Tuesday 31 August 2021

பெருந்தமிழர் வ.உ.சி 150

 


. ====================
. பெருந்தமிழர் வ.உ.சி
. ====================

தென் பாண்டித் திரு நாட்டில்
ஒட்டப்பிடாரப் பேரூரில்
உலகநாதன் பரமாயி இணையருக்குப்
பெருமகனாய் பிறந்த செம்மல் வஉசி.
மாந்தனாய் பிறந்து வேந்தனாய் வளர்ந்த
மாமன்னன் எங்கள் வஉசி.

மண்ணிலே பிறந்த முத்து
மலையிலே விளைந்த பவளம்
கடலிலே பரந்த வீரம்
வானமே வணங்கிய நேர்மை
தெற்கிலே எழுந்த இமயம்
வடக்கிலும் பாய்ந்த தாமிரபரணி
கிழக்கே நல்ல கப்பல் ஓட்டி
மேற்கை அசைத்த பெருந்தமிழன்.

முன்னைத் தமிழர் நாவாய் ஓட்டி
பன்னெடுங் காலம் மண்ணுல கெங்கும்
பரவிக் கிடந்த தமிழர் வணிகத்தின்
நன்னாள் மீண்டும் கொணர்ந் திங்கே,
சுரண்டும் வெள்ளையர் வணிகம் அறுத்திட
மண்ணின் மக்கள் விடுதலை பெற்றிட,
கண்கள் இரண்டிலும் கருமம் நிறைத்து
எண்ணிய செயலைத் திண்ணமாய் முடித்து
வந்தவன் அஞ்சிட மீண்டும் கலத்தை
முந்நீர் நடுவே ஓட்டிய தமிழன்.
மூடிய வானில் இருளை அகற்ற
மண்ணில் தோன்றிய மாபெரும் கதிரவன்.

மண்ணைத் திருடி பொன்னைத் திருடி
மக்களைத் திருடிய வெள்ளையனை
என்ன செய்தால் அடங்குவானென்று
எண்ணித் துணிந்தார் ஒருவேலை.
தன்னுடல் தன்பொருள் தன்திறன் ஈந்து
மண்ணின் மக்களைத் தன்னோடு சேர்த்து
தொழிற்சங்கம் இங்கு அமையும் முன்பே
உழைக்கும் மக்களின் உரிமைக்குரலை
உலகம் கேட்க உறுதுணை செய்தார்.
அஞ்சினர் வெள்ளையர் அலறி ஓடினர்
நடுக்கடல் சென்று கப்பலின் தங்கினர்
வென்றது போராட்டம் கிடைத்தது உரிமை
அந்த ஓர் ஆலை மட்டுமல்ல
ஆங்கிலேய ஆலைகள் அனைத்திலுமே!

விடுவானா வெள்ளையன்.
வேளைவரக் காத்திருந்தான்.
கிட்டியது; கைது செய்தான்
எட்டக் கொண்டு சென்றான்.
காலனி ஆதிக்கத்தின்
ஆணிவேர் அசைத்த,
அடலேறு சிதம்பரத்தை அலைக்கழித்தான்.

ஆனால் எங்கள் மன்னன்;
எரிமலைகள் இளைப்பாறிக் கொண்டிருந்த போது
தனிமலையாய் எழுந்து கடல்கடைந்த பெருமலை.
தேவர்கள் தீண்ட அஞ்சிய பேரமிழ்து.
பெருங்காற்றில் சாயாத கரும் போந்தை
விழுதுகள் மறந்தபோதும் வீழாத ஆலமரம்.

மண்ணின் முகவரி
மொழியின் பெரு வியப்பு
மாந்தருள் மாணிக்கம்
நெடுநு கத்துப் பகல்போல
நடுவு நின்ற நன்நெஞ்சினோன்.
வறுமை வாயிலில் நின்றபோதும்
செழுமை மாறாத செம்மல்
சிதம்பரனார் புகழ் வாழி யவே

==============================
வணக்கத்துடன்
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
31-08-2021
==============================



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்