Saturday 7 August 2021

நான் பேராசைக்காரன்


 

 நான் கொஞ்சம் பேராசைக்காரன். பார்க்கும் எல்லா நொடிகளையும் எனக்குள் பதிவு செய்துவிட விரும்புகிறேன். கரைந்து போன நிமிடங்களில் உட்கார்ந்து பார்க்கிறேன். நம் பாட்டனும் பாட்டியும் அவர்தம் அம்மையும் அப்பனும் வாழ்ந்து முடித்த மணித்துளிகளை மறுபடியொருமுறை உயிர்ப்பிக்கப் பார்க்கிறேன். இயன்றால் அவற்றை வெளியே சொல்லிவிடவும் எத்தனிக்கிறேன். ஏனென்றால் எல்லா நொடிகளிலும் இந்த உலகம் உயிர்ப்போடுதான் இருந்து கொண்டிருக்கிறது. அந்த உயிர்ப்பின் சாறு என் எழுத்துகளில் நிறைந்துவிட ஆசைகொள்கிறேன்.

 

சின்னக் கணக்கு ஒன்று போட்டுப் பார்ப்போமா ஒருவேளை உங்களில் ஏராளமானோர் வியந்து போகலாம். 

உங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நாற்பது வயதிருக்கும் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அம்மா, அப்பா இருவரும் உங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள். இது போன்றே உங்கள் அப்பாவுக்கு இருவர். அம்மாவுக்கு இருவர். இப்படிப் பார்த்தால் கடந்த 120 ஆண்டுகளில், அதாவது நான்கு தலைமுறையில் வாழ்ந்தவர்கள் 30 பேர். இதில் இன்று, அம்மா, அப்பா, தாத்தா பாட்டிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக வைத்துக் கொண்டால்; இறந்து போன நேரடிச் சொந்தங்கள் 24 பேர். பத்துத் தலைமுறை, 300 ஆண்டுகள் எனக் கொண்டால் இறந்து போன நேரடிச் சொந்தங்கள் 2040 பேர். இருபது தலைமுறைக்கு 600 ஆண்டுகள் என்றால் 20,97,144 (இருபது இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து நூற்று நாற்பத்திநான்கு) பேர். 

அப்படியே பெரியகோயில் கட்டப்பட்ட காலத்திலிருந்து பார்த்தோமானால் ஏறத்தாழ 214,74,83,640 (இருநூற்றுப்பதிநான்கு கோடியே எழுபத்து நான்கு இலட்சத்து எண்பத்துமூவாயிரத்து அறுநூற்று நாற்பது) பேர் உங்களது நேரடிச் சொந்தமானவர்கள் வாழ்ந்து முடித்து மறைந்து போயிருக்கிறார்கள்.

என்ன தலை சுற்றுகிறதா? உங்களுக்கு மட்டுமே இஃது என்றால் உங்கள் மகனுக்கு / மகளுக்கு, உங்கள் கணவனோ / மனைவியோ அவர்களின் தலைமுறை எண்ணிக்கையையும் சேர்த்தால்அப்பப்பா.. ஏறத்தாழ 400 கோடிக்கும் மேலான சொந்தங்கள். அதில் பாதிப்பேர் பெண்கள். எத்தனை கதைகள். எவ்வளவு மகிழ்ச்சி. எவ்வளவு கண்ணீர். எவ்வளவு நல்ல கூறுகள். அனைத்தையும், காலங்கள் தாண்டி உங்களுக்குக் கடத்தி இருக்கிறார்கள். அவை உங்களின் பெருஞ்சொத்து.

அதில் முகாமையானது தமிழ். ஏறத்தாழ 3.5 x e100 நேரடியான உங்கள் உறவுகள் பேசிப் பழகி, செழித்த மொழி. மேலே இருக்கும் 3.5 x e100 ல் உங்கள் மூத்த பாட்டனுக்குக் குழந்தை பிறந்து அம்மாஎன்று அழைத்தபோது, குமரியிலிருந்து சிந்துவரை வேறு எந்த மொழியும் பிறந்திருக்கவில்லை. அத்தனை சிறப்புடையது உங்கள் தலைமுறை வழக்கு. இதுபோலவே அவருக்கும், இவருக்கும், எனக்கும். இப்படி, கோடானுகோடி உங்கள் தாய் தந்தை வழி நேரடிச் சொந்தங்கள் கையளித்த தமிழை உங்கள் பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்குப் பரிசளியுங்கள். இந்தக் காலகட்டத்தில் இதை என்னுடைய பேராசையாகவே பார்க்கிறேன். ஒருவேளை உங்களுக்கும் கூட

 

*மீள் பதிவு

======================
என்றென்றும் அன்புடன்,
07-08-2020
======================
ஓவியம் :- தம்பி மறைமலை வேலனார்

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்