Sunday 21 January 2024

தாழக்குடி பெருமாள் கோயில் குடமுழுக்கு 21-01-2024

 

 

கடவுள் வணக்கம்

பெருமாள்

பொங்கலினம் தாம்கொடுத்தும் பூக்களைச் சேர்ந்தணிந்தும்

சங்கடங்கள் போக்கிடுவர் சற்றுமின்றி - பங்கந்தீர்

ஊர்நடுவே தோன்றிசிறு வூனமின்றிக் காத்தருளும்

பேர்பெற்ற நம்பெருமாள் பேண்.

 

தாழைக்குடிக்கு வாய்த்த பெருமாளென்று நம் சுவாமிக்கு ஓர் பெயர் வழங்கி வருகின்றது. பண்டைக்காலத்தில் இரவி விண்ணவர் எம்பெருமான் கோயிலின் மருங்கில் ஆதியூர் இருந்தது. வயல் நடுவில் காணும் அக்கோயிலில் இருந்த திருமாலை ஊர் நடுவில் பிரதிட்டை செய்தனர்.

நம்பியார்க்குள்ள நீட்டு

உயர்திரு காளியாம்பிள்ளை அவர்கள் தந்த பிரமாணப்பகாப்பு நீட்டு

தாழைக்குடி உள் பற்று வகையில் பெரும்பற்று மேல்வாரம் புள்ளிக்கு நீட்டு கொடுக்கையில் நயினார் ஆற்றங்கரை இரவி நாராயண விண்ணவர் எம்பெருமானார். புள்ளி மிச்சவாரம் அஞ்சாலிக்கு நிலம் அரைக்காணிக்கு அஞ்சாலி தீருவ படிக்குள்ள பணத்தினு சிட்டியும் பொடிவு பெரும்பற்று மேல்வார பேர் இனப்படிக்கு நிலம் அரைக் காணிக்கு நாலாந்தரத்துக்குள்ள பொடிவு பதிச்சு மிச்சவாரமும் எடுத்து யாபிச்சும் கொண்டு ஆசந்திரதாரவே சந்ததிப்பிறவேசமே கையாண்டு குள்ளுமாறும் செயிக, இது கி.பி.1746 ஆடி மாசம் பொடிவு. கள்ளபிரான் சிவன் பட்டற்கு எழுதிவீடு என்னெ திருவுள்ளமாய தெ மாறிப்பிடிச்சு

(ஒப்பு)

தாழைக்குடிச் சரிதத்தில் புலவர் ஆர்.பத்மநாபபிள்ளை (1944)

 

==========================

நன்னாள் வேட்டல்

மருதமாய் நிலம்கிடக்க

பெருக்காறு மேற்கிலோட

சருக்கத்தின் நடுவே

இருந்த பிரான்..

 

பின்னொருநாள்

திருவாசல் மேட்டில்

பெருவாசல் கொண்டே

அருகனாய் அமர்ந்த

அண்ணல்.

 

வடகலையுமின்றித்

தென்கலையுமின்றி

எம்கலையாய்,

எரிந்தொளிரும் தன்மையினால்

இரவியுமாய்,

விரிந்தெங்குஞ் சென்றமையால்

விண்ணுவுமாய்,

தாழக்குடி உறைந்த

தண்ணருள் மன்னவன்

இரவி விண்ணவன் எம்பிரான்,

 

இருந்தச் சிறுகோயில்

திருத்திப் பெரிதாய் எடுக்கத்

திருவுளம்கொண்ட மக்கள்

ஊர்கூடித் தேரிழுக்க உறுதிகொண்டு

சேர்த்தப் பெரும்பொருளும்,

 

மேன்மைமிகு தாழக்குடி

பிறந்துயர்ந்தப் பெருமக்கள்

சென்னை நகர்மேவுமுயர்

மேகநாதன் பெருங்கொடையும்,

பெங்களூரு வாழுமுயர்

பரசுபிள்ளை அருங்கொடையும்,

 

சேர்ந்துயர்த்த ஊர்நடுவே

சேரர்குலப் பெருமானாம்

குலசேகரன் பெயர்தாங்கி

எழுந்ததையா அருங்கோயில்.

 

மேல்செல்லா நின்ற கொல்லம்

ஓராயிரத் தொருநூற்று

தொண்ணூற்று ஒன்பதில்

கதிரவன் வடக்கேகும்

தைத்திங்கள் ஓரேழில்

கோட்டாற்றின் நீர்நிறைத்தக்

குடமுழுக்கின் நற்காலை,

 

வாளால் அறுத்துச் சுடினும்,

மருத்துவன் பால் மாளாத காதல்,

நோயாளன் போல்,

காரானை காரானைக்

கலைவதுபோல்

பேராளன் பெருமாளைக்

குலசேகரன் தமிழ்ப்பாடி

ஏராண்மை மீண்டுயர

தாராளமாய் வேண்டுவமே!

 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்