Saturday 20 January 2024

தமிழ்த்தேசியத்தின் வேர்கள் கவி கா.மு.செரீப்



அட்டைக்கத்திகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாம் போர்க்கள வாள்முனைகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. வெற்றுப் புலம்பல்களை வீர வசனங்களாய் உள்வாங்கிய நம் செவிகள் கலகக் குரல்களுக்குச் செவிசாய்ப்பதில்லை. புனையப்பட்ட மீசை துடிக்க புரட்சி பேசியவர்களை நாயகர்களாய் வளர்த்துவிட்ட நாம் புரட்சியின் வெந்தணலில் வாழ்க்கையை எரித்தவர்களை எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. நம்முடைய இந்தக் குணமே வரலாற்றின் பக்கங்களிலிருந்து நமக்காக வாழ்ந்தவர்களைப் பிறர் துடைத்தெறியத் துணைபோகின்றது,

நம்முன் கடைவிரிக்கப் பட்டிருக்கும் வரலாறுகளைவிட மறைக்கப்பட்டவையே பெரும்பகுதி என்பதாகவே கருதவேண்டியிருக்கிறது. அதன்பொருட்டே உண்மை வரலாறு அறிந்தவர்கள், செய்திகளிலிருந்து அதைச் சேகரிக்கத் தெரிந்தவர்கள், காலத்தின் செப்பேடுகளாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தங்கள் மனதிலிருக்கும் உண்மைகளையெல்லாம் கேட்பவர்க்கு உரைக்கவேண்டிய வேளை இது.

அதைவிட முகாமையானது உரைப்பவற்றை நாம் படித்து அறிந்துகொள்வது. காரணம் நம் முந்தைய தலைமுறை அவற்றை முழுமையாகக் கேட்காமல் போனதன் விளைவுகளை நாம் இப்பொழுது உணர்கிறோம். நாம் கேளாமல்போனால் வருந்தலைமுறை அதன் விளைவுகளில் சிக்கிக் கொள்ளும். காட்டாக,

ஆங்கிலத்தின் மூலமாகத்தான் தொழிற்கல்வி பெற முடியும் என்ற நிலை வளர்ந்ததினால்தான் நமது நாட்டுத் தொழில்கள் அனைத்தும் நாசமடைந்தன.

தமிழ்நாட்டு வைத்தியத் தொழில் உலகிலேயே மிகச் சிறந்ததாகும். அதன் நிலை இன்று எப்படியிருக்கிறது? தமிழ் நாட்டிற்கு இடைக் காலத்தில் வந்த ஆயுர்வேத வைத்தியமுறையைத் தவிர தமிழில் வேறு வைத்தியமுறையே கிடையாதென்ற தவறான ஆராய்ச்சியை இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆயுர்வேத வைத்தியமுறைகூட தேவையில்லை. ஆங்கிலமுறையே போதுமானது என்ற முடிவில் மத்திய ஆட்சி காரியமாற்றி வருவதாகவும் தெரிகிறது.

ஆயுர்வேதம் வருவதற்கு முன்பு மிகச் சிறந்த சித்த வைத்தியம் இங்கே இருந்ததென்றோ அது இன்னும் கிராம வைத்தியமாக மக்களிடம் நிலைத்து நிற்கிறதென்றோ யார் அறிவார்? நம்மிடத்தில் ரண வைத்திய நூல், சத்திர வைத்தியம், கண் வைத்தியம் போன்ற

சிறந்த வைத்தியங்கள் எல்லாம் இருந்தன. இன்றும் இருக்கின்றன என்பதை யெல்லாம் எவர் அறிவார்?

அறியாததினால்தான் நமது வைத்தியக்கலை செத்தது. நமது வைத்தியக்கலையைச் சாகடித்துவிட்டு, டாக்டர் படிப்பென்று ஒன்றை ஏற்படுத்தி, பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு அந்தப் படிப்பை நல்கி, மேனாட்டு மருந்துகளுக்கு இந்தியாவை மார்க்கட்டாக்கி வைத்தியத் தொழில் மூலமும் நம்மைச் சுரண்டி வாழ்ந்தது ஆங்கில ஆட்சி! ஆண்டபோதும் சுரண்டிற்று; அகன்ற பின்பும் மருந்துகள் அனுப்பிச் சுரண்டிக் கொண்டிருக்கிறது.

நம் நாட்டுக் காடுகளிலே விளையும் மூலிகைகளை குறைந்த விலைக்கு வாங்கி மேலை நாட்டிற்கெடுத்துச் சென்று அதை மருந்துகளாக்கி அதிக விலைக்கு விற்று ஆனந்தமாக வாழ்கின்றது மேலை நாடு! உள்நாட்டு வைத்தியத்தை இழந்ததின் பலன் அன்னிய நாட்டு வைத்தியத்திற்கும் மருந்திற்கும் பணத்தைக் கொட்டி அழ வேண்டியதாக முடிந்திருக்கிறது!

