Sunday 3 April 2022

போக்கில்

 


கடந்த பங்குனி உத்திரத்திற்கு ஊருக்குச் சென்றிருந்தேன். தமிழ்ப் பேராசிரியர் ஒருவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. முன்பு ஊருக்குச் சென்றிருந்தபோது எனது நூல்களை அவரிடம் கொடுத்திருந்தேன். ஊர் குறித்து சிறிது பேசிவிட்டு எனது நூற்களின் பக்கம் பேச்சு திரும்பியது. மாலைக் காற்றும் ஏரிக்கரையும் சூழலை இனிமையாக்கின. பேச்சின் ஆழம் கூடியது.

"நீ எப்படி பொறியியலிலிருந்து இலக்கியத்திற்குள் நுழைந்தாய்? ஏன்?"

"பள்ளிப் பருவத்திலிருந்தே நூலகத்திற்குச் செல்லும் வழக்கம் உண்டு"

"தெரியும் தெரியும்... இதையே எத்தனை நாள் சொல்லிக்கிட்டிருப்ப. ஆழமாப் பேசு" 

"ம்.. முதலில் கண்ணதாசனைப் படிக்கின்றபோது நானும் எழுத வேண்டும் என்ற பேராசை பிறந்தது. காதலையும் கம்மூனிசத்தையும் தாண்டி எழுத சில ஆண்டுகள் ஆனது."

"ம்"

"இடையில் மறைமலை எனும் பெருமலையில் தத்தித் தத்தி ஏற பெருமரங்களும் வான் வெளியும் பாயும் அருவிகளும் அருகிருப்பதை அறிந்தேன். பேரருவிகளில் நீராட, செங்குத்துப் பாறைகளில் ஏறியிறங்க, திரைப் பாடல்கள் தொடங்கி பல பாடல்களைப் பிரித்தறிந்து மூளைக்கு வலு சேர்த்தேன்."

"அப்பெல்லாம் நீ இப்படி ஒண்ணும் எழுதின மாதிரி தெரியல்லயே"

"ஆமா.. ரெண்டு மூணு கதை எழுதினேன். விகடனுக்கு அனுப்பினேன். திரும்பி வந்திருச்சு"

"அப்புறம்..."

"அப்புறம் பெருசா ஒண்ணும் செய்யல. பொறியியல் படிச்சு அதுலயே கவனம் கொண்டு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். காலம் போயிருச்சு. ஆனா அந்தத் துறையில் எனக்குக் கிடைத்த அனுபவம் தான் பின்னாடி என்ன இப்படி எழுத வைக்கும் என்று நான் நினைத்ததில்லை."

"அப்படி என்ன அனுபவங்கள்?"

"நிறைய.. களப்பணிகளிலிருந்து விலகி கம்பியூட்டருக்கு மாறி வேலை செய்த பதின்மூன்று ஆண்டுகள், செவ்விலக்கியம் நோக்கி என்னை வீறுகொண்டு நகர்த்தின. கூடவே அருகே இருந்த திருச்சிராப்பள்ளி மைய நூலகமும்."

"கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன்"

"பொறியல் கற்றுக் கொடுக்கையில் நம்மை அறியாது நம்மிலிருந்து வெளிப்படும் மரபறிவு, பகுத்து வேலை செய்து ஒருங்கிணைந்து முடிவு அறிவிக்கும் நுட்பம், வேலைத்திறன் குறித்தான உரையாடல்கள், கலைச் சொற்கள், உலகெங்கும் விரவிக்கிடக்கும் தமிழ்ச் சொற்களின் பயன்பாடு, வடிவமைப்பு, இரும்பு செம்பு பயன்பாடு, வணிகம், சந்தைப் படுத்தல் உத்தி என என்னை செவ்விலக்கியத்துக்குள் இழுத்து வந்தக் காரணிகள் எண்ணிலடங்கா."

"ஓ...  உன்னுடைய 'பொருநராற்றுப்படை கதையுரை' படிக்கும் போது உன் அனுபவம் புரிகிறது."

