Sunday 6 February 2022

கருப்பு வெளிச்சம்

 


இந்தப் பேரண்டம் காரிருளுக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறது. இருளே இங்கு நிலையானது. வெளிச்சம் வந்து வந்து போகிறது. இருளே தூய்மையானது. வேறுபாடுகளற்றது.

வெளிச்சத்தில் வேடங்களே காணக்கிடைக்கின்றன. இருளிலே மெய் வெளிப்படுகிறது. உறக்கமற்ற நீண்ட இரவுகளில் நீங்கள் இதை உணர்ந்திருக்கக் கூடும். இமைகள் மூட மறுக்கும். அவை திறந்திருந்தாலும் பயனில்லை. உங்கள் மனதால் அடக்க இயலாத ஐம்புலன்களில் ஒன்றை அடக்கிவிடுகிற திறன் இருளுக்கு இருக்கிறது.

வெளிச்சத்தில் உங்களால் பார்க்கவியலாத உங்களை, உங்களுக்கே அறிமுகம் செய்கிறது இருள். பகலில் கண்களை மூடி தவம் செய்ய இயலாதவர்கள் கூட இருளில் கண்களைத் திறந்துகொண்டே தங்கள் மனதுக்குள்ளே பயணம் செய்கிறார்கள். வினாவெழுப்புகிறார்கள். விடையிறுக்கிறார்கள். எல்லாவற்றையும் விட தமக்குத் தாமே மெய்யாக இருக்கிறார்கள்.

"அப்பாவிடம் அதைச் சொல்லியிருக்கக் கூடாது". "அம்மாவையே அழவைத்து விட்டோம்". "மனைவியிடம் சரி என்று ஒற்றைச் சொல்லில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு சண்டையிட்டுவிட்டோமோ?" "குழந்தையைத் திட்டாமல் இருந்திருக்கலாம்". "மழை தாங்காது அடுக்ககத்தில் ஒதுங்கிய நாயைத் துரத்தியது தவறோ? நம்பித்தானே வந்திருக்கும் அதற்கு ஏதேனும் சாப்பிட வைத்திருக்கலாமோ?" "கடைத்தெருவில் அந்தப் பாட்டி வைத்திருந்த கடைசித் தட்டு மாம்பழங்களை வாங்கியிருக்கலாமோ? பாவம் வயதான காலத்தில் அவளும் நேரத்தோடு வீட்டுக்குப் போயிருப்பாள். கடைசியாய் விற்காத பழங்கள் நன்றாயிருக்காது என்று நகர்ந்துவிட்டது சரியா?" "பேருந்தில் அந்தப் பெண் என்னைப் பார்த்து சிரித்தது போல்தான் தெரிந்தது, பதிலுக்குச் சிரித்திருக்கலாமோ?" "இறங்கி நடந்து வருகையில், மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருகிற அந்தப் பெரியவரோடு கொஞ்ச நேரம் நின்று ஆறுதலாய்ப் பேசியிருக்கலாமோ?"

உறங்காத இரவுகளில் இருளைவிட மிகுதியாக நம்மைச் சூழ்ந்திருப்பது வினாக்கள்தான். சொல்லப்போனால் அவைதான் நம்மிடம் கேட்கப்படவேண்டிய வினாக்கள். சிலவற்றிற்கு நீங்கள் விடையிறுக்கலாம். சிவற்றிற்காக மன்னிப்புக் கோரலாம். வருந்தலாம். மகிழலாம். அழலாம். விடைகள் தேடலாம். கண்டடையலாம். காத்திருக்கலாம்.

இருளுக்கு முகமூடிகள் தேவையில்லை. யாரை வேண்டுமானாலும் திட்டலாம். வாழ்த்தலாம். அன்பு பாராட்டலாம். அணுக்கமாய் எண்ணலாம். தொழலாம். கொண்டாடலாம். இரவுகள் உங்களுக்கானவை. நீங்கள் உங்களைக் காண வெளிச்சம் தேவையில்லை என்பதை உங்கள் உறக்கமற்ற இரவுகள் உணர்த்தும்.

ஆனாலும், உறக்கம் உங்களுக்கு மிக்கத் தேவையானது. நிம்மதியாய் ஆழ்ந்து உறங்குங்கள். காலையில் நமக்கு வேலையிருக்கிறது.

ஆம். வெளிச்சம் வந்துவிட்டால் நாம் வேடம் புனையத் தொடங்குகிறோம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்