Thursday 13 January 2022

பொங்கல் வாழ்த்து 2022

 

கவின்மிகு வானமலை
வடிநவில் அம்பு சொல்ல
கார்த்திகையில் பிறந்த மகள்,
குழிசி நிறை தினைப் பொன்கம்
குரவையிட ஆவணியானாள்.

மலையிறங்கி மருதம் வந்து
நெல்லுகுத்துப் படையலிடும்
மாமன்னர் காலமதில் தைமகளானாள்.
சிலகாலம் சென்றபின்னே
மாற்றரசில் சித்திரையானாள்.

கருமிளகு காண வந்து
வானமலை தானடைந்த
வணிகத்தின் அரசுயர சனவரியானாள்.

நிலவுலகின் நடுவச்சு
தலைசாய்த்தச் சாய்மானம்
அலகின்றி மாறுவதால்;
கதிரவனின் துணைகொண்டு
கணக்கிடும் நாள்கணக்கில்
தலைநாட்கள் மாறுவதைத்
தக்கார் பலரும்
தாமறிந்து சொன்னபின்னும்,
மாறாமல் இருப்பதுவோ?


பெரியோரை வியத்தலில்லை;
சிறியோரை இகழ்தலுமில்லை.
பாட்டன் சொன்ன வழி
பழகிவரும் தமிழர் கூட்டம்,

காய் பலவும் அகழ் கிழங்கும்
கரும்பும் வெண்சோறும்
கன்னலும் பிரப்பும் பசுமஞ்சளொடு
படையலிட்டுத் தொழுதேத்தும்
நன்னாளாம் இன்னாளில்,

புத்தாண்டு என விழைவோர்
பூரிக்க ஒரு வாழ்த்து!
தமிழர் திருநாள் என மகிழ்வோர்
தகைமைக்கும் ஒரு வாழ்த்து!
வயலறியா நிலையிருந்தும்,
வானவனை வணங்கும் நாளென்போர்
உளம் மகிழ ஒரு வாழ்த்து!
தெற்கிருந்து வடக்கேகும் திருநாள் 

என்று சிறப்பிக்கும்
நன்மகர்க்கும் ஒரு வாழ்த்து!

வாழ்த்தென்ன விலையீந்து
வாங்கும் பொருளா?
உளம் மகிழ உள்ளிருந்து
வருஞ் சொல் தானே!

பொலி நிறைய, மனம் நிறைந்து,
மடி நிறைய நெல் சொரியும்
உழவர் கைபோல்,
உங்கள் அகம் நிறைய
தமிழ்கொண்டு வாழ்த்திடுவேன்.

குலம் செழிக்க வளம் கொழிக்க
நீவிர் வாழ்க!
குரவை இசை ஒலிக்க
பொங்கட்டும் தைப்பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.

==============================

திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்

13-01-2022

=============================

5 comments:

  1. காய் பலவும் அகழ் கிழங்கும், வெண்சோறும்

    ஆம் அநேக நேரங்களில் அவித்து உண்ணும் பனங்கிழங்கு ம் சர்க்கரவள்ளி யும், பொங்கலன்று பொங்கல் வைத்த தனலில் சுட்டு படைப்பதும், வெண்சோறு என்பதற்கினங்க வெறும் பச்சரி கொண்டே பொங்கல் இடுவோம். உப்போ நெய்யோ மிளகு போன்ற யேதும் இராது.

    ReplyDelete
  2. உனது ஒவ்வோர் படைப்பும் பல சேதிகளை தரும் பாடம்.பொங்கல் கவிதை மிகச் சிறப்பு.தெரியாத பல நிதர்சனங்கள்.மனத்தோடு,உணர்வோடு ஒன்றியதால் மேலும் சிறப்பு.வாழ்த்துக்கள் மக்கா!வாழிய நலம்!

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்