Friday 14 May 2021

ஏழு கடல் தாண்டி..

நாங்கள் நடந்துகொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் மெல்லிய பசி இருக்கிறது. கைகளில் கூரிய கற்களும், கம்புகளும் இருக்கின்றன. எங்கள் கண்கள் இரையைத் தேடுகின்றன. தொலைவில் ஓசை. காதுகளைத் தீட்டிக்கொண்டோம். அது நெருங்குகிறது. முன்பே சுவைத்தது தான். இப்பொழுது முன்பாக வந்து கொண்டிருக்கிறது. எல்லோருடைய கைகளும் கற்களையும் கொம்புகளையும் உறுதியாக பற்றிக் கொள்கின்றன. ஒரே அடியில் சாய்த்துவிட வேண்டும். விட்டுவிட்டால் வேகமாக ஓடிவிடும். எங்களால் அப்படி ஓட இயலாது. ஓசை மிக அருகில் நெருங்கிவிட்டது. சட்டென்று ஒரே நேரத்தில் அனைவரும் தாக்க அது ஓலத்துடன் சாய்ந்தது.

தற்கு நாங்கள் இன்னும் பெயர் வைக்கவில்லை. அதற்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெயர் என்று எதுவும் கிடையாது. உடலின் வேறுபாடுகள் அறிவோம். உண்போம், புணர்வோம், உறங்குவோம் அவ்வளவுதான்.

தோ என் அருகில் இருக்கிறானே இவன் ஒருமுறை உண்ணும்போது என்னைக் கடுமையாகத் தாக்கி விட்டான். என் காலின் இரண்டு விரல்களைக் கடித்துத் துப்பிவிட்டான். அதோடு அது முடிந்துபோனது. அதே கூட்டத்தில் தான் இருவரும் இருக்கிறோம். இப்பொழுது சேர்ந்தே உண்ணுகிறோம். இன்னொருமுறை வேறு யாராவது ஒருவர் இன்னொருவரைக் கொன்று சாய்த்துவிடலாம். கூட்டம் அப்படியேதான் இருக்கும். மேலும் கீழும் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். சேர்ந்தே வாழுகிறோம். பிறக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றவள் மட்டுமே உண்டு. அதுவும் ஒரு காலம் வரைதான். பெற்றவளைத் தாக்கிய பிள்ளை உண்டு. பிள்ளையின் கைகளை முறித்த பெற்றவள் உண்டு. இங்கே வாழ்தல் என்பது இரைதேடலும் இணைசேர்தலும் மட்டுமே.

கீழே வீழ்ந்து கிடக்கும் அதன் உடலை ஆளாளுக்குப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். குருதியின் சூடு இன்னும் அடங்கவில்லை. நான் கூரான கல்லை எடுத்து தோலையும் தசையையும் தனித்தனியாகக் கிழிக்கிறேன். சரியாக வரவில்லை. அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். எழுந்து ஒரு கல்லால் இன்னொரு கல்லைத் தாக்கி கிழிப்பதற்கு வாக்காக ஒரு கல் துண்டை உருவாக்குகிறேன். இந்த முறை எளிதாகத் தோலும் தசையும் பிரிந்தன. என் கைகளிலிருக்கும் துண்டின் குருதி அவள் தொடையில் வழியும் அளவுக்கு அருகில் வந்துவிட்டாள். ஒரு துண்டைப் பிய்த்து வாயில் இட்டுக்கொண்டாள்.

பார்ப்பதற்கு என்னை விடச் மிகச் சிறியவள். முகத்தில் இளமை. பசியாறிக் கிளம்பிய போது நான் உடைத்த கல்லின் மற்றொரு துண்டை கையில் எடுத்துக் கொண்டாள். இன்னொன்று என்னிடமே இருக்கிறது. கூட்டமாக நடந்துகொண்டிருக்கிறோம். அவள் என் முன்னால் சென்றுகொண்டிருக்கிறாள். பறவைகளெல்லாம் மரங்களை நோக்கி வரத் தொடங்கியிருந்தன, நடந்து  கொண்டிருந்தோம்.

ட சடவெனப் பேரோசை. கூட்டமாகச் சில கொம்புகள் தெரிந்தன. என்ன ஏது என்று பார்ப்பதற்குள் என் நெஞ்சில் கடுமையான ஒரு தாக்குதல். மண்ணில் சாய்கிறேன். குருதியின் சூடு வயிற்றில் வழிவதை உணர்கிறேன். கண்கள் மங்குகின்றன.

வள் திரும்பிப் பார்க்கிறாள். கண்கள் விரிய என்னை நோக்கி வருகிறாள். என் கண்களின் அருகில் அவள் கண்களைப் பார்க்கிறேன். யாருடைய கண்களையும் இவ்வளவு அருகில் பார்த்ததில்லை. இது போல யார் யாருக்கோ நடந்திருக்கிறது. இத்தனை அருகில் யாரும் சென்று கண்களைப் பார்த்ததில்லை. நானும் கூட. எங்கள் உயிர் காக்க ஓடுவதும் மறைவதுமே நடக்கும்.

ன் நெஞ்சைத் தொட்டுப் பார்க்கிறாள். காற்றுக்கும் எனக்குமான தொடர்பு மெல்ல அறுபடுவதை உணர்கிறேன். அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவளோ தன் கையிலிருந்த கல் துண்டை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். மெல்ல எழுந்து நடந்தாள். நின்று திரும்பி என்னைப் பார்த்தாள். கூட்டம் முன்னால் சென்றுகொண்டிருக்கிறது.அவளும் நடக்கத் தொடங்கினாள்.

வளைக் கூப்பிட வேண்டும்போல் தோன்றியது. ஆனால் அவளுக்குப் பெயர் இல்லை. ஆற்றல் முழுவதையும் சேர்த்துக் கையிலிருந்த கல்லை அவள் மீது எறிந்தேன். திரும்பிப் பார்த்தாள். குனிந்து கல்லை எடுத்துக்கொண்டாள். நான் இறுதியாய்ப் பார்த்தது அந்தக் கண்களைத்தான். நான் மறக்காமல் காத்து வைத்தது அந்தக் கண்களில் தெரிந்த ஒளியைத் தான்.

ன்னால், அவள் யாரென்று உங்களுக்குச் சொல்ல முடியாது. அவளாலும் நான் யாரென்று உங்களுக்குச் சொல்ல முடியாது. ஆம் எங்களுக்குப் பெயர் இல்லை.

லட்சக்கணக்கான ஆண்டுகள் ஓடிவிட்டன. உங்களிடம் ஆதார் அட்டை இருக்கிறது. அதில் உங்களுக்கென்று ஒரு பெயரும் இருக்கிறது. இங்கு எல்லாமே மாறியிருக்கிறது. அவள் கண்களில் நான் இறுதியாய்க் கண்ட ஒளியைத் தவிர.

தற்கு நீங்கள் அன்பு என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். அந்த ஒளி மங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது இருக்கும் வரைதான் மாந்த இனம் வாழும். அதன் பிறகு இங்கு வாழ்வதற்கான காரணங்கள் ஏதுமில்லை.

னென்றால் நீங்கள் எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டீர்கள்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்