Sunday 16 May 2021

அப்பாவின் தோழன் - மறைவு 14-05-2021


 அந்தச் செழிப்பான ஊரிலே நிறைய ஆசிரியர்கள் உண்டு, பெரிய மனிதர்கள் உண்டு, நிலக்கிழார்கள் உண்டு, இசைக்கலைஞர்கள் உண்டு, மருத்துவர்கள் உண்டு... இப்படிப் பலர் உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊர்க்காரர்கள் எல்லோரும் அறிந்திருப்பதோ, தேடிக்கொண்டிருப்பதோ இல்லை.

ஆனால், தமிழ்நாட்டின் தென்கோடியில் தாடகை மலை அடிவாரத்தில் இருக்கும் அந்தத் தாழக்குடி எனும் ஊரில், எல்லோராலும் தேடப்படுகிற, எல்லோரும் அறிந்திருந்த, எல்லோரையும் அறிந்து வைத்திருந்த மனிதர் உண்டென்றால் அது Post தங்கம், Post தங்கண்ணன் என அழைக்கப்படும் நடுத்தெரு திரு. நீலகண்டன் அவர்களே.

மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் சிற்றூர்களுக்கும் தாழக்குடிக்குமான ஒரே அஞ்சல் நிலையத்தின் அஞ்சல்காரர் அவர். நாள் தோறும் காலை ஏழு மணி தொடக்கம் நடந்து நடந்தே (மிதி வண்டி கிடையாது) இந்த மூன்று கி.மீ பரப்பளவை அலசுகிறவர். வெயில் காலத்திலும் அதே நடைவண்டிதான்.

சாதி, மதம் கடந்து எல்லோரையும் (குடும்ப உறுப்பினர் உட்பட) அறிந்து வைத்து அதை எப்போதும் நினைவிலும் வைத்திருந்த மனிதர்.

நான் பார்க்க ஐம்பது ஆண்டுகளாக, ஓரே உடல் வாக்கு. ஒல்லியான உருவம். வெற்றிலைச் சிவப்பேறிய வாய். இறுதிக் காலம் வரை நடக்க இயன்ற இயல்பூக்கம். ஊரிலிருந்து செல்லும்போது "நல்லா இருக்கியாப்போ" என்று வினவும் அன்பு. பொதுவுடைமை சித்தாந்தத்தின் மீதான தளராத பிடிப்பு. தம்பிக்கு வந்த கடிதத்தைக் கூட அண்ணனிடம் கொடுக்கக் காட்டிய தயக்கம். இப்படி நிறைய.

குறிப்பாக என் தந்தையாரின் அணுக்க நண்பர். அப்பாவுக்கு; இறுதிக் காலத்தில் நடை தளர்ந்து, தெரு முனையில் இருக்கும் சேகரின் தையல் கடை வரை செல்வதே பெரும்பாடாக இருந்தது. ஆனாலும் நாள்தோறும் மாலை நேரம் யாருடனாவது சென்று விடுவார். அங்கே தங்கண்ணனும் வருவார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலான கதைகளை இருவரும் பேசிக்கொள்வார்கள் போலும்.

ஒரு தேயிலையை வாங்கி இருவரும் கூடவே சேகரும் பகிர்ந்து கொள்வார்கள். ஒரு தேயிலை பத்து ருபாய் விற்கும் காலத்தில், 10/- ரூபாய்க்கு மூன்று பேர் குடிக்கும் அளவுக்குத் தேயிலை கொடுத்த தாழக்குடி "குரு டீஸ்டாலுக்கு" நன்றி. இதனால் ஒன்றும் வயிறு நிறையப்போவதில்லை. ஆனால், முகம் பார்த்த பருவத்திலிருந்து ஏற்பட்ட தோழமை சுமக்கும் அவர்கள் இருவருக்கும் மனம் நிறைந்திருக்கும் என நம்புகிறேன்.. 

பேசி முடித்துவிட்டு அப்பாவை வீடுவரைக்கும் கைப்பிடித்து அழைத்து வருவார் தங்கண்ணன். 80 வயதுக்கு மேலான இரண்டு முதிய;  கைகோர்த்து நடக்கிற நண்பர்களை,  அது வரையில் நான் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன். அதை நேரில் பார்ப்பது வியப்பான பேறு.

கீழே விழுந்து காலில் அடிபட்டுக் கட்டிலில் முடங்கிய அப்பாவின் கடைசி நாள்களிலும் தங்கண்ணன் வந்து பார்த்துச் சென்றார். அப்பாவின் மறைவிற்குப் பிறகுதான் இருவரும் சந்திக்கும் வாய்ப்புகள் காலாவதியாகின.

அப்பாவின் மறைவிற்குப் பின் நான்கைந்து முறைதான் நான் ஊருக்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னைப் பார்க்கிற பொழுது "கொஞ்சம் நில்லுப்போ" என்பார். தடிமனான கண்ணாடியின் ஊடாக என்னைப் பார்ப்பார். பின் எதுவும் சொல்லாமல் நடந்து சென்றுவிடுவார். அந்த மௌனமான நிமிடங்களில் அவர்களது எண்பத்தைந்து ஆண்டுகள் தோழமையின் அருமையை நான் உணர்ந்திருக்கிறேன்.

இதோ 14-05-2021 அன்று தங்கண்ணனை காலம் தன்னுள் சேர்த்துக் கொண்டது.

இந்தியாவில் தேர்தல் தொடங்கிய நாளிலிருந்து அவர் உள் முகவராக இல்லாத தேர்தல்களே இல்லை. தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட ஊர்களில் அவர் நடந்து போகாத தெருக்களே இல்லை. அவரை அறிந்திராத மனிதர்களே இல்லை.

யார் மகன் எந்த ஊரில் வேலை செய்கிறான். எந்தப் பெண்ணை எந்த ஊரில் மணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களது தற்போதைய நிலை, நிகழ்வுகள் என, எல்லோரையும்; எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்த மனிதன் யாரும் அறியாத காலப் பெருவெள்ளத்தில் கலந்து போனான்.

இனி அப்படி ஒரு மனிதனை அந்த மண் சந்திக்கப் போவதேயில்லை என்பது மட்டும் நெஞ்சில் அறையும் உண்மை.

 



2 comments:

  1. அருமை மாமா. அவரது இயற்பெயர் இன்று தான் உங்கள் பதிவின் மூலம் தெரியும் எனக்கு. போஸ்ட் தங்கண்ணன் தான் அவரின் அடையாளமாய் இருந்தது.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்