"மிக்க நன்றி"

"நன்றி இருக்கட்டும். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. சிலவற்றிற்காவது பதில் சொல். அது எப்படி 'போக்கில்' குறித்து முடிவுக்கு வந்தாய்."

"அதுவா..  

 'போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்

வாக்குபு தரத்தர வருத்தம் வீட

ஆர உண்டு பேர்அஞர் போக்கிச்

செருக்கொடு நின்ற காலை' 

என்ற வரிகளைப் படிக்கும் போது போக்கில் என்பது ஒரு மதுவகை என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அறிஞர் பொ.வே.சோமசுந்தரனார் உரையில், 'போக்கு என்பது வருத்தத்தைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. போக்கில் என்பது வருத்தம் போக்கிக் களைப்புத் தீர்க்கும் ஒருவகை உணவு. இக்காலத்தில் விருந்துணவுக்கு முன்னர் தரப்படும் பழச்சாறு போன்றது எனலாம். இந்தப் போக்கில் என்னும் சுவையுணவைப் பொற் கிண்ணங்களில் மகளிர் தந்தனர்.' என்றும், அறிஞர் கி.வ.சகநாதன் அவர்கள் போக்கில் என்பதை குற்றமில்லாத எனும் பொருளில் 'குற்றமில்லாத பொற்கலம் நிறைய கள்ளை வார்த்துத் தந்தார்கள்' என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

"சரி.."

"அவை எனக்கு நிறைவைத் தரவில்லை. பத்துப்பாட்டு ஆராய்ச்சி எழுதிய மா.இராசமாணிக்கனார் அது ஒரு வகை மது என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஆனால், அகராதிகளில் எங்கும் 'போக்கில்' என்ற சொல் இல்லை. நெடுநாட்களாக அது குறித்த எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. கடந்த கொரோனா தடைக் காலத்தில் இணைய வழி உரையாடலில் பொருநராற்றுப்படை குறித்துப் பேசினேன். நிறைய நண்பர்கள் பல பகுதிகளிலிருந்தும் இணைந்திருந்தார்கள். விளக்கத்தினிடையே 'போக்கில்' என்பது கண்டிப்பாக ஒரு மது வகைதான் என்று உணர்கிறேன். ஆனால் அது குறித்து வேறு செய்தி எதுவும் இல்லாத காரணத்தால் முடிவுக்கு வர இயலவில்லை என்று கூறினேன். இடையே ஒரு குரல் ' ஐயா போக்கில் என்றால் சாராயம் போல காய்ச்சி வடிக்கப்படும் ஒரு மது' என்றது. 

கல்லணையின் அருகில் வேங்கூரிலிருக்கும் நண்பர் தியாகுதான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். சோணாட்டிலிருந்து போக்கில் குறித்த குரல் நம்பிக்கை அளித்தது. 'சொல்லுங்கள் தோழர்' என்றேன். ஐயா எங்கள் பகுதிகளில் போக்கில் என்ற சொல் இன்னும் வழக்கிலிருக்கிறது என்றார். 

என் உள மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஐயா தேவநேயப் பாவாணர் சொன்னது போல இலக்கியம் எழுதப் பெற்ற இடம் சார்ந்த வழக்குச் சொற்களை அறிந்தாலன்றி பொருள் தேடுதல் கடினமே. 'போக்கில்' என்ற இந்தச் சொல் அகராதியில் ஏற்றப்பட வேண்டும் என்பதே எனது அவா. 

ஆனால் இதற்கான பகுப்பாய்வுச் சிந்தனையை எனக்குள் விதைத்தது பொறியியலே. அதன் பின் தான் பொருநராற்றுப்படை கதையுரையில் இப்படி எழுதினேன்.

