறந்து பாடும், தேன் நிறைந்த பூமாலை சூடி வந்தான். அவன் மார்பில் ஆடிய மின்னல் போன்று ஒளி பொருந்திய பூண்நகையோடு நானும் இன்பமாய் நகைத்து படர்ந்து விளையாடினேன். இன்பம் நுகர்ந்தேன். எனக்கே அழுகை வருகிறதே, பாவம் இந்தச் சோலை என்ன செய்யுமோ?"

என்று தனக்குத் தானே சொல்லியவாறு வீட்டை நோக்கி நடந்தாள் கயற்கண்ணி.

===========================================

பெண்மனம் குறித்து உரக்கப் பேசும் ஔவையாரின் பாடல் இது. நற்றிணையில் 187 வது பாடல்.

பாடல் கீழே

நற்றிணை – 187 – நெய்தல் ஔவையார்
========================================
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,/ 
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,/  
பல் பூங் கானலும் அல்கின்றன்றே;     /
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,/
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய,/ 
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு/ 
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட/ 
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,/
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு/    
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?/

மெய்ப்பாடுஅழுகை
பயன்அவாவுயிர்த்தல், கேட்பவர் பெருமூச்செறிதல்
==========================================

அருஞ்சொற்பொருள்

கூம்ப - குவிந்து மூட
குணக்கு - கிழக்கு
அல்கின்று - இருள் சூழ
இனமணி - குதிரைகளின் கழுத்து மணிகள்
இமிரும் - ரீங்காரமிடும்
கோதை - பூமாலை
இவர் - ஒளிரும்
கொடும் பூண் - வளைந்த பொன் அணி
கொண்கண் - நெய்தல் தலைவன்




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்