வைத்தியம் மலிவாக இல்லை. வைத்தியத் தொழில் செய்யும் டாக்டர்களுக்கு சுருணையுள்ளம் இல்லை. ஏழைகளுக்கு நோய் கண்டால் கடவுளை நம்புவதைத் தவிர டாக்டரை நம்ப வழியில்லை. காரணம் டாக்டர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க ஏழைகளுக்குச் சக்தியில்லை. இதை உணர முடியாத சில அரசியல் போலிகள். "நம்மவர்களுக்கு நோய் கண்டால். டாக்டரிடம் போவதை விட ஆண்டவனிடம் ஓடவே ஆசைப் படுகிறார்கள்" என்று எழுதி, பேசி, கிண்டல் செய்து அதுவே நாட்டின் தொண்டு என்று எண்ணி மகிழ்கிறார்கள்.

கையைத் தொட்டுப் பார்க்கப் பணம், மருந்திற்குப் பணம், மருந்துண்ணும் நாளிலே பத்திய பதார்த்தங்கள் வாங்கப் பணம்; இப்படி டாக்டரிடம் சென்றால் பணப் பெட்டியைத் திறந்துவிட வேண்டியதாயிருக்கிறது.” 1954ல் கவி கா.மு.செரீப் “தமிழரசுக்கழகம் ஏன் வந்தது” என்ன சொல்கிறது?” என்ற நூலில் இப்படிக்கூறுகிறார்.  எழுபது ஆண்டுகள் தாண்டிய பின்னரும் இன்றைய நிலையும் இதுவேதான். நம்மில் பலரும் புலம்பிக்கொண்டிருக்கிறோம். புலம்பல்கள் கதவுகளைத் திறப்பதில்லை.

 

செருப்புத் தைக்கும் குடும்பத்தில் பிறந்த ஏழைத் தொழிலாளி ரஷ்ய நாட்டுச் சர்வாதிகாரி ஸ்டாலின்!

கொல்லன் உலைக்களத்தில் சம்மட்டி அடித்து வயிறு பிழைத்தவன் இத்தாலி நாட்டு சர்வாதிகாரி முசோலினி!

வண்ணமடித்து வயிறு பிழைத்து வந்த கூலிக்கார ஹிட்லர். ஜெர்மானிய நாட்டுத் தலைவன், சர்வாதிகாரி!

ஹோட்டலிலே பிளேட் கழுவிப் பிழைத்த சாதாரண தொழிலாளி இங்கிலாந்து தேசத்து மந்திரி பெலின்!

சைனா நாட்டுத் தலைவனாக இருந்த சியாங் கே ஷேக் ஆங்கிலம் அறியாதவன்!

அங்கெல்லாம் தாய்மொழி மட்டும் படித்தோர்களால் ஏழைகளால், கூலிகளால் நாடாள முடியும், முடிகிறது! காரணம் அங்கே தாய்மொழி ஆட்சி நடைபெறுகிறது. இங்கே? சகலமும் அன்னிய மொழியில் நடைபெறுவதால் பணக்காரன் வீட்டுப் பிள்ளைகளே நாடாளும் வாய்ப்பு. உரிமைபெற்றவர்களாக விளங்குகிறார்கள். இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகவே, "தமிழ் இப்போது ஆட்சிமொழியாக வர முடியாது.கூடாது என்கிறார்கள்; தமிழில் கல்வி கூடாது என்கிறார்கள். மொத்தமாகச் சொல்வதென்றால் ஆங்கிலேயனை அகற்றியதால் வந்த சுதந்திரம் கருப்புப் பண மூட்டைகளுக்கும்…” 1954ல் கவி கா.மு.செரீப். அவர் காலத்தைவிட இன்று தமிழ்வழிக்கல்வி சிதமடைந்திருக்கிறது. ஏறத்தாழ மறைந்துவிடும் இறுதி நிலையை எட்டியிருக்கிறது. (ஆனாலும் நம்புங்கள் இது தமிழ்நாடுதான்.)

 

இசுலாமியர்கள் மதத்தின் பக்கம் மட்டுமே நிற்பார்கள், இனத்தின் பக்கம் நிற்கமாட்டார்கள் என்றபொதுவெண்ணத்தை இயல்பாக உடைத்தெறிந்து தமிழரசுக்கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர் கவி கா.மு.செரீப் அவர்கள். இப்படியொரு சிந்தனையாளரை எத்தனைபேர் அறிந்திருக்கிறார்கள் என்பது பெரும் வினா.

“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” என்ற பாடலைக் காதாரக் கேட்டவர்கள் கூட அந்தக் குருவி தமிழ்மண் குறித்துப் பேசிய சேதிகளை அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. அவ்வளவுக்கு அவர் மறைக்கப்பட்டிருக்கிறார், மறக்கப்பட்டிருக்கிறார் என்றே எண்னத் தோன்றுகிறது.

இப்படியான மறைந்துகிடக்கும் மண்ணின் வேர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவரை முழுமையாக வெளிக்கொணர முனைந்திருக்கிறது “பன்மைவெளி” வெளியீட்டகம். பாராட்டப்படவேண்டிய முயற்சி. நாட்டு நலன் பேண விழைவோர் கட்டாயம் படிக்கவேண்டிய நூலும்கூட.

 

நூல் : தமிழ்த்தேசியத்தின் வேர்கள் கவி கா.மு.செரீப்

வெளியீடு : பன்மைவெளி

பக்கம்: 112

விலை : 100/-


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்