Sunday 6 December 2020

நீலமலைக் காதல்எயினி, சளவோலையால் வேயப்பட்ட குடிலின் படலை மெல்லத் திறந்தாள். கீழை வானத்தில் கதிரவனின் தலை தெரிந்தது. வெளியே விரிந்துகிடந்த நீலமலை தன் பெயருக்கேற்ற வண்ணத்தில் ஆடை கட்டியிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் நீலக்குறிஞ்சி பூத்துக் குலுங்கியது. மெல்லிய மழைத்துளிகள் பூக்களின் மேல் ஒட்டியிருந்தன. குளிர் காற்று வீசியது. மெல்ல நடந்து குடிலின் அருகே இருந்து ஒரு குறிஞ்சிமலரைப் பறித்தாள். போர் அயரும் முருகனின் கையிலிருந்த மணிபோல இருந்தது அது. நேற்று மாலை…

“ஆறு தடவை குறிஞ்சி பார்த்துவிட்டேன். எனக்கும் வயதாகிறது. நாடுகாவலை வேறு யாரேனும் எடுத்துக்கொண்டால் சிறப்பு.” என்று நாட்டுக் கூட்டத்தில் மூப்பன் சொன்னது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

குறிஞ்சிதான் இந்த மலையின் சிறப்பு. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிதான் எத்தனை அழகு, அவனைப் போலவே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.“அடியேய் என்ன அங்க ஒத்த பூவ கைல வச்சு வெறிச்சு வெறிச்சு பாக்குற. அதுதான் மலை பூராவும் பூத்துக்கிடக்கிறதே… ம்…” என்ற குரல்கேட்டு தலையுயர்த்தினாள் எயினி. வள்ளி வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்தபின் தான் எயினியின் களிப்பு வள்ளிக்குப் புரிந்தது.

“என்னடி மகிழ்ச்சி அருவியா பொழியுது போல”

“இல்லையே… இந்த பூவின் தேனை உறிஞ்சினேன். அதன் சுவையின்பம் ஒருவேளை என் முகத்தில் தெரிகிறதோ என்னவோ?”


“ம்… பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என் கள்ளி. எங்கே பார்ப்போம்” என்றவாறு, சுற்றிலும் பறந்துகொண்டிருந்த வண்டுகளுக்கு இடையே கை நீட்டி, ஒரு பூவைப் பறித்து அதன் கரிய அடிப்பாகத்தை வாயில் வைத்து உறிஞ்சினாள். பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருப்பின் சுவை நாவில் படர்ந்தது.

“இது நல்ல சுவைதான். ஆனாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பூக்கிறதால இதை ரெம்பவே கொண்டாடுறாங்க” என்றாள்.

“அது போல வேற சிலவும் இருக்கே…. வந்து…”

“என்ன பொதிஞ்சு பேசுகிறாய் எயினி”

“சே..சே.. ஒண்ணுமில்ல. அதோ.. அந்த கவர்விட்ட இடத்தில் இருக்கும் தேன்கூட்டைப் பார்”

சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த நெடிய வேங்கை மரத்தைப் பார்த்தாள் வள்ளி. தேனீக்களின் ரீங்காரத்துக்கிடையே அழகிய பெரிய தேனடை. அந்தப் பெருங்கிளையைச் சுற்றி ஓயாது சிறகசைத்துப் பறந்து கொண்டிருந்தன வண்டுகள்.

“போடீ.. இவளே. இதுவா அந்த சில…”

“என்னடி அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டாய். நீ குடித்த பூவில் எவ்வளவு தேன் இருந்தது. ஒரு சிறு துளி தானே”

“ம்”

“அப்ப அந்த மரத்துல இருக்கிற பெரிய கூட்டைக் கட்ட இந்த ஈக்கள் அங்குமிங்குமாக எத்தனை முறை பறந்திருக்கும்.”

“அட… நீ கூட அழகாகப் பேசுகிறாயடி”

“ம். இன்னும் கேள். ஆண்டுகள் பல காத்திருந்து பூத்த மலர். அதிலிருக்கும் ஒரு சிறுதுளியினும் சிறிய தேன். அதைச் சேகரித்து வைத்தக் கூட்டிலிருந்து நாம் எடுக்கிறோம். அதுவே பல காலத்திற்கு மருந்தாக, விருந்தாக, தேறலாக எப்படியெல்லாம் நம்மோடு நிறைந்திருக்கிறது பார்த்தாயா? இப்படித்தான் சேர்த்து வைத்து சேர்த்து வைத்து….”

“அடடா… உன் பேச்சு கபிலரின் பாட்டைப் போல நீள்கிறதே. என்ன காரணம்? சொல்லடி என்ன சேர்த்து வைத்தாய்?”

“அதுவா.. அதோ பார்.. வள்ளி. தொலைவில் தெரியும் அந்த மலையைப் பார்”

“அடியேய்.. நான் பிறந்ததிலிருந்து காலையில் எழுந்ததும் இந்த மலையிலிருந்து அந்த மலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதுக்கென்ன இப்ப?”

“அது இல்லடி என் வள்ளிப் பெண்ணே. நம்முடைய மலை, அதிலிருந்து வீழும் அருவி, அது நீரோடையாகி நடக்கும் பாதை, அதோ அங்கே தெரியும் மலையுச்சிகள், அங்கிருந்தும் வரும் ஆறுகள். எல்லாமுமாகச் சேர்ந்து அதோ அந்த அழகிய பள்ளத்தாக்கில் ஓடி சிறக்கின்றன. பாரேன் நீண்டு கிடக்கும் இந்த உலகத்தை. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மண்ணும் மரங்களும் பறவைகளும் விலங்குகளும். உலகம் எவ்வளவு பெரியது பார்த்தாயா?“

“ஆமா.. ரெம்பப் பெரிசுதான். அதுக்கு என்ன?”

