Wednesday 30 December 2020

தமிழர் மணம்

 


மனிதர்களைச் சொற்களாகக் கொண்டு காலம் எழுதும் கவிதையே ஆகச் சிறந்த கவிதை என எண்ணுகிறேன். அப்படியொரு கவிதையின் வரிகளாய் நடந்த ஒரு திருமணத்தில் நானும் ஒரு சொல்லாக இருந்த நிகழ்வு மறக்க இயலாதது.

சென்றுவருவது, கலந்து கொள்வது, பங்கேற்பது, நடத்துவது என ஒரு திருமணத்திற்கும் நமக்குமான பிணைப்பு மாறுபடும். கடந்த 19-11-2020 அன்று திருச்சியில் நடைபெற்ற மு.ஜானகி இரா.தமிழமுதன் திருமணத்தில் நான் பங்கேற்றேன். 
 
ஜானகி, முத்துக்குமாரசாமி கவிதா இணையரின் மூத்த மகள். எட்டாண்டுகளுக்கு முன்னால் “அருண்மொழிவர்மன்” எனும் சொல் அவரையும் என்னையும் இணைத்தது. பின்னாளில் மாமா, மாப்பிள்ளை, மருமகள் என உற்றாராக மாற்றம் பெற்றது. காவிரிக்கரையில் எனக்கென ஒரு உறவை உருவாக்கிக் கொடுத்தது காலம்.
 
இரண்டு நாள்களுக்கு முன்பாகப் பயணம். சென்னையில் தொடங்கி திருச்சிராப்பள்ளி வரை விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. வண்டியிலிருந்து இறங்கி தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரோடு சேர்ந்து மணம் நிகழப்போகும் அரங்கத்தைப் பார்க்கச் சென்றேன். அரவமற்று இருந்த அந்த அரங்கில் அடுத்தநாள் மாலை தொடங்கி நடைபெற்ற நிகழ்வுகள் அடடா… மறக்க இயலாது.
 
மறுநாள் 18-11-2020 மாலை 5 மணி. காவிரியாற்றைக் கைகளில் முகந்து மலைக்கோட்டையை நீராட்டிக் கொண்டிருந்தன மேகங்கள். பொதியில் மலையின் குற்றால அருவி சிராமலையில் பாய்ந்து அகழிச்சாலையில் வடிந்து செல்வது போலிருந்தது தோற்றம். இரவில் மணமக்கள் ஊர்வலம் வேறு நடந்தாக வேண்டும். ஏற்கனவே மிளகுபாறைப் பகுதி படகில்தான் ஊர்வலம் நடத்தமுடியுமோ என்ற அளவுக்கு  நீரால் சூழப்பட்டிருந்தது. 2020 ல் கூட “மணப்பெண் அரிசி தின்றதால்தான் மழை பெய்கிறதோ?” என்ற சொல் மறக்காமல் வெளிப்பட்டது. தமிழர்கள், தங்கள் கூறுகளை முழுவதுமாக துடைத்தெறிந்து விடவில்லை என எண்ணிக் கொண்டேன். ஆனால், நிறைய மறந்துவிட்டார்கள் என்று சொல்லிச் சென்றன மறுநாள் நிகழ்வுகள்.

மணமக்களின் ஆவலை உணர்ந்து கொண்டனவோ மேகங்கள், பெரும் பொழிவு நின்றது. மெல்ல வடிந்தது வெள்ளம். காலம் தாழ்ந்து ஊர்வலம் தொடங்கியது. 
 
“அவரை
இரு பெரும் குரவரும் ஒரு பெரு நாளால்
மண அணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ
மா நகர்க்கு ஈந்தார் மணம்.”
 
எனும் சிலம்பின் வரிகள் போல வலம் நடந்தது. யானையின் இடத்தில் ஒப்பனை செய்யப்பட்ட ஊர்தி. மணமக்கள் இருவரும் வண்டியில் அமர்ந்திருக்க, கீழே சுற்றமும் நட்பும். ஒரே ஆரவாரம். கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லை. ஆடலும் பாடலும் தமிழர் வாழ்வியலில் தவிர்க்க இயலாதவை. இப்பொழுது நாம் கொஞ்சம் வெட்கப்பட்டு நிற்கிறோம். 
 
