Saturday 22 January 2022

திருமுன் தமிழ் - தாழைப்பத்து 8

 

தேர் நிலைப் படி

பாடல் 8 தேர் - விளக்கம்

சிவன்கோயில் மட்டும் இருந்தபோதே தேர்த் திருவிழா நடந்திருக்கிறது போலும். மிகப்பெரிய தேர் ஒன்று இருந்ததன் அடையாளமாக, கீழத்தெருவும் மாடத்தெருவும் சந்திக்கும் மூலையில் பெரிய கல் நிலைப்படி ஒன்று இன்னும் இருக்கிறது. இந்தப் படியில் ஏறியே பழைய தேரின் தளத்திற்குச் செல்ல முடியும் எனும் போது அந்தத் தேரின் உயரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

ஏதோ ஓர் ஆண்டில் ஒரு சிறுவனின் மீதேறி அவனது உயிர் பறித்ததால் தாழக்குடி ஊர் மக்கள் அந்தத் தேரை உடைத்து நந்தவன மடத்திற்குப் பின்புறமுள்ள குளத்தில் புதைத்துவிட்டார்களாம். அதன் பிறகு அவ்வளவு பெரிய தேர் செய்ய முடியாமல், பூதப்பாண்டியிலிருந்து தருவிக்கப்பட்ட சிறிய தேரையே விழாவிற்குப் பயன்படுத்துகிறார்கள். நந்தவனக்குளத்தில் குளிக்கும் வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது.

சேந்தநாதன் கோயிலிலிருந்து அழகம்மைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் இடது புறம் முதல் தூணில் தேரின் சக்கரத்தில் வீழ்ந்துகிடக்கும் சிறுவனும், அதைத் தேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பூசாரியும் கொண்ட சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.

வயதான ஒருவர் தூக்கிட்டுச் செத்ததால், தேரை அழித்ததார்கள் என்ற கதையும் உண்டு.

சொற்பொருள்:

நிலை - தேர் நிறுத்தும் இடம்

மருங்கு - எல்லை

 

பாடல் 8 தேர்

பெருந்தேர் நிலையும் மருங்கி லிருக்க

சிறுவனு யிர்பறித்த சிற்பமும் தூணில்

அருந்தேர் வெறுத்தே அறுத்துப் புதைத்தச்

சிறுகுள மும்கதைச் சான்று

 

தூண் சிற்பம்

இப்பொழுதுள்ள தேர்

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்