“ம்.. இந்த உலகத்தை விட பெரியது எதுன்னு சொல்லு பாக்கலாம்?”

“உலகத்த விடப் பெரிதா? தெரியலயே டீ”

“சரி அதை விடு. இதோ மேலே பார். இவ்வளவு பெரிய உலகத்தையே கவிழ்ந்து மூடியிருக்கிற உயரத்திலிருக்கிற வானத்தைப் பார். அதை விட உயரம் என்னன்னு தெரியுமா?”

“தெரியவே தெரியாது”

“போடீ மண்டு. ஒண்ணுமே தெரியல உனக்கு. இன்னொண்ணு கேட்கிறேன் அதுவாவது தெரியுதா பாக்கலாம்”

“கேட்கவில்லையென்றால் விடவா போகிறாய். கேளு. கேளு. ம்..”

“இந்த அருவியெல்லாம் ஓடி ஓடி ஆறாகி எங்கே போய்ச் சேரும் தெரியுமா”

“தெரியும் தெரியும்… கடல்… கடல்..” கைகொட்டினாள் வள்ளி.

“அந்தக் கடலைவிட ஆழமானது என்னண்ணு தெரியுமா?

“ஐயோ அப்பா…. உன்னோட முடியலடீ.. கடல் ரெம்ப ஆழமானதுண்ணு அப்பா சொலிருக்காரு. அதையும் விட ஆழம்… ம்… எல்லாத்துக்கும் நீயே விடை சொல்லிரு எயினி. இன்னும் கேள்வி கேட்காதே.”

“வந்து… உலகத்த விட பெருசு, வானத்தை விட உயரம், கடலை விட ஆழம்… ம்.. வந்து… “

“என்னண்ணு சொல்லுடி… இல்ல நாண் கெளம்புறேன்” என்று நகர்ந்தாள் வள்ளி.

“மனிதர்களின் மனதுக்குள் இருக்கும் காதல்” சொல்லிக்கொண்டே நகரவிடாமல் தன் கையைப் பிடித்த எயினியின் உள்ளங்கைச் சூட்டை உணர்ந்தாள் வள்ளி.

“ஏய்.. கள்ளி யாரடி அவன்?... உன்னுடைய குறிஞ்சிப்பூ.”

சற்றுத் தொலைவிலிருந்த ஒரு மலையுச்சியைக் கைகாட்டினாள் எயினி. முகமெங்கும் காதலின் வெளிச்சம்.

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”
(குறுந்தொகை – 3, பாடியவர் - தேவகுலத்தார்)

“ஓ.. அந்த மலை நாடன் வேலனா? அந்தக் குறிஞ்சி உன் மனதுக்குள் எப்போதோ பூக்க; சிறுகச் சிறுக தேனாய் நினைப்பு அவ்வப்பொழுது சேர்ந்து வர.. காதல் கூடு கட்டியிருக்கிறாயா செல்லமே. வா. வா. அம்மாவிடம் சொல்கிறேன்” என்று வள்ளி கிளம்பினாள்.

“வேண்டாமடி வேண்டாம்”….என்றாளே தவிர இம்முறை வள்ளியின் கையை பிடித்துக்கொள்ளவில்லை.

வள்ளி நடக்கத் தொடங்கினாள். அவள் கால்கள் பட்டுச் சிலிர்த்துக் கொண்டன குறிஞ்சிமலர்கள். மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வீசுகிறது குறுந்தொகையின் மணம்.

======================================

தாவரவியல் கூறுகளின் படி ஒரு குறிஞ்சித் தாவரத்தில் சராசரியாக 82 மஞ்சரிகளும் ஒவ்வொரு மஞ்சரியிலும் சராசரியாக 24 பூக்களும், அதாவது, ஒரு தாவரத்தில் சராசரியாக 1,768 பூக்கள் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பூவிலும் ஏறத்தாழ 4 மி.லி. தேன் உள்ளது. அதன்படி ஒரு தாவரத்திலிருந்து 7,072 மி.லி. அல்லது 0.007 லிட்டர் தேன் உருவாக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. எனவே, குறிஞ்சி ஒருமித்துப் பூக்கும் காலத்தில் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.


இது தொடர்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களின் குறிப்புகளின்படி, குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேனீக்களின் படை மிகவும் அதிகமானதாக இருந்ததாக அறியப்படுகிறது 1922ஆம் ஆண்டு குறிஞ்சிப் பூத்தல் காணப்பட்ட காலத்தில் ஏறத்தாழ 28 தேன் கூடுகள் ஒரே ஒரு யூக்கலிப்பிட்டசு மரத்தில் காணப்பட்டதாகவும் அதற்கு அருகிலிருந்த பாறையில் 28 தேன் கூடுகள் காணப்பட்டதாகவும், 1935-ம் ஆண்டு எழுதப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் (Journal of the Bombay Natural History Society) எம்.இ. ராபின்சன் என்பவர் சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார். இதேபோன்று அடுத்தடுத்த 12-வது ஆண்டுகளும் 1934 வரை (1850, 1862, 1874, 1886, 1898,1910, 1922, 1934) குறிஞ்சியின் ஒருமித்த பூத்தல் நடைபெற்றதை ராபின்சன் பதிவுசெய்துள்ளார்.

==============================================

செவ்விலக்கியங்கள் வெறும் பாடல்களல்ல…

சிராப்பள்ளி ப.மாதேவன்

06-12-2020

================================

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்