இரவு உணவு முடிந்து உறங்கச் செல்கையில் மணி பதினொன்றரை ஆகியிருந்தது. வெளியேறி நடக்கையில் பின்னால் திரும்பிப் பார்த்தேன். பேரொளியில் குளித்துக் கொண்டிருதது மணமனை. நாளை ஒலிக்கப் போகும் சங்கத் தமிழை எதிரொலிக்க அணியமாகிக் கொண்டிருந்தன அரங்கின் சுவர்கள்.    
 


இரவெல்லாம், மழை வராது இருக்கவேண்டுமே என்று எண்ணிய படியே உறங்கினோம். புலர்ந்தது 19-11-2020. மேகங்கள் விடைபெற்றிருந்தன. கதிரவன் மகிழ்ச்சியோடு தரை பார்த்தான். குளித்துகிளம்பி மண்டபத்தை அடையும் போது அங்கே ஐயா இறைநெறி இமையவன் வந்திருந்தார். அவர்தான் இந்தத் தமிழ் நெறிய திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
 
உற்றாரும், உறவினரும், நண்பர்களும் ஒவ்வொருவராய் வரத் தொடங்கினார்கள். முத்துக்குமாரசாமியும்அவரது உறவினரும் எல்லோரையும் வரவேற்று அமரவைத்தார்கள். அரங்கம் அன்பால் நிறையத் தொடங்கியது.
 
மணமகள் ஜானகியின் தாயும், மணமகன் தமிழமுதனின் தாயும் மணமனையின் இருபுறமும் விளக்கேற்ற மன்றல் விழா இனிதே தொடங்கியது. தவிலும் நாதசுரமும் பின்னிசையாக ஐயா இமையவனின் கணீரென்ற குரலில் திருக்குறளும் தேவாரப்பண்ணும் காற்றில் மிதக்கத் தொடங்கியது. குமரிக்கண்டத்தில் பிறந்த தென்மொழித் தமிழ்த்தாய் சீரோடும் சிறப்போடும் தமிழர் தம் மணமனையில் பீடுற நடந்து வந்தாள். நடுவிடத்திலே நின்று நாற்றிசையும் தமிழொலிக்கச் செய்தாள்.
 
தொல்மரபில், ஓலையில் கைச்சாத்து இட்டு அரசனது ஆணைக்கோலை, கோயிலிலே பெற்று அதை மணமனையில் மதிப்போடு நிறுத்தி அதன் முன்னிலையிலே மனையறப்படுத்துதல் மரபு. “அரசாணைக்கோல்” இப்பொழுது“அரசாணிக்கால்” ஆகிவிட்டது. ஐந்து பெண்கள் அரசாணிக்கால் நட்டு அதனை அழகு செய்து வழிபாடு நிகழ்த்தினார்கள். “காதொளிரும் குண்டலமும், கைக்கு வளையாபதியும்” என்ற தமிழ்த்தாய் வழுத்தைப் பாடினார் ஐயா இமையவன். அகநானூற்றுக் காலத்தின் நல்லாவூரிலே நடந்த மணவிழாவில் நிற்பது போன்ற உணர்வெழுந்தது எனக்கு.

தொடர்ந்து “வித்தாகி முளையாகி விளைவதுமாகி” எனத் தொடங்கும் வள்ளலார் பாடல் ஒலிக்க “முளைப்பாலிகை வழிபாடு” அந்த ஐந்து பெண்களாலும் நிகழ்த்தப்பெற்றது. எந்த விழாவென்றாலும் முளைப்பாலிகை வழிபாடு செய்வது வேளாண்மையின் சிறந்த தொல் தமிழர் மரபு.

என் மக்களின் மணவிழாவில் என் மொழியில் நிகழ்ச்சிகளைக் கேட்பதும், உணர்வதும் புது அனுபவமாகத்தான் இருந்தது.
 
மணமகன் மணமனைக்கு, சுற்றம் சூழ அழைத்து வரப்பட்டார். மூத்தோர் ஒவ்வொருவராக மலர் தூவி வாழ்த்தினர். “மாறிலா நிறை வளம் தரும் புகலியின்” எனத் தொடங்கும் சேக்கிழாரின் வரிகள் ஒலிக்க அரசாணிக்காலை வழிபட்டுக் காப்புக் கட்டினார். புதுச் சீலை வாங்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
 
அடுத்து தோழியர் சுற்றம் சூழ மணமகள் அழைத்து வரப்பட்டார். தாய்மாமன் அத்தை, பெற்றோர் மாலை அணிவித்து மலர் தூவி வாழ்த்தினர். கூடவே சுற்றமும். “பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க” எனும் திருவருட்பா ஒலிக்கத் தாய் மாமன் அத்தை இணைந்து காப்பு நாண் கட்டினர். புத்தாடை வாங்கிக்கொண்டு அவரும் தன் அறை சேர்ந்தார்.
 