"இரு பெண்கள் என்னை நோக்கி வந்தார்கள். ஒரு பெண்ணின் கையில் பழங்களும் இனிப்பும் நிறைந்த தட்டு இருந்தது. இன்னொருத்தி ஒரு வடிவான குடுவையை ஒரு கையிலும், பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களை மறு கையிலும் பிடித்துக் கொண்டு வந்தாள். எனக்கும் பசியெடுக்கத் தொடங்கியிருந்தது. கொண்டுவந்த பழத்தட்டை ஒரு முக்காலியில் வைத்துவிட்டு...

பொன் கிண்ணத்தை இடது கையில் பிடித்துக் கொண்டு அதில் குடுவையைச் சரித்தாள். மணம் கமழ, அதிலிருந்த போக்கில் கிண்ணத்தில் நிரம்பியது. 

அன்புடன் என் வாயருகே நீட்டினாள். ஆசையோடு வாங்கி அருந்தினேன். கிண்ணத்தைக் கீழே வைக்கும் முன்பாகவே மீண்டும் போக்கிலை வார்த்தாள். இரண்டு கிண்ணம் அருந்தி முடிக்க,  நெடுந் தொலைவு நடந்த காலின் வருத்தம் சிறிது குறைவது போன்று இருந்தது. இன்னும் கொஞ்சம் அருந்தலாமா என்று நான் எண்ணும் போதே, கிண்ணம் மறுபடியும் நிறைந்து வழியும்படி வார்த்தாள் அவள். மதமதப்பும் பசியும் கொண்டு பழங்களையும், போக்கிலையும் மற்ற உண்ணும் பொருள்களையும் ஆசைதீர உண்டேன். 

இப்படியே அன்றைய நாள் முழுவதும் போயிற்று. அவன் வரவில்லை. இரவும் வந்தது. போக்கில் அருந்திய மயக்கமும், உண்ட களைப்பும் சேர்ந்து உறக்கம் என்னைத் தழுவத் தொடங்கியிருந்தது. பணிப்பெண்களும் அதைக் கவனித்து விட்டார்கள் போலும். மெல்ல என்னை அழைத்ததுச் சென்றார்கள்.

போக்கில் பொலங்கலம் நிறையப் பல்கால்

வாக்குபு தரத்தர வருத்தம் வீட

ஆர உண்டு பேர்அஞர் போக்கிச்

செருக்கொடு நின்ற காலை ..."

இதற்கு தம்பி மறைமலை வேலனார் சிறப்பனதொரு படமும் வரைந்து கொடுத்தார். பார்த்தாயா" 

"ஆம். அப்புறம் கரிகாலன் அரண்மனையின் குளிரூட்டும் வசதி (AC) குறித்து... கல்லணை குறித்து நீ சொல்லியதெல்லாம் புதிய செய்தியே. அதெப்படி? எங்கேயடா பெற்றாய் இந்த அறிவை?"

"அடேய் பேராசிரிய நண்பா... நீயுமாடா. நான் ஒரு வழிப்போக்கன். சிற்றூரில் பிறந்து, வேளாண் குடிகளோடு உழன்று, பழ மரபுகளோடு மகிழ்ந்து வாழ்ந்த வாழ்க்கையும், ஊரூராய் அலைந்து பெற்ற பட்டறிவும், கற்றதனால் கிடைத்த சிற்றறிவும், பேரறிஞர்கள் தொகுத்துவைத்த நூற்களும், என் மாணவர்கள் எனக்குள் விதைத்துச் சென்ற வினாக்களும் என்னை நகர்த்தியதில் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். செல்ல வேண்டிய தொலைவு மிகுதி."

"நானும் உன்னோடு பயணத்தில் இணையலாமா?"

"கண்டிப்பாக..."

முழுநிலவின் வெள்ளொளி எங்களைச் சூழ்கிறது. எட்டுகிற தொலைவில் கறுப்பு ஓவியமாய் தாடகை மலை. எங்கோ, உரசிக்கொள்ளும் வௌவால்களின் கீச்சொலி. மெல்ல விழிக்கிறது இரவு. நாங்கள் ஏரியிடம் விடைபெற்று நடக்கத் தொடங்குகிறோம்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்