Wednesday 30 December 2020

தமிழர் இசைக்கருவிகள் - 10 தண்ணுமை

 

ஒரு புற முழவில் வாயின் வேறுபட்ட அளவுகளில் இசை மாறுபாடு அடைவதைக் கண்டவர்கள்; முழவின் இன்னொரு புறத்திலும் வாய் இருக்குமாறு (வேறுபட்ட அளவில்) மண்ணால் குடம் செய்தார்களோ என்னவோ, இருபுற முழவு பிறந்து விட்டது. 
 
இரண்டு வேறு பட்ட தாள அடிகளை ஒரே முழவில் இசைக்க இயன்றது அடுத்த படி நிலை வளர்ச்சியானது. இரு புறங்களிலும் உள்ள தோல் பகுதிகளை ஒரே கயிற்றால் இழுத்துக் கட்டியதால், குளிர்காலங்களில் கூட தாளத்தில் குழப்பமில்லை. கயிறை இழுத்தும் தளர்த்தியும் தோலை ஒரே நிலையில் வைக்க முடிந்தது.
 
பெருமழையும், பனிப்பொழிவும் கலந்து பெய்தபோதும் நீலமலையில் ஒலித்த முழவின் குரலை ஒடுக்க இயலாது போனது. இன்றைய
மிருதங்கத்திற்குப் பாட்டன் முறையான தாளி / தண்ணுமை என்ற இருபுற முழவு இப்படித்தான் பிறந்து செழித்தது. 
 
நீலமலையின் இருளர்கள் இதைக் “கடிமெ” என்று அழைக்கிறார்கள். மண்ணாலும் தோலாலும் இணைத்துச் செய்யப்பட்ட இந்த “கடிமெ" இசைக்கருவி குன்னூர் வட்டத்தில் உள்ள குஞ்சப்பனை, கோளிக்கரை, செம்பனாரை, மூப்பக்காடு, கொலக்கம்பை ஆகிய பகுதிகளில் வாழும் இருளர்களிடம் இன்றும் காணக் கிடைக்கிறது.
 
மண்ணாலான குடம் போல் வடிவம் பெற்றுள்ள இக் ’கடிமெ’, இருபுறமும் வாய்ப் பகுதிகள் அமைந்திருக்குமாறு செய்யப்படுகிறது. பின்னர், சுடப்பட்டு எடுக்கப் படுகிறது. இதன் இரு புற வாய்ப் பகுதிகளிலும், பதப்படுத்திய தோல்கள் கொண்டு ஒட்டப்பட்டு, தோல் கயிறுகளால், மண் குடப் பகுதிகளின் மேல் இழுத்துப் பிணைத்துக் கட்டப்படுகின்றது. தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, வாசிப்பதற்கு ஏற்ப தோல் கயிறும் அமைக்கப்படுகிறது. ஏனைய தோலிசைக் கருவிகளின், தோல் பகுதியை அடிக்கடிச் சூடுபடுத்திக் கொள்வது போல, இதையும் செய்து கொள்கின்றனர்.
 
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தன்ணுமைப்
பின்வழி நின்றது முழவே . . . (சிலம்பு)
 
செவ்விலக்கியங்களில் பல இடங்களில் தாளக்கருவிகள் சொல்லப்படுகின்றன.
இன்றைய மிருதங்கத்தின் பாட்டன் முறையே இந்த “தாளி / தண்ணுமை” எனும் இருபுற முழவு, ஆனால் எங்கேயோ ஒப்பாரிப் பாடல்களின் இடையே ஒலித்துக் கொண்டிருக்கிறது. சில கோயில்களிலும்...
 
==========================
 
தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06
(திருமுறை)
 
தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9
(திருமுறை)
 
Image may contain: text that says 'தாளி/ தண்ணுமை இருபுற முழவு தமிழாடும் முன்றில்'

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்