சற்று நேரத்தில் தூய வெண்மையான ஆடையில் மணமகன் வந்தார். “வைகறை யாம் துயிலெழுந்து” எனத் தொடங்கும் ஆசாரக் கோவை ஒலிக்க… மணமனையில் தன் பெற்றோரை வழிபட, அவர்கள் மலர் தூவி வாழ்த்தினர்.

“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட” எனும் திருஞானசம்பந்தரின் பண் அரங்கமெங்கும் ஒலிக்க, முன்னே நாத்துணையார் மலர் தூவி நடக்க அதன்மேல் அடியெடுத்து கையில் விளக்கேந்தி மணமகள் மனை வந்து சேர்ந்தார். விளக்கை அரசாணிக்கால் அருகே வைத்தார். நாத்துணையார் (நாத்தனார்) “திரு விளங்கச் சிவயோக சித்தி எல்லாம் விளங்க” எனும் ஆறாம் திருமுறை ஒலிக்க அந்த விளக்குக்கு வழிபாடு இயற்றினார். பின்னர் மணமகள் பெற்றோருக்கு வழிபாடு இயற்றினார். “ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்” யெனும் நாவுக்கரசரின் நான்காம் திருமுறைப் பண் ஒலிக்க வாழ்த்துப்பெற்றார்.
 
மணமக்கள் இருவரும் இணைந்து நின்று “வான் பொய்ப்பினும் தான் பொயாக் காவிரி” எனும் பாடல் முழங்க தாய்த்திரு தமிழ் மண்ணை வணங்கி, தமிழைப் போற்றி வணங்கி, தென்புலத்தாரை வணங்கி, எண்குணத்தான் தாளை வணங்கி மரபின் முறைமையைக் கழித்தனர்.
 
பின்னர் “கையடை ஓம்படை” நடத்தப் பெற்றது. “தாரை வார்த்தல்” தமிழ் மரபு இல்லை. அது அஃறிணை பொருள்களுக்கானது. மனிதர்களுக்கு இல்லை. மணமகளின் கைப்பிடித்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தில் இணைப்பது “கையடை ஓம்படை”. (ஓம்படைக் கிளவி கூட தமிழில் இருக்கிறது.)

எல்லோரும் பார்த்திருக்க மணமகளின் தாயும் தந்தையும் அவளது கைப்பிடிக்க, ஐயா இமையவனதுபெருங்குரலில் “"கற்பெனப் படுவது கரணமொடு”” என தொல்காப்பியமும், “உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்” எனத் திருவாசகமும் ஒலிக்க, மணமகளின் பெற்றோர் மணமகன் மற்றும் அவரது பெற்றோர் கைகளில் மணமகளின் கைகளைத்தர, கணீரென்று நாச்சியார் திருமொழியின் “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத” வரிகள் கேட்க; மணமகளின் தாயின் கண்களில் கண்ணீர் நிறையக் கண்டேன். 
 

 
எத்தனையோ மணவிழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். மணமேடையில் இப்படியொரு காட்சியைகண்டதில்லை. காதில் விழுந்த தமிழ், தாயின் உள்ளத்தில் பாய்ந்து கண்ணீராக மாறியதோ? கண்டிப்பாக சமற்கிருத மந்திரங்களின் போது இது நிகழ வாய்ப்பே இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். ஏழெட்டு பேருக்கு மேல் கண்ணைத் துடைத்துக் கொண்டார்கள். நானும் தான்.

பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டுகளில் ஜானகியைப் பார்த்தேன். மேலும் படித்து வளர்ந்து இன்று மணப்பெண்ணாக, என் கண்ணும் ஆனந்தக் கண்ணீரில் கலங்கியது. 
 
அன்பானவர்களே உங்கள் பிள்ளைகள் பேரக்குழந்தைகளின் திருமணத்தை உங்கள் மொழியிலேயே நடத்துங்கள். விழாக்கள் எதுவானாலும் தமிழிலேயே நடத்துங்கள். ஆனந்தக் கண்ணீர்தான் பெரும் வாழ்த்து.
 
வந்திருந்தவர்களின் கையில் நெல்லும் பூக்களும் தரப்பட்டது. அரிசியிட்டு வாழ்த்துவது தமிழ் மரபல்ல. நெல்தான் முளைக்கும் செழிக்கும். அரிசி முளைக்காது. நெல் தூவி வாழ்த்துவதே தமிழ் மரபு.
 
மணமனை சுற்றத்தால் நிறைந்தது பின்னணியில் “தமிழுக்கும் அமுதென்று பேர்” எனும் பாவேந்தரின் பாடல் நாதசுரத்தில் வெளிவந்து காற்றில் கலந்தது. “நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க” எனும் ஐங்குறுநூற்றின் பாடல் ஒலிக்க ஐயா பெ.மணியரசனும் , இலட்சுமி அம்மாவும், இழையணி எடுத்துத்தர, தமிழமுதன் ஜானகி கழுத்தில் சூட்ட வாழ்க பல்லாண்டு என எல்லோரும் வாழ்த்த எங்கும் மங்கலம் நிறைந்தது.
 
எல்லோரது கைகளிலும் இன்னும் இருக்கின்றன வாழ்த்துப் பொருள்களான மலரும் நெல்லும். “அருள்கூர்ந்து யாரும் நெல்மணிகளை எடுத்து வீசாதீர்கள். வீசுவது வாழ்த்தல்ல” என்ற ஐயா இமையவன் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. மேடையில் இருந்தப் பெரியவர்களின் வாழ்த்தைப்பெற்றுவிட்டு மணமக்கள் அரங்கத்தில் இருந்தவர்களை நோக்கி வந்தார்கள். அருகே வர வர எல்லோரும் கையிலிருந்த நெல்லும் மலரும் தூவி வாழி வாழி என வாழ்த்தினார்கள். அகநாறூறில் 136வது பாடலை இயற்றிய “விற்றூற்று மூதெயினனார்” எனக்கு அருகில் நின்றுகொண்டிருப்பது போன்ற உணர்வு எழுந்தது. எத்துணை மகிழ்ச்சியாக, சமூக இணைப்போடு இணக்கத்தோடு தமிழினம் வாழ்ந்திருக்கிறது. காலமாற்றம் நம்மை எங்கேயோ கொண்டு நிறுத்தியிருக்கிறது. மீட்டெடுப்போம்.
 
மேடையில் வாழ்த்தரங்கம் தொடங்கியது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழ் ஒலிக்ககாரணமான ஐயா பெ.மணியரசன், தோழர் கி.வெ., தக்கார் அவையத்தின் ஒருங்கிணைப்பாளர் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன், தோழர் மூ.த. கவித்துவன், பாவலர் இராசாரகுநாதன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க அவர்களோடு நானும்.
 


மணவிழாவில் பரிசாக வழங்க, மாப்பிள்ளை முத்துக்குமாரசாமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழர் மரபில் திருமணங்கள் எப்படியிருந்தன என்ற நோக்கில் “பல்லாயிரங்காலத்துப் பயிர்” என்ற குறுநூலை எழுதியிருந்தேன். அதை மேடையில் மணமக்கள் சார்பில் பரிசாக வழங்கினார் ஐயா மணியரசன் அவர்கள். அந்நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. செவ்விலக்கியங்களிலிருந்து தமிழர் வாழ்வியல் மீட்டெடுப்பு என்ற நோக்கில் தொடங்கப் பெற்ற “பாவாணந்தம்” குழுமத்தின் முதல் வெளியீடாக இந்த நூல் அமைந்தது.


 
பல நாள்கள் கழித்துப் பார்த்த மூத்தோரின் இன்முகங்கள், நட்புகள். தோழமைகள். தமிழ்மணம் வீசிய பெருமழைக்கால திருமணம். பாவாணந்தத்தின் முதல் வெளியீடு. தோழர்களின் அன்பு மழை. கோவையில் உடன் பணியாற்றிய இளையவர்களின் மகிழ்ச்சியான பேச்சு. பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்களுடனான உரையாடல், தங்கியிருந்த நண்பரின் வீடு என, “காவிரிக்கரை” என் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று என மறுபடியும் பதிவு செய்துவிட்டுச் சென்றது காலம்.
 
==========================
என்றென்றும் அன்புடன்
சிராப்பள்ளி ப.மாதேவன்
22-11-2020
